செய்திகள்

மீனவர்கள் பிரச்சினையைப் பயன்படுத்தி மூன்றாம் தரப்பொன்று குளிர்காய முயற்சி! – இராதாகிருஷ்ணன்

Published

on

தமிழக மீனவர்களுக்கும், வடக்கு மீனவர்களுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள பிரச்சினையைப் பயன்படுத்தி மூன்றாம் தரப்பொன்று குளிர்காய முற்படுகின்றது. இதற்கு இரு நாட்டு அரசுகளும் இடமளிக்கக்கூடாது. இப் பிரச்சினையை விரைவில் சுமூகமாக முடிவுக்கு கொண்டுவரவேண்டும் – என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வீ. இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

நுவரெலியாவில் இன்று (05.02.2022) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

இலங்கையில் வடபகுதி மற்றும் இந்தியாவில் தமிழகம் ஆகிய பகுதிகளில் வாழும் மீனவ சமுதாயத்துக்கிடையிலான பிரச்சினை பூதாகரமாகியுள்ளது. இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழையும் இந்திய மீனவர்கள், எமது நாட்டு கடல் வளத்தையும், மீனவர்களின் உபகரணங்களையும் அழிப்பதாக வடபகுதி மீனவர்கள் குறிப்பிடுகின்றனர்.

தமிழகத்திலும் தமிழர்கள்தான் வாழ்கின்றனர். வடக்கிலும் தமிழர்கள்தான் வாழ்கின்றனர். எனவே, இதனை தமிழர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள முரண்பாடாக சிலர் பார்க்கின்றனர். எனவே, இவ்விவகாரத்தை நாம் மிகவும் அவதானத்துடன் அணுக வேண்டும். இப்பிரச்சினையைப் பயன்படுத்தி மூன்றாம் தரப்பொன்று குளிர்காய முற்பட்டால் அது பெரும் பிரச்சினையாக அமைந்துவிடும். எனவே, இரு நாடுகளினதும் அரசும், அமைச்சர்களும் இணக்கப்பாட்டு அடிப்படையில் இப்பிரச்சினையை தீர்த்துக்கொள்ள முன்வரவேண்டும்.

அதேவேளை, எமது கட்சியின் பதுளை பிரதேச சபை உறுப்பினர் சிவநேசன்மீது, நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தாக்குதல் நடத்தியுள்ளார். இச்சம்பவத்தை நாம் கண்டிக்கின்றோம். தோட்டப்பகுதியில் உள்ள காணியை பாதுகாக்க முற்பட்டதால்தான் அவர்மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. வடக்கு, கிழக்கில் காணிகள் அபகரிக்கப்பட்டதுபோல, மலையக பகுதிகளில் உள்ள காணிகளையும் கையகப்படுத்தும் முயற்சி எடுக்கப்படுகின்றது. இதனை தடுத்து நிறுத்த நாம் ஒன்றுபட வேண்டும்.” – என்றார்.

#SrilankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version