செய்திகள்

இலங்கையின் கரையோரப் பாதைகள் ஊடாக மோட்டார் சைக்கிளில் சுற்றுப்பயணம்

Published

on

இலங்கையின் கரையோரப் பாதைகள் ஊடாக இலங்கைத் தீவை சுற்றி 1380 km தூரத்தை 35 தொடக்கம் 40 மணித்தியாலங்களுக்குள் கடக்க இமையவன் என்ற இளைஞன் திட்டமிட்டுள்ளார் .

இது தொடர்பில் தெளிவுபடுத்தும் விசேட ஊடக சந்திப்பு யாழ். ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்றது.

இச் சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்

நாளை வியாழக்கிழமை காலை 5 மணிக்கு இலங்கையில் யாழ். மாவட்டத்தில் உள்ள துரையப்பா விளையாட்டு அரங்கில் இருந்து மோட்டார் சைக்கிளில் இப் பயணத்தை ஆரம்பிக்கவுள்ளார்.

இவர் இலங்கையின் கரையோரப் பாதைகள் ஊடாக இலங்கைத் தீவின் அண்ணளவாக 1380 km
தூரத்தை 35 தொடக்கம் 40 மணித்தியாலங்களுக்குள் பயணம் செய்து மீண்டும் யாழ். துரையப்பா விளையாட்டு அரங்கத்தை எதிர்வரும் வெள்ளிக்கிழமை வந்தடைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

கொரோனா காரணமாக பாதிக்கப்பபட்டு படிப்படியாக மீண்டு வந்து கொண்டிருக்கும் இலங்கை மக்களை மேலும் ஊக்குவிப்பதற்காகவும், இலங்கையின் 74வது சுதந்திரதினத்திற்கான வாழ்த்தினை கூறவும் திட்டமிடப்பட்டுள்ளது.

குறித்த பயணம் யாழ். துரையப்பா விளையாட்டு அரங்கத்தில் இருந்து பூநகரி ஊடாக மன்னார் மாவட்டத்தையும், மன்னார் மாவட்டத்தில் இருந்து அடப்பன்குளம், நொச்சியாகம ஊடாக புத்தளம் மாவட்டத்தையும் அடைந்து, பின்னர் முறையே சிலாபம், நீர்கொழும்பு, கொழும்பு, களுத்துறை, காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை போன்ற மாவட்டங்களின் ஊடாகச் சென்று மொனராகலை மாவட்டத்தில் உள்ள வெல்லவாய நகரத்தின் ஊடாக அம்பாறை மாவட்டத்தின் பொத்துவில் என்னும் நகரத்தை அடைந்து பின்னர் மட்டக்களப்பு, திருகோணமலை, முல்லைத்தீவு போன்ற மாவட்டங்களைக் கடந்து வடமாகாணத்தில் உள்ள பரந்தன், கொடிகாமம், பருத்தித்துறை, காங்கேசன்துறை மற்றும் பொன்னாலை ஆகிய நகரங்களினுாடாக மீண்டும் யாழ். துரையப்பா விளையாட்டு அரங்கத்தை வந்தடைந்து குறித்த சுற்றுப் பயணம் நிறைவு செய்யப்படவுள்ளது.

குறித்த இளைஞன் இதற்கு முன்னரும் இலங்கையைச் சுற்றி மோட்டார் சைக்கிளோடு சுற்றி வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version