செய்திகள்

மீனவர்கள் வாழ்வாதாரத்தை அழிக்கும் இந்திய இழுவைப்படகுகள்! – நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன்

Published

on

பல வருடங்களாகவே எமது கடற்தொழிலாளர்கள் பாரிய பிரச்சனைகளை எதிர்நோக்கி வருகின்றார்கள் என பாராளுமன்ற உறுப்பினர் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

எமது எல்லைக்குள் எல்லை தாண்டிய இந்திய இழுவைப்படகுகள் இவர்களது வாழ்வாதாரத்தை முற்றாக அழித்து வருகின்றன. எமது மீன் வளங்களை இல்லாது ஒழிக்கும் நடவடிக்கையாகவே இவை அமைந்துள்ளன.

முன்னர் இந்தியக் கடல் எல்லைக்குள் இருந்த இடங்களில் கடல் வளங்கள் பலவற்றையும் இல்லாமல் ஆக்கியவர்களே இப்போது இழுவைப் படகுகள் மூலம் எமது வளங்களையும் சூறையாடி வருகின்றார்கள். இவ்வாறு தொடர்ந்தால் அது எமது மீனவர்களையே வெகுவாகப் பாதிக்கும்.

ஆனால் இதே நேரத்தில் வன் முறையில் ஈடுபடுவோர் யார், எதற்காக அவ்வாறு ஈடுபடுகின்றார்கள் என்பதை நாம் ஆராய்ந்து அறிய வேண்டும். மூன்றாந் தரப்பாரின் உள்ளீடுகள் இதில் சம்பந்தப்பட்டுள்ளதோ என்பதையும் நாம் ஆராய வேண்டும்.

எமது கடற்தொழிலாளர்களின் வலைகள், படகுகள் போன்ற உபகரணங்கள் சேதமாக்கப்பட்டு எம்மவர்களின் வாழ்வாதாரமே அழிக்கப்பட்டு வருகின்றது. இந்நடவடிக்கைகள் அதிகரித்துக் கொண்டே வருவது மிகவும் கவலைக்குரிய விடயமாகும். இவை போதாதென்று எம்மவர்களின் உயிரிழப்புக்களும் தாங்கொண்ணாத விதமாக அதிகரித்து வருகின்றன.

நான் முதலமைச்சராக இருந்த போது டெல்லியில் இருந்து இங்கு வந்த உயர் அதிகாரியுடன் இது பற்றி கருத்துப் பரிமாற்றத்தில் ஈடுபட்டபோது நாங்கள் ஒரு முடிவுக்கு வந்தோம்.

இந்தியா – இலங்கை மத்தியில் இருக்கும் கடலில் இழுவைப் படகுகள் பாவிக்கப்படக் கூடாது என்றும் அவை யாவும் வங்காள விரிகுடா மற்றும் அரேபியக் கடலில் சென்று பல நாட்கள் இருந்து மீன் பிடித்து வர ஆவன செய்ய வேண்டும் என்றும் ஆழ் கடலுக்குச் செல்லும் இழுவைப் படகுகள் அதற்கேற்றவாறு இரு அரசாங்கங்களினாலும் மாற்றி அமைக்க உதவப்பட வேண்டும் என்றும் முடிவெடுத்தோம்.

ஆனால் அது நடைமுறைப்படுத்தப்படவில்லை. எமது அரசாங்கம் இனிமேலும் பராமுகமாக இருக்காது எமது கடற்தொழிலாளர்களின் பிரச்சனைகளைத் தீர்க்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அரசாங்கத்திற்கு உறைக்கும் விதமாக ஹர்த்தால் நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு எமது அனுதாபத்தையும் ஆதரவையும் தெரிவித்துக் கொள்கின்றோம். – என்றுள்ளது.

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version