செய்திகள்
அரசாங்கம் பாரபட்சம் காட்டுவதில்லை! – கூறுகிறார் டக்ளஸ்!
எமது மக்கள் எதிர்கொள்ளும் நீதித்துறைசார் பிரச்சினைகளுக்கு இலகுவாக தீர்வினை வழங்கும் நோக்கோடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த நீதிக்கான அணுகல் நடமாடும் சேவையை எமது மக்கள் சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
நீதி அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட நீதிக்கான அணுகல் எனும் தொனிப்பொருளிலான நடமாடும் சேவை இன்றையதினம் யாழ் மத்திய கல்லூரியில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நீதி அமைச்சர் அலி சப்ரி மற்றும் வெளியுறவு அமைச்சர் ஜீ. எல். பீரிஸ் ஆகியோரின் பங்குபற்றலுடன் கலாசார நிகழ்வுகள் சகிதம் சம்பிரதாயபூர்வமாக அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.
இந் நிகழ்வில் சிறப்பு அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில் –
“காலதாமதமான நீதி மறுக்கப்பட்ட நீதிக்கு சமனானது” என்ற ஒரு அனுபவ வாசகம் இருக்கின்றது. அந்தவகையில் இந்த நீதிக்கான அணுகல் நிகழ்வானது ஜனாதிபதி கோட்டபய ராஜபக்சவின் தலைமையில் பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் வழிகாட்டலில் நீதி அமைச்சர் அலி சப்ரியின் முயற்சியால் அமைச்சரவைக்கு கொண்டுவரப்பட்டு தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இதேவேளை நீண்டகாலமாக வன்முறையில் வடக்கு மக்களே அதிகளவில் பாதிப்புகளை சந்தித்துள்ளனர் என்பதாலும் இவ்வாறான பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்துள்ள மக்களுக்கு பரிகாரங்களை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்பதாலும் அவர்களது வீட்டுகளுக்கே துறைசார் அதிகாரிகளுடன் நீதிக்கான அணுகல் என்னும் நடமாடும் சேவை வந்துள்ளது. இதை எமது மக்கள் சரியாக பயன்படுத்த வேண்டும்.
அதேபோன்று நீதி அமைச்சர் அலி சப்ரி ஒவ்வொரு அமைச்சரவையிலும் இவ்வாறான ஒன்றுக்கு மேற்பட்ட பத்திரங்களை சமர்ப்பித்து வருவதையும் காணமுடிகின்றது.
அதாவது கடந்தகால சட்டத்தில் இருக்கக் கூடிய குறைபாடுகளை ஈடு செய்யும் வகையிலான புதிய சட்ட ஏற்பாடுகளை கொண்டுவருவதிலும் காலத்திற்கு பொருந்தக்கூடிய சட்டங்களை உருவாக்குவதிலும் அவர் அயராது பாடுபட்டு வருகின்றார்.
இதேவேளை ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரது வழிகாட்டலில் நாடுதழுவிய ரீதியில் பல்வேறு சேவைகளும் அபிவிருத்திகளும் பாரபட்சமற்ற வகையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
குறிப்பாக 2022 ஆண்டுக்குரிய வரவு – செலவு திட்டத்தில் உள்ளடக்கப்பட்ட அபிவிருத்தி சார் திட்டங்கள் நாடுதழுவிய ரீதியில் ஒரே நேரத்தில் எதிர்வரும் 3 ஆம் திகதி முன்னெடுக்கப்பட்டுள்ளது.
ஆகவே அரசாங்கம் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மக்களுக்கான விடயங்களில் பாரபட்சங்களை காட்டப் போவதில்லை. இந்த அரசாங்கத்தை நம்பி அவர்களுடன் பயணிப்பதனூடாக எமது பிரச்சினைகளுக்கான தீர்வுகளை விரைவாக பெற்றுக்கொள்ளவும் முடியும்.
அந்தவகையில் உங்களது பிரச்சினைகளை நம்பிக்கையுடன் கொண்டுசென்று தீர்வுகளையும் பரிகாரங்களையும் காணவேண்டும் – என்றார்.
இதேவேளை இன்று சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்ட குறித்த நிகழ்வு நாளையும் காலை 9.30 மணிமுதல் மாலை 4 மணி வரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
#SriLankaNews
You must be logged in to post a comment Login