செய்திகள்
பலத்த பாதுகாப்பின் மத்தியில் கட்டுவான் – மயிலிட்டி வீதிப் பணிகள்
யாழ்ப்பாணம், கட்டுவான் – மயிலிட்டி வீதியின் ஒரு பகுதி மக்கள் பாவனைக்காக திறந்து விடப்படவுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது குறித்த பகுதியில் இராணுவ பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
யாழ்ப்பாணம் – பலாலி விமான நிலையத்துக்கு செல்லும் 400 மீற்றர் நீளமான வீதி கடந்த 32 வருடங்களாக இராணுவத்தின் உயர் பாதுகாப்பு வலயத்தினுள் காணப்படுகிறது.
குறித்த வீதியை விடுவிக்க பல்வேறு தரப்பினரும் முயற்சிகளை மேற்கொண்ட நிலையில், தற்போது குறித்த வீதியை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அரச தரப்பு தகவல்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
இந்த நிலையில், குறித்த வீதி விடுவிக்கப்படவுள்ளது என தெரிவித்து, தனியார் காணிகள் ஆக்கிரமிக்கப்பட்டு , அவற்றினூடாக வீதியை அமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன என குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இவ் விடயம் தொடர்பில் காணி உரிமையாளர்கள் மற்றும் அரசியல்வாதிகள் பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
கடந்த “1990 ஆம் ஆண்டு இடம்பெயர்வுக்கு முன்னர் இருந்த வீதியை போல. குறித்த வீதியை தற்போது முழுமையாக விடுவிப்பதுக்கு 25 மீற்றர் பின்நகர்த்தவேண்டும் என ஒரு பகுதியினர் கூறுகின்றனர்.
ஆனால் தேசிய பாதுகாப்பை கருத்தில் கொண்டால் இதற்கு சாத்தியமில்லாத தன்மையே அங்கு காணப்படுகின்றது.
குறிப்பாக, கட்டுவன் – மயிலிட்டி வீதியின் 400 மீற்றர் சர்ச்சைக்குள்ள பகுதியின் கிழக்கு புறமாக இராணுவ உயர் பாதுகாப்பு வலய முட்கம்பி வேலி உள்ளது.
அதற்கு பின்புறமாக விமானப்படையின் முட்கம்பி வேலி உள்ளது. அதற்கு பின்னால் விமான நிலையத்தின் சுற்று மண் அணை உள்ளது.
இவ்வாறான நிலையில் 25 மீற்றர் தூரத்துக்கு வேலியை பின்நகர்த்துவதாயின் விமான நிலைய மண் அணை உள்ள பகுதியிலேயே வேலி நகர்த்த வேண்டும்.
தேசிய பாதுகாப்பு தொடர்பான கரிசனையின் அடிப்படையில் இவ் விடயம் சாத்தியப்படாத நிலையில், தொடர்ச்சியான பேச்சுவார்த்தைகளின் அடிப்படையில் 6 மீற்றர் வரை பாதுகாப்பு வேலியை பின்நகர்த்த முடிந்துள்ளமை குறிப்பிடத்தக்கது ” என யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தனது உத்தியோகபூர்வ முகநூலில் பதிவிட்டுள்ளார்.
இந்தநிலையில், விடுவிக்கப்படுவதாக கூறப்படும் குறித்த 400 மீற்றர் நீளமான வீதி தொடர்பில் சர்ச்சைகள் ஏற்பட்டுள்ள நிலையில் , குறித்த பகுதியில் வீதி அமைக்கும் பணிகளுக்கான செப்பனிடல் பணிகளை இராணுவ பொறியியல் பிரிவினர் முன்னெடுத்து வருகின்றனர்.
குறித்த பகுதியின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ள நிலையில், அப் பகுதிக்கு செல்வோரை இராணுவ புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அங்கு செல்வோரின் வாகன இலக்கங்கள் உள்ளிட்ட விபரங்கள் இராணுவ புலனாய்வு பிரிவினரால் பதிவுசெய்யப்பட்டு வருகின்றது.
இதேவேளை , வீதி செப்பனிடல் பணிகள் உள்ளிட்ட பணிகளை செய்தி சேகரிக்க செல்லும் ஊடகவியலாளர்கள் உள்ளிட்டவர்களும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
பலத்த பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புக்களுக்கு மத்தியிலையே இந்த சர்ச்சைக்குரிய 400 மீற்றர் தூரமான வீதி விடுவிக்கப்படுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
#SriLankaNews
You must be logged in to post a comment Login