செய்திகள்

பிரபல இளம் சினிமா நட்சத்திரம் பனிச் சறுக்கு விபத்தில் மரணம்!

Published

on

பிரான்ஸின் பிரபல இளம் சினிமா நட்சத்திரம் காஸ்பார்ட் உல்லியேல் (Gaspard Ulliel) பனிச் சறுக்கு விளையாட்டு விபத்தொன்றில் சிக்கி உயிரிழந்துள்ளார். 37 வயதான காஸ்பார்ட் நாட்டின் தென் கிழக்கு மாவட்டமான Savoie மலைப் பகுதியில் பனிச்சறுக்கு (skiing) விளையாட்டில் ஈடுபட்டிருந்த சமயம் மற்றொரு வீரருடன் மோதுண்டு விபத்துக்குள்ளானார்.

தலையில் படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு சத்திர சிகிச்சைக்குட்படுத்தப்பட்ட அவர் இன்று உயிரிழந்தார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அவரோடு மோதுண்ட வீரருக்கும் படுகாயமேற்பட்டுள்ளது.

காஸ்பார்டின் அகால மறைவு பிரான்ஸ் சினிமா உலகைப் பெரும் துயரில் ஆழ்த்தியிருக்கிறது. சினிமா கலைஞர்கள் முதல் அரசியல்வாதிகள் வரை இரங்கல் செய்திகளை வெளியிட்டு வருகின்றனர்.

“சினிமா அவனோடு கூடவே வளர்ந்தது” என்று பிரதமர் ஜீன் காஸ்ரோ தனது அஞ்சலிப் பதிவில் தெரிவித்திருக்கிறார். “வசீகரமும் ஆற்றலும் நிறைந்த ஒரு மாபெரும் திறமைசாலியைப் பிரெஞ்சு
சினிமா உலகம் இழந்து விட்டது” என்று நிதியமைச்சர் புறுனோ லூ மேயர் தனது ருவிட்டர் பதிவில் எழுதியிருக்கிறார்.

காஸ்பார்ட் உல்லியேல் பாரிஸின் புற நகரில் நவம்பர் 25, 1984 இல் பிறந்தவர். தனது பதினோராவது வயதில் இருந்தே திரைகளில் தோன்றியவர். பிரான்ஸின் சினிமா நட்சத்திரங்களில் முன்னணியில்-சில சமயங்களில் உச்சத்தில் – இருந்தவர். 2007 இல் வெளியாகிய Hannibal Rising” படத்தின் மூலம் உலக அளவில் கவரப்பட்ட நட்சத்திரமாக மாறினார்.

ஒஸ்காருக்கு நிகரான பிரெஞ்சுத் திரைக்கலைத் துறை விருதாகிய “சீசர்”(César) விருதை மிக இளம் வயதில் இருமுறைவென்றவர்.இயக்குநர் சேவியர் டோலன் இயக்கிய “இட்ஸ் ஒன்லி தி எண்ட் ஆஃப் தி வேர்ல்ட்”(It’s Only the End of the World) திரைப்படத்தின் பாத்திரத்துக்காக சிறந்த நடிகருக்கான சீசர் விருது 2017 இல் காஸ்பார்டுக்கு வழங்கப்பட்டது. அதற்கு முதல் 2004 இல் “A Very Long Engagement” படத்துக்காக “மிகவும் நம்பிக்கைக்குரிய” நடிகருக்கான (most promising actor) சீசர் விருதும் அவருக்குக் கிடைத்திருந்தது.

சினிமாவில் மட்டுமன்றி ஒரு விளம்பர மொடலாகவும் சர்வதேசம் எங்கும் புகழ் பெற்றவர்.அவரது விளம்பரத் தோற்றங்களில் “சனல் ஆஃப்டர் ஷேவ்” (Chanel aftershave) உலகளவில் அறியப்பட்ட ஒரு முகமாக அவரை மாற்றியிருந்தது.

ஆறு வயதில் நாயினால் கடியுண்டதில் அவரது கன்னத்தில் காயம் ஏற்பட்டது. அந்த ஆழத் தழும்பே தனது முக வசீகரத்துக்கு உதவியது என்று கூறிவந்தார். பிரெஞ்சு சினிமாவின் “விசித்திரமான புன்னகை” முகம் என வர்ணிக்கப்பட்டு வந்த காஸ்பார்ட், விரைவில் வெளியாக இருக்கின்ற பிரபலமான தொலைக்காட்சித் தொடரான “மூன் நைற் “(Moon Knight) தொடரில் நடிக்கிறார்.

அமெரிக்காவின் Marvel Cinematic Universe நிறுவனம் தயாரித்துள்ள அந்தத் தொடரின் முன்னோட்டம் (trailer) இணையத்தில் வெளியிடப்பட்டு ஒரிரு நாள்கள் கடந்த நிலையில் காஸ்பார்ட் உல்லியேலின் அகால மரணம் சம்பவித்துள்ளது.

#World

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version