செய்திகள்

9வது நாடாளுமன்றத்தின் 2 வது கூட்டத்தொடர் இன்று

Published

on

ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் இரண்டாவது கூட்டத்தொடரை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இன்று காலை 10.00 மணிக்கு வைபவ ரீதியாக ஆரம்பித்துவைக்கவுள்ளார்.

நாடாளுமன்றம் கடந்த டிசம்பர் மாதம் 10 ஆம் திகதி இந்த வருடத்துக்கான வரவு செலவு திட்ட செயலமர்வின் பின்னர் ஜனவரி மாதம் 11 ஆம் திகதி வரை சபாநாயகரினால் ஒத்திவைக்கப்பட்டது.

என்றாலும் அரசியலமைப்பில் ஜனாதிபதிக்கு இருக்கும் அதிகாரத்துக்கமைய கடந்த டிசம்பர் மாதம் 13ஆம் திகதி ஜனாதிபதி கோட்டாய ராஜபக்ச விசேட வர்த்தமானி அறிவிப்பின் மூலம் நாடாளுமன்ற கூட்டத்தொடரை ஜனவரி 18ஆம் திகதிவரை ஒத்திவைத்திருந்தார்.

நாடாளுமன்ற கூட்டத்தொடர் ஜனாதிபதியினால் ஒத்திவைக்கப்பட்டால் அது மீண்டும் ஜனாதிபதியினால் ஆரம்பித்து வைக்கப்படவேண்டியது நாடாளுமன்றம் சம்பிரதாயமாகும்.

அரசியலமைப்பின் 33 (2) யாப்பின் பிரகாரம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்துக்கு அமைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ச இன்று செவ்வாய்க்கிழமை காலை 10.00 மணிக்கு அரசின் கொள்கைப்பிரகடனத்தை நாடாளுமன்றத்தில் முன்வைப்பார்.

அத்துடன் நாடாளுமன்ற கூட்டத்தொடரை ஆரம்பித்துவைப்பதற்காக ஜனாதிபதி நாடாளுமன்றத்துக்கு வருகைதரும் நிகழ்வு அவருடைய ஆலோசனைக்கு அமைய மிகவும் எளிமையான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி மரியாதை துப்பாக்கி வேட்டுக்கள் தீர்த்தல் மற்றும் வாகன அணிவகுப்பு என்பன இடம்பெறாது. என்றாலும் ஜனாதிபதியை வரவேற்கும் முகமாக பாராளுமன்ற வளாகத்தில் பொலிஸ் கலாசார பிரிவின் பங்களிப்புடன் கலாசார மரியாதை நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.

அதன் பிரகாரம் இன்று ஜனாதிபதி பாராளுமன்ற வளாகத்துக்கு வருவதற்கு முன்னர் காலை 09.15 மணிக்கு விருந்தினர்களின் வருகை இடம்பெறவுள்ளது.

ஆரம்பமாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் வருகை தரவுள்ளனர். அதன் பின்னர் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவின் வருகையும் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவின் வருகையும் அதனை அடுத்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ்வின் வருகையும் இடம்பெறும்.

சபாநாயகர் மற்றும் நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க ஆகியோர் நாடாளுமன்ற நுழைவாயிலில் ஜனாதிபதியை வரவேற்பார்கள்.

இதன்போது நாடாளுமன்றத்தின் பிரதான வாயிலின் அருகில் ஸ்ரீ ஜயவர்தனபுர, ஜனாதிபதி மகளிர் கல்லூரி மாணவிகள் ஜயமங்கள கீதம் இசைத்து ஜனாதிபதியை ஆசிர்வதிக்கவுள்ளனர். அதனை அடுத்து படைக்கலசேவிதர், பிரதிப் படைக்கலசேவிதர் மற்றும் உதவிப் படைக்கலசேவிதர், சபாநாயகர், பாராளுமன்ற செயலாளர் நாயகம் உள்ளிட்ட குழுவினரால் ஜனாதிபதி சபை நடுவால் சபாநாயகர் ஆசனத்துக்கு அழைத்துச் செல்லப்படுவார்.

அதனையடுத்து ஜனாதிபதியினால் அரசின் கொள்கைப் பிரகடனம் முன்வைக்கபடும்.

கொள்கை பிரகடனம் நிறைவடைந்த பின்னர், நாடாளுமன்றம் மறுநாள் 19ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்படும்.

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version