செய்திகள்
சிறுவர்களுக்கு தடுப்பூசி போடுவதில் தமிழகம் முதலிடம்- அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
தமிழகத்தில் மட்டும்தான் 24 மணி நேரமும் 61 தடுப்பூசி முகாம்கள் செயல்படுகிறது என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சிறுவர்களுக்கு தடுப்பூசி போடுவதில் தமிழகம் முதலிடம்- அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
அமைச்சர் மா.சுப்பிரமணியன்
கிண்டி கிங் இன்ஸ்டியூட் கொரோனா மருத்துவமனையில் டாக்டர்கள், நர்சுகள் மற்றும் மருத்துவ பணியாளர்களுடன் இணைந்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் பொங்கல் விழா கொண்டாடினார். மருத்துவ பணியாளர்களுக்கு புத்தாடை வழங்கினார்.
பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:-
அரசு பள்ளியில் படிக்கும் 25 மாணவ-மாணவிகளுக்கு ஆன்லைன் மூலம் படிக்க ஸ்மார்ட்போனை 2 தனியார் பள்ளி மாணவிகள் வழங்கி உள்ளனர். அந்த மாணவிகளின் முற்போக்கு சிந்தனையை பாராட்டுகிறேன். இதன் மூலம் அரசு பள்ளி மாணவர்கள் 25 பேர் பயன் அடைந்துள்ளனர்.
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணியை விரைவில் தொடங்க வேண்டும். அங்கு இந்த ஆண்டில் 50 மாணவர்களை சேர்க்க வேண்டும் என்று மத்திய சுகாதார மந்திரியிடம் முதல்-அமைச்சர் வலியுறுத்தினார்.
ராமநாதபுரம் மருத்துவ கல்லூரியில் அந்த 50 மாணவர்களை சேர்க்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. அதற்கு ஏற்பாடு செய்வதாக அவர் உறுதி அளித்துள்ளார்.
கலந்தாய்வு தொடங்குவதற்கு முன்பாக இதற்கான அறிவிப்பு வெளிவரும். இந்த ஆண்டு 11 மருத்துவ கல்லூரி மூலம் 1450 எம்.பி.பி.எஸ். இடங்களில் மாணவர்கள் சேர்க்கப்படுகிறார்கள்.
இந்த மாதம் 4 வது வாரத்தில் இதற்கான கலந்தாய்வு தொடங்குகிறது. அப்போது எம்ய்ஸ் கல்லூரி மாணவர்களுக்கான 50 இடங்கள் வரும் என்று எதிர்பார்க்கிறோம்.
இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அதிக கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. தினமும் 1.5 லட்சம் பரிசோதனைகள் நடக்கின்றன. கடந்த 2 ஆண்டுகளாக தொடர்ந்து அதே அளவில் பரிசோதனை நடக்கிறது. குறைக்கப்படவில்லை. மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவர்களுக்கு வீடுகளில் 7 நாட்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டும்.
தற்போது 25 ஆயிரம் பேர் நோய் பாதிப்பால் வீடுகளில் தனிமைப்பட்டுள்ளனர். வீடுகளில் தனிமைப்படுத்த வசதி இல்லாதவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார்கள்.
தற்போது தொற்றின் வேகம் அதிகமாக இருந்தாலும் மருத்துவமனைக்கு வருபவர்களின் எண்ணிக்கை குறைவு. இது சரியான நடைமுறையாகும். இந்தியா முழுவதும் இந்த நடைமுறை பின்பற்றப்படுகிறது.
நீட் தேர்வு விலக்கு அவசியம் குறித்து பிரதமரிடம் முதல்-அமைச்சர் நேற்று விளக்கி கூறினார். நீட் பயிற்சி பள்ளிக்கல்வி மூலம் தொடர்ந்து வழங்கப்படும்.
தமிழகத்தில் 2-வது தடுப்பூசி போடாமல் 90 லட்சம் பேர் இருக்கிறார்கள். தமிழகத்தில் மட்டும்தான் 24 மணி நேரமும் 61 தடுப்பூசி முகாம்கள் செயல்படுகின்றன.
தமிழகத்தில் மட்டும்தான் வீடுதேடி தடுப்பூசி திட்டம்இ ஊர்தேடி தடுப்பூசி திட்டம்இ வாரம் தோறும் மெகா சிறப்பு முகாம் போன்றவை நடத்தப்படுகிறது. 18 மெகா சிறப்பு முகாம்கள் மூலம் இதுவரையில் 3 கோடியே 32 லட்சத்து 65 ஆயிரம் பேர் பயன் அடைந்துள்ளனர்.
2-வது தவணை தடுப்பூசியை 50இ 60 வயது உள்ளவர்கள் பெரும்பாலும் போடாமல் இருக்கிறார்கள். அவர்களுக்கு தடுப்பூசியை தீவிரப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
பூஸ்டர் தடுப்பூசி 60 ஆயிரத்து 51 பேருக்கு போடப்பட்டுள்ளது. போடாதவர்களுக்கு குறுஞ்செய்தி மூலம் தகவல் அறிவிக்கப்படுகிறது. விரைவில் இலக்கை அடைவோம்.
15 முதல் 18 வயதுள்ள சிறுவர்களுக்கு தடுப்பூசி 75 சதவீதம் போடப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே தமிழகம் முதல் இடத்தில் உள்ளது. தகுதியுள்ள 35 லட்சம் பேரில் 23.5 லட்சம் போடப்பட்டுள்ளது. தற்போது 70 லட்சம் தடுப்பூசி இருப்பு உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்
#indianews
You must be logged in to post a comment Login