செய்திகள்

நெடுந்தீவில் பின்வாங்கிய வன பாதுகாப்பு அமைச்சு!!!

Published

on

நெடுந்தீவில் சுமார் 1200 ஹெக்டேயர் நிலப்பரப்பை வன, விலங்கு பாதுகாப்பு சரணாலயம் அமைப்பதிலிருந்து விடுவித்து வன ஜீவராசிகள், வன பாதுகாப்பு அமைச்சு வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

வன ஜீவராசிகள் மற்றும் வன பாதுகாப்பு அமைச்சு கடந்த 2015 ஜூன் 22 ஆம் திகதியன்று நெடுந்தீவில் 1728.11 ஹெக்டேயர் நிலப்பகுதியை வர்த்தமானி அறிவித்தல் மூலம் வன,விலங்கு பாதுகாப்பு சரணாலயமாக அறிவித்திருந்தது.

இவ்வர்த்தமானி அறிவித்தல் ஊடாக அறிவிக்கப்பட்ட நிலப் பகுதியில் பெருமளவான பகுதியை விடுவிக்குமாறு வன ஜீவராசிகள், வன பாதுகாப்பு அமைச்சின் வட மாகாண பணிப்பாளர் மா.பரமேஸ்வரன் வன ஜீவராசிகள், வன பாதுகாப்பு அமைச்சர் சி.பி.ரட்னாயக்காவிடம் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இதையடுத்து அமைச்சரின் உத்தரவுக்கு அமைய அமைச்சின் செயலாளர் எம்.கே.பந்துல ஹரிச்சந்திர வன,விலங்கு பாதுகாப்பு சரணாலமாக அறிவிக்கப்பட்ட பகுதியிலிருந்து 537 ஹெக்டேயர் தவிர 1191.11 ஹெக்டேயரை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி குறித்த பகுதியை விடுவிப்பதற்கான நடவடிக்கை யாழ்.மாவட்ட செயலக மட்டத்தில் இடம்பெற்று வருவதாக மாவட்ட செயலக வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

எனினும் பெருந்தோட்ட இராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்னாண்டோ வடக்கின் தென்னை முக்கோண வலயமாக்கும் செயற்றிட்டத்தின் கீழ் முதலாவதாக நெடுந்தீவில் பாரிய தென்னை பயிற்செய்கை மேற்கொள்ள முன்மொழிந்துள்ளார்.

இதன் மூலம் 2000 மில்லியன் ரூபா வருமானத்தை நாட்டின் தேசிய உற்பத்திக்கு பெற்றுக் கொடுக்க முடியுமென்பதுடன் தொழில் வாய்ப்பு மற்றும் வறுமை ஒழிப்புக்கு உதவுமென எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த தென்னை செய்கை தனியார், பொது மக்கள் பங்குடமை தொழில் திட்டமாக முன்னெடுக்க எதிர்பார்த்துள்ளதாகவும் இதன் மூலம் நெடுந்தீவில் பயன்பாடற்றிருக்கும் நிலப்பகுதி பயன்படுத்தப்படுவதன் மூலம் உல்லாச துறைக்கும் வலுசேர்க்குமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

#SrilankaNews

 

 

 

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version