செய்திகள்

இனப் படுகொலை அரசின் பிரதிநிதிகள் வல்வை பட்டத் திருவிழாவில்! – தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கண்டனம்

Published

on

“இனப் படுகொலை அரசின் பிரதிநிதிகளை பட்டத் திருவிழாவுக்கு விருந்தினர்களாக அழைக்கும் முயற்சிக்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் செல்வராசா கஜேந்திரன் ஆகியோர் கண்டனம் வெளியிட்டுள்ளனர்.

இவ் விடயம் தொடர்பில் அவர்கள் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில்,

வல்வெட்டித்துறை மண்ணில் இதுவரை காலமும் தமிழர் பண்பாட்டைப் பிரதிபலிக்கும் வகையில், பட்டத்திருவிழா மிகச் சிறப்பாக நடாத்தப்பட்டு வந்திருந்தது.

ஆனால், வழமைக்கு மாறாக, இவ்வாண்டு தமிழின விரோத சக்திகளின் வழிநடத்தலில், தமிழினத்தின் வாழ்வுரிமையைச் சிதைத்த, இனவழிப்பு அரசின் பிரதிநிதிகளை விருந்தினர்களாக்கி, அவர்களின் பங்குபற்றலுடன் இவ்விழாவை நடாத்த முற்பட்டுள்ள அரச முகவர்களின் சதிமுயற்சிக்குள், ஏற்பாட்டுக்குழுவினரை சிக்கவைத்துள்ள இந்தச் செயற்பாடானது தமிழினப் பண்பாட்டு அழிப்பின் தொடர் முயற்சியாகும்.

இவ்வாறு தமிழினப் பண்பாட்டு அழிப்பின் தொடர் முயற்சியின் அங்கமாக, இப் பட்டத்திருவிழா நிகழ்வு நடைபெறுமாயின், தமிழின வரலாற்றின் கறைபடிந்த நிகழ்வாகவே, எதிர்வரும் காலங்களில் இந் நிகழ்வு வரலாற்றில் பதியப்படும்.

தமிழர் வரலாற்றில் பின்னிப்பிணைந்த பாரம்பரிய நிகழ்வான பட்டத் திருவிழாவில், இவ்வாறான கறைபடிந்த வரலாற்றுத் தவறை மேற்கொள்ளத் துணைபோகவேண்டாம் என விழாவின் ஏற்பாட்டாளர்களை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி வேண்டி நிற்கின்றது.

தமிழ் மக்களுக்கு எதிரான பேரினவாத ஒடுக்குமுறை, இனப்படுகொலையாக விஸ்வரூபம் எடுத்தபோது, சிங்கள – தமிழ்த் தேசிய இனங்கள் மத்தியில் முரண்பாடுகள் முற்றியது. ஒற்றையாட்சியின் கீழ் ஐக்கியமாக வாழமுடியாத நெருக்கடி நிலை தோன்றியபோது, சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் அரசியல் சுதந்திரப்போராட்டம் உதித்த மண்ணில் நடக்கக்கூடிய ஒரு நிகழ்வுக்கு, தமிழினவழிப்பு அரசின் பிரதிநிதிகளை விருந்தினர்களாக்க முற்படும் பேரினவாத முகவர்களின் திட்டமிட்ட சதிவலைக்குள் சிக்காது, ஏற்பாட்டாளர்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படவேண்டும்.

சர்வதேச அரங்கிலுள்ள, தமிழ் மக்களுக்கான பொறுப்புக்கூறல் விடயங்களை, சிறிலங்கா அரசு முற்றுமுழுதாகப் புறக்கணித்தே வருகின்றது. வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர் இன்றும் வீதிகளில் நின்று, நீதிவேண்டிப் போராடி வருகிறார்கள்.

தமிழர் தாயகம் மீது, திட்டமிட்டு சிங்கள மயமாக்கல் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு, தமிழர்களின் பூர்வீக நிலங்கள் அபகரிக்கப்பட்டு, கட்டமைக்கப்பட்ட இனவழிப்பு தொடரும் சூழ்நிலையில், தமிழின அழிப்பு அரசின் பிரதிநிதிகளை விருந்தினர்களாக அழைப்பதென்பதும், அதற்கு ஏற்பாட்டாளர்கள் தன்னிலை விளக்கம் கொடுப்பதென்பதும் ஒருபோதும் நியாயப்படுத்த முடியாத மிக மோசமான செயற்பாடாகவே அமையும்.

வீரமும், தியாகமும், அளப்பரிய அர்ப்பணிப்புக்களும் நிறைந்த தமிழ் மண்ணில், தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக்காக, ஒரு உன்னதமான தேசிய விடுதலைப் போராட்டம் உதித்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மண்ணில், அற்ப நலன்களை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்படும் தீர்மானங்கள் வரலாற்றில் என்றுமே மன்னிக்கப்படமுடியாதவையாகவே இருக்கும் என்பதைத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி வலியுறுத்த விரும்புகின்றது.

எனவே, குறித்த பட்டத்திருவிழாவுக்கு சிறிலங்கா இனப்படுகொலை அரசின் பங்காளிகளையும், அவர்களுக்குத் துணைநின்றவர்களையும், விருந்தினர்களாக அழைக்கும் முடிவை ஏற்பாட்டாளர்கள் உடன் நிறுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றோம்.- என்றுள்ளது.

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version