செய்திகள்
பாகிஸ்தானை தாக்க தயாராகும் தலிபான்கள் – போர் மூழ்கும் அபாயம்
பாகிஸ்தானில் போர் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் தாக்குதல்களை மேற்கொள்ள தலிபான்கள் தயாராகி வருவதாக அந்நாட்டுச்செய்திகள் தெரிவிக்கின்றன.
பாகிஸ்தான் அரசு ஒப்பந்தத்தை மீறிவிட்டதாகவும் பாகிஸ்தான் படையினர் தங்கள் அமைப்பினரை கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபடுவதாகவும் தலிபான்கள் தெரிவித்துள்ளனர்.
பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் தெஹ்ரீக்-இ-தலிபான் தீவிரவாத அமைப்பு பாகிஸ்தானின் தலிபான் என அழைக்கப்படுகிறது.
கடந்த 14 ஆண்டுகளாக பாகிஸ்தான் பாதுகாப்பு படையினர் மற்றும் அந்நாட்டு பொதுமக்கள் மீது தெஹ்ரீக்-இ-தலிபான் தீவிரவாதிகள் கொடூர தாக்குதல்களில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
கடந்த 2014ம் ஆண்டு பெஷாவர் நகரில் உள்ள இராணுவ பள்ளியில் அந்த அமைப்பினர் நடத்திய தாக்குதலில் 150 பேர் கொல்லப்பட்டனர்.
அதில் அதிகமான குழந்தைகள் கொல்லப்பட்டனர்.
இந்நிலையில் தெஹ்ரீக்-இ-தலிபான் அமைப்புடன் இம்ரான்கான் அரசு கடந்த ஐப்பசி 25ம் தேதி ஆறு அம்ச ஒப்பந்தம் ஒன்றை கைச்சாத்திட்டது.
இதன்படி கடந்த கார்த்திகை ஒன்றாம் தேதி முதல் நவம்பர் 30ம் தேதி வரை இரு தரப்பும் போர் நிறுத்தம் செய்வது, சிறையில் உள்ள 102 தலிபான்களை விடுதலை செய்வது உள்பட 6 அம்சங்கள் இந்த ஒப்பந்தத்தில் அடங்கியிருந்தன.
இரு தரப்பினருக்கும் மத்தியஸ்தராக ஆப்கானிஸ்தானின் தலிபான் அமைப்பு செயல்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் பாகிஸ்தான் அரசு அந்த ஒப்பந்தத்தை மீறி விட்டதாகவும் பாகிஸ்தான் படையினர் தங்கள் அமைப்பினரை கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபடுவதாகவும் தெஹ்ரீக்-இ-தலிபான்கள் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், ஒரு மாத கால போர் நிறுத்த ஒப்பந்தத்தை கைவிடுவதாக அந்த அமைப்பின் தலைவர் முப்தி நூர் அறிவித்துள்ளார்.
முன்னதாக அவர் வெளியிட்டுள்ள ஒளிப்பதிவுச் செய்தியில், தனது போராளிகளை நள்ளிரவு 12 மணிக்கு முதல் தாக்குதல்களை மீண்டும் தொடங்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.
மத்தியஸ்தர்களிடம் இருந்தோ அல்லது அரசாங்கத்திடம் இருந்தோ பதில் வராத நிலையில், தங்கள் போராளிகள் எங்கிருந்தாலும் தாக்குதல்களை மீண்டும் தொடங்க உரிமை உண்டு என அவர் தெரிவித்துள்ளார்.
இதனை அடுத்து பாகிஸ்தான் பொதுமக்கள் மீது மீண்டும் தெஹ்ரீக்-இ-தலிபான்கள் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் தாக்குதல் நடத்துவார்கள் என மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
பாகிஸ்தான் தாலிபான்களின் அறிவிப்பு, பிரதமர் இம்ரான்கான் அரசுக்கு பெரும் தலையிடியாக உருவெடுத்துள்ளது.
அத்தோடு பாகிஸ்தான் முழுவதும் பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.
#world
You must be logged in to post a comment Login