செய்திகள்

முல்லையில் ஊடகவியலாளர் மீது தாக்குதல் நடத்தப்படவில்லை: அனைத்தும் உண்மைக்குப் புறம்பானது!

Published

on

முல்லைத்தீவு- முள்ளிவாய்க்கால் பகுதியில் ஊடகவியலாளர் தாக்கப்பட்ட சம்பவம் குறித்த உண்மைகள் திரிபுபடுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தலைமையகம் தெரிவித்துள்ளது.

ஊடகவியலாளர் மீது படையினர் தாக்குதல் நடத்தவில்லை எனவும் இராணுவத் தலைமையகம் கூறியுள்ளது.

இதுகுறித்து இலங்கை இராணுவத் தலைமையகம் வெளியிட்டுள்ள விளக்க அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;

முல்லைத்தீவைச் சேர்ந்த சுதந்திர ஊடகவியலாளர் விஸ்வலிங்கம் விஸ்வச்சந்திரன் மீது படையினர் நடத்தியதாகக் கூறப்படும் தாக்குதல் குறித்து இலங்கை இராணுவம் மற்றும் அதன் இராணுவ பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டது.

இதனையடுத்து குறித்த சம்பவம் இடம்பெற்ற சில மணித்தியாலங்களில், 2021 நவம்பர் 27ஆம் திகதி அந்த இடத்தில் கடமையாற்றிய 682 படைப்பிரிவு படையினரிடம் விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.

பல்வேறு சமூக ஊடக தளங்கள் மற்றும் நாட்டின் சில அச்சு ஊடகங்கள் என்பன இந்த சம்பவம் தொடர்பாக சரிபார்க்கப்படாத, உறுதிப்படுத்தப்படாத மிகைப்படுத்தப்பட்ட மற்றும் உண்மைக்கு புறம்பான தகவல்களை வெளியிட்டன.

உண்மையில், படை வீரர் ஒருவர், முள்ளிவாய்க்கால் பெயர் பலகையுடன் இணைந்ததாக இராணுவத்தினரை ஏன் படம் பிடிக்கிறீர்கள் என ஊடகவியலாளரிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

இவ்வாறு கேள்வி எழுப்பியவாறு, அந்த இராணுவ வீரர் குறிப்பிட்ட ஊடகவியலாளரை நோக்கிச் செல்ல முற்பட்டதும், அவர் அந்த படைவீரர்களுடன் கதைத்தவாறு பின்னோக்கிச் சென்றுள்ளார்.

இவ்வாறு பின்னோக்கிச் சென்றவேளை, திடீரென்று பெயர் பலகையில் இருந்து சில மீட்டர் தொலைவில் நிறுத்தப்பட்டிருந்த தனது சொந்த மோட்டார் சைக்கிளின் மீது மோதி, கம்பி வேலி பொருத்தப்பட்டிருந்த இடத்தில் விழுந்தார்.

சேற்று நிலப்பகுதியில் விழுந்த அவரது கைகள் ‘காயமடைந்து’ இருப்பதை அவதானித்தார்.

இவர் இவ்வாறு விபத்துக்குள்ளாகி காயமடைந்த சில நொடிகளில், அவரது கையடக்க தொலைபேசியின் ஊடாக தகவல் கொடுக்கப்பட, செய்தியை எதிர்பார்த்துக் காத்திருந்த பல குழுக்கள் வீடியோ கமராக்கள் மற்றும் தொலைபேசிகளுடன் சம்பவ இடத்திற்கு வந்து, காயமடைந்த நபரை பாசாங்குத்தனமாக அந்த இடத்தில் படுக்கச் செய்துள்ளனர்.

இது படைத்தரப்புக்கு பாதிப்பை ஏற்படுத்தும் நோக்கில் மிகவும் கவனமாகத் திட்டமிடப்பட்ட வகையில் மேற்கொள்ளப்பட திட்டமிடப்பட்ட சதி என வெளிச்சத்திற்கு வந்தது.

வீதியோரத்திலுள்ள பெயர் பலகையை படமெடுக்கும் போது அந்த இடத்தில் இருந்த இராணுவ வீரர்களால் அவர் ‘மிருகத்தனமாக’ தாக்கப்பட்டு காயப்படுத்தப்பட்டார் என்று கூறும் அளவுக்கு படப்பிடிப்பிற்கான காட்சிகள் எடுக்கப்பட்டன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

#SrilankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version