செய்திகள்
கொவிட் கட்டுப்பாடுகளுக்கு மக்கள் ஆதரவு!
எந்த விடயத்துக்கும் மக்கள் கருத்தை அறிகின்ற பொது வாக்கெடுப்பை நடத்தும் நேரடி ஐனநாயக நடைமுறை நிலவும் நாடு சுவிற்சர்லாந்து.
சுவிஸ் நாட்டில் இன்று நடைபெற்ற கருத்தறியும் (referendum) வாக்கெடுப்பில் நாட்டின் மக்களில் 62 சதவீதமானோர் அரசு முன்னெடுத்துவரும் “கொவிட்” தடுப்பு நடவடிக்கைகளுக்கு ஆதரவு தெரிவித்திருக்கிறார்கள்.
சுவிட்சர்லாந்து புதிதாக வைரஸ் தொற்றுக்களுக்கு முகம் கொடுத்துள்ள நிலையில் அங்கு சுகாதாரக் கட்டுப்பாடுகள் வேண்டுமா வேண்டாமா என்பதைத் தீர்மானிக்கும் முக்கிய பொறுப்பு மக்களிடம் விடப்பட்டது. அதற்கு வாக்குகள் மூலம் மக்கள் பதிலளித்துள்ளனர்.
இத்தகைய கருத்துக் கணிப்புகளின் போது பொதுவாக அமைதியாக நடைபெறுகின்ற பிரசாரங்கள் இம்முறை பெரும் பதற்றங்களுக்கு மத்தியில் இடம்பெற்றிருந்தன. நாட்டின் கன்ரன்கள்(cantons) என்கின்ற 26 மாநிலங்களில் ஆக இரண்டு கன்ரன்களில் மட்டுமே அரசின் கொள்கைக்கு அதிக எதிர்ப்பு பதிவாகி உள்ளது.
“கொவிட் பாஸ்” என்கின்ற சுகாதார சான்றிதழ் உட்பட பல விதிகளை சட்டங்களில் இருந்து நீக்குமாறு கோருகின்றவர்களே இன்றைய கருத்தறியும் வாக்கெடுப்பை நடத்துவதற்கு அழைப்பு ஏற்பாடு செய்திருந்தனர். ஐரோப்பாவில் மிகக் குறைந்த சனத்தொகையினர் தடுப்பூசி பெற்றுக்கொண்டுள்ள நாடுகளில் சுவிஸும் ஒன்று.
ஏனைய நாடுகளைப் போன்று கட்டுப்பாடுகளை இறுக்கி அதன் மூலம் தடுப்பூசி ஏற்றிக்கொள்வதற்கு மக்களை நிர்ப்பந்திக்கும் விதிகளை நடைமுறைப்படுத்துவதற்கு சுவிஸ் சட்டங்களில் அரசுக்கு குறைந்தளவு அதிகாரமே உள்ளது. இறுதி முடிவுகள் மக்களது கருத்தறிந்தே எடுக்கப்பட முடியும்.
தடுப்பூசி மற்றும் தடுப்பூசி பாஸ் உட்பட மக்களைக் கட்டுப்படுத்துகின்ற பல சட்டங்களை தனி மனித சுதந்திரத்தை மீறும் செயல் என்று கூறி அவற்றை எதிர்த்துவந்த தரப்பினர் சில விதிகளை அகற்றுமாறு கோரி போராட்டங்களை நடத்தி வந்தனர். ஆனால் வாக்களிப்பில் அவர்கள் ஆதரவை இழந்துள்ளனர்.
அரசின் சுகாதாரக் கொள்கைகளுக்கு இன்றைய வாக்கெடுப்பில் பெரும்பான்மை ஆதரவு கிடைத்திருப்பதால் “கொவிட்” பாஸ் உட்பட பல தடுப்பு நடவடிக்கைகளை விரைந்து முன்னெடுப்பதற்கு அரசுக்கு அதிகாரம் கிடைத்திருக்கிறது.
இதேவேளை, தொற்று நோய் நெருக்கடிக்குள் பணிபுரிகின்ற தாதியர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களது ஊதியம் மற்றும் தொழில் சூழலை மேம்படுத்துவதற்கு மக்களது ஆதரவைக் கோரும் மற்றொரு வாக்கெடுப்பும் இன்று அங்கு ஒரே சமயத்தில் நடத்தப்பட்டது.
அதில் சுமார் 63 வீதமான மக்கள் சுகாதாரப் பணியாளர்களுக்கு ஆதரவாகத் தங்கள் தீர்ப்பை வழங்கியுள்ளனர்.
You must be logged in to post a comment Login