செய்திகள்
பெண் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் சமூக அபிவிருத்தியில் அதிக ஆர்வம் காட்ட வேண்டும் – முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திலகராஜ்
உள்ளூராட்சி மன்றங்களில் பெண்களுக்கு 25 சதவீத இட ஒதுக்கீடு எனும் 2018ஆம் ஆண்டு முதலான ஏற்பாடு நடைமுறைக்கு வந்ததை அடுத்து,
இலங்கையின் உள்ளுராட்சி மன்றங்களில் பெண்களின் பங்களிப்பு குறிப்பிடத்தக்க அளவு முன்னேற்றம் கண்டுள்ளது.
அந்த தெரிவு முறையில் குறைபாடுகள் உள்ளபோதும் பெண்கள் தமது தலைமைத்துவ ஆற்றலை வெளிப்படுத்த இந்த ஏற்பாடு வாய்ப்பாக அமைந்துள்ளது.
இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி பௌதீக அபிவிருத்தி விடயங்களைக் காட்டிலும் உள்ளுர் மட்டத்தில் சமூக அபிவிருத்தி சார்ந்த விடயங்களில் பெண் உறுப்பினர்கள் ஆர்வம் காட்டுதல் அவசியம் .
முன்னாள் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மலையக அரசியல் அரங்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான எம். திலகராஜ் தெரிவித்துள்ளார்.
சேர்ச் கபோர் கொமன் கிரவுன்ட்ஸ் நிறுவனம் ஐரோப்பிய ஒன்றியத்தின் அனுசரணையுடன் ‘பெண்களின் கற்றல் மற்றும் தலைமைத்துவம்’ எனும் தொனிப்பொருளில் மாநாடு ஒன்றை அண்மையில் நடாத்தி இருந்தது.
தலவத்துகொட கிராண்ட் மொனார்ச் விருந்தக மண்டபத்தில் நடைபெற்றது.
இம் மாநாட்டில் இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றிய தலைமை நிர்வாகி ஜென்னி கொரியா நியூன் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றியிருந்தார்.
பெண் தலைமைத்துவ ஆர்வலர்கள், கல்வியாளர்கள், செயற்பாட்டாளர்கள் பெருமளவில் கலந்து கொண்டிருந்த இந்த மாநாட்டில்
நாடு முழுவதிலும் இருந்து பெண் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டு கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டடனர்.
அவர்களது செயற்பாட்டு தளங்களையும் காட்சிப்படுத்தி இருந்தனர்.
இதன்போது முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திலகராஜ் கருத்துத் தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
பாராளுமன்ற உறுப்பினர்கள் நாங்கள் சுமார் 25 பேர் அளவில் செயற்பட்டோம். அதில் பெண் அரசியல் பங்கேற்பை உறுதி செய்வது ஓர் அம்சம் ஆகும்.
அதேபோல மதிப்பாய்வு சம்பந்தமான கொள்கை மற்றும் சட்ட உருவாக்கத்தைச் செய்வதிலும் எமது பங்களிப்பு இருந்தது.
உண்மையில் பாராளுமன்ற உறுப்பினர்களின் செயற்பாடுகளும் மதிப்பாய்வுக்கு உட்படுத்தப்படுதல் வேண்டும்.
பெண் உறுப்பினர்களுக்கு உள்ளூராட்சி மன்றத்தில் 25 சதவீத இட ஒதுக்கீட்டு நடைமுறை 2018 ஆம் ஆண்டில் நடைமுறைக்கு வந்ததன் பின்னர் அவர்களின் அரசியல் பங்களிப்புக்கு ஒரு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
அது குறித்த மதிப்பாய்வு ஒன்றின் அவசியம் இருக்கிறது. அதன் அடிப்படையில் அதனை விரிவுபடுத்தவும் வேண்டி உள்ளது.
ஆண் உறுப்பினர்கள் பௌதீக அபிவிருத்தியிலேயே அதிகம் கவனம் செலுத்துகின்றனர்.
அபிவிருத்தி வேலைகளைச் செய்யும் ஒப்பந்தக்கார்ர்களாகவே அவர்களில் பலர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அல்லது ஒப்பந்தக்காரர்கள் பலர் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களாக உள்ளனர்.
பெண் உறுப்பினர்களும் பாதை அபிவிருத்தி போன்ற விடயங்களில் கவனம் செலுத்தும் போது ஆண் உறுப்பினர்களுடன் முட்டி மோதி முரண்படும் போட்டி சூழல் ஒன்று நிலவுவதை அவதானிக்க முடிகிறது.
அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். அதில் மாற்றுக் கருத்து இல்லை.
அதே நேரம் சமூகம் சார்ந்த அபிவிருத்தி நடவடிக்கைகளில் பெண் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் அதிக கவனம் செலுத்துதல் வேண்டும்.
குறிப்பாக பெண்கள், சிறுவர்கள் குறித்தான விடயங்களில் அதிக அக்கறை காட்டுதல் வேண்டும்.
மலையகப் பெருந்தோட்டத்துறை நிலையில் அங்கே பெண்கள் வேலைக்கு செல்பவர்களாக அல்லது வெளிநாட்டு வேலைக்கு செல்பவர்களாக உள்ள நிலையில், குடும்ப மட்டத்தில் பல குற்றச் சம்பவங்களும், குடும்ப வன்முறைகளும், உரிமை மீறல்களும் இடம்பெற்று வருகின்றன.
இவை குறித்த அக்கறை ஆண் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களிடத்தில் குறைவு.
அதே நேரம் பெண் உறுப்பினர்கள் இந்த விடயங்களில் அதிக அக்கறை காட்டுமிடத்து அது ஆண் உறுப்பினர்கள் உடனான தேவையற்ற போட்டிகளைத் தவிர்ப்பதுடன், சமூக அபிவிருத்தி சார்ந்த விடயங்களில் அக்கறை காட்டுவதாகவும் அமையும்.
மலையக அரசியல் தளத்தில் உரையாடல் அரங்கம் ஒன்று எனது தலைமையில் ஆரம்பிக்கப்பட்டு உள்ளது.
அத்தகைய அரங்கத்தின் இலச்சினையை, அரசியலில் ஆண்- பெண் சமவாய்ப்பை உறுதி செய்யும் வகையில் வடிவமைத்துள்ளோம்.
அத்துடன் பெண் தலைமைத்துவ முன்னெடுப்புகளுக்கு எப்போதும் எமது ஒருமைப்பாட்டையும் தெரிவிக்கிறோம் எனவும் தெரிவித்தார்.
#SrilankaNews
You must be logged in to post a comment Login