செய்திகள்
கடற்படையினருக்காக காணி கையகப்படுத்தும் நடவடிக்கை முறியடிப்பு!
கடற்படையினருக்கான காணி சுவீகரிப்பு நடவடிக்கை பொதுமக்களின் எதிர்ப்பால் முறியடிக்கப்பட்டுள்ளது.
மண்டைத்தீவு, அல்லைப்பிட்டி பகுதியில் இன்று (08) முன்னெடுக்கப்படவிருந்த காணி அளவீடு செய்யும் பணிக்கு, பொதுமக்கள் எதிர்ப்பை வெளியிட்டதன் அடிப்படையில் இந்நடவடிக்கை கைவிடப்பட்டுள்ளது.
அத்துடன், காணி சுவீகரிப்புக்கு வருகை தந்த நில அளவைத் திணைக்கள அரச அலுவலர்களும் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
வேலணை பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட தீவகம் தெற்கு பிரதேச செயலாளர் பிரிவில், கடற்படையினரின் தேவைக்காக, இன்று காலை, 3 இடங்களில் ஒரே நாளில் பொதுமக்களுக்கு சொந்தமான காணிகள் சுவீகரிக்கப்படவுள்ளதாக, நில அளவை திணைக்களத்தினரால் அறிவிக்கப்பட்டிருந்தது.
ஜே/10 கிராமசேவையாளர் பிரிவு – அல்லைப்பிட்டியில், 7 பரப்பு காணியும், ஜே/11 பிரிவு – மண்கும்பானில், 4 பரப்பு காணியும், புங்குடுதீவு – வல்லன் பகுதியில் பொதுமக்களுக்குச் சொந்தமான காணிகளும், கடற்படையினரின் தேவைகளுக்காக கையகப்படுத்தவிருந்த நிலையில், பொதுமக்கள் மற்றும் அரசியல் பிரதிநிதிகள் ஆகியோர், திணைக்கள வாகனத்தை தடுத்து நிறுத்தி, எதிர்ப்பை வெளியிட்டனர்.
இதனையடுத்து காணி சுவீகரிப்பு செயற்பாடு தடுத்து நிறுத்தப்பட்டது.
#SrilankaNews
You must be logged in to post a comment Login