செய்திகள்
கோட்டாவை அலற வைக்கும், வங்குரோத்து நிலையும், புலம்பெயர் தமிழர்களும்!!!
இலங்கையில் ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஸ பதவியேற்ற பின்னர், நாடு மிகவும் பாரிய பொருளாதார வீழ்ச்சியினைக் கண்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல், கொரோனா எதிரொலியைத் தொடர்ந்து, இலங்கை மக்கள் வரிசையில் நிற்பதற்குத் தவறவில்லை என்று தான் கூறவேண்டும்.
பால்மாவுக்காக, எரிவாயுவுக்காக இன்னொருபுறம் தடுப்பூசியை ஏற்றிக் கொள்வதற்காக என மிக நீண்ட வரிசையில் மக்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
இற்றைவரை கூட காத்திருப்புக்கான காலத்திற்கு ஒரு முற்றுக் கிடைக்கவே இல்லை. மக்கள் மென்மேலும் பாரிய பொருளாதார நெருக்கடிகளுக்கு முகம் கொடுத்து வருகிறார்கள்.
இந்தநிலையில் இலங்கையில் இடம்பெற்ற இனப்படுகொலை வடுக்கள் இன்னும் ஆறவில்லை என்பதை நாட்டிலுள்ளவர்களால் புலப்படுத்த முடியவில்லை.
ஆனாலும் புலம்பெயர் வாழ் தமிழர்கள் இலங்கை அரசுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த சர்வதேசத்திற்கும் தெளிவுபடுத்தியிருக்கிறார்கள்.
ஸ்கொட்லாந்து கிளாஸ்கோவில் நடைபெற்ற ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்றம் தொடர்பான மாநாட்டில் இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ பங்கேற்பதற்கு சென்றார்.
ஆனால் அங்கு ஓங்கியொலித்த பாரிய குரல்கள் அவருக்கு ஏதாவது ஒன்றை நிச்சயம் உணர்த்தியிருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
இப்போராட்டத்தில் பிரித்தானியாவின் பல பகுதிகளிலிருந்து பேருந்துகள், மகிழுந்துகள், தொடருந்து மூலகமாக ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் பங்கேற்றனர்.
மனிதகுலத்திற்கு எதிராக படுகொலைகளை செய்த போர்க்குற்றவாளி கோட்டாபயவுக்கு எதிராக கோசங்களை எழுப்பியதோடு, பதாதைகளையும் தாங்கியிருந்தனர்
இப்போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் வகையில் புலம்பெயர் நாடுகளிலிருந்து வானூர்தி மூலம் பலர் கலந்துகொண்டிருந்தமை இங்கே சுட்டிக்காட்டத்தக்கது.
அத்தனை உலகத் தலைவர்களும் தங்கியிருந்த விடுதியைச் சுற்றி ஒலித்த இலங்கை புலம்பெயர் தமிழர்களின் குரலை அடக்க முடியவில்லை.
இது அங்கு கோட்டாபய ராஜபக்ஸவுக்கு ஏற்பட்ட மிகப்பெரிய அவமானமாகவே பார்க்கப்படுகிறது.
மேலும், அரசாங்கம் பாரிய வங்குரோத்து நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பது என்பதை எவராலும் மறுக்க இயலாது.
நாட்டில் அன்றாடம் போர்கொடி உயர்த்தும் போராட்டங்களுக்கு அளவின்றி சென்று கொண்டிருகிறது.
பல்வேறு காரணங்களை வைத்துப் போராடும் தொழிற்சங்கங்கள், உரப்பிரச்சினை தொடர்பாக மேலெழுந்த போராட்டம் ஒருபுறம், யுகதனவி மின் உற்பத்திப் பிரச்சினை ஒருபுறம்.
நாட்டிற்குள் சீனாவின் ஆதிக்கத்தால் கொதித்தெழுந்த சிங்கள பௌத்த தேரர்கள் ஒருபுறம், இப்படி இக்கட்டான நிலையில் தான் அரசாங்கம் இயங்கிக்கொண்டிருக்கிறது.
எதிர்கட்சிகளின் விமர்சனங்களுக்கும் பதில் வழங்க வேண்டும். மக்களையும் காப்பாற்ற வேண்டிய தார்மீக பொறுப்பு அரசிற்கு இருக்கிறது.
இந்த நிலையில் பணமின்றித் தவித்து வரும் இலங்கை மேலும் பாரிய கடன் நெருக்கடிக்குள் சிக்கும் அபாய நிலை இருப்பதாகவே பலர் விமர்சனம் செய்து வருகிறார்கள்.
இவ்வாறு நல்லாட்சியில் இருந்த பொருட்களின் விலைவாசிகளுக்கும், தற்போதைய விலைவாசிகளும் விண்ணை முட்டும் அளவுக்கு அதிகரித்து வருகிறது.
குறிப்பாக கூற வேண்டுமாக இருந்தால், அரசாங்கத்திற்குத் தெரியாமலேயே விலைகள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
இலங்கைத் தாய்திருநாட்டில் எத்தனை விடயங்கள் போராட்டங்களாக முழங்கினாலும், அவை மறுக்கப்படும் நீதிகளாகவே இருக்கின்றன.
உதாரணத்திற்கு காணாமல் ஆக்கப்பட்டவர்கள் காணாமலேயே போய்விட்டார்கள்.
இந்த நிலையில் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களின் கோஷம் என்பது சர்வதேசத்திற்கு நிச்சயம் உரைக்கும் விதமாகவே தான் அமைந்திருக்கும்.
நாட்டை கட்டியெழுப்பி, அபிவிருத்திகள் மேற்கொண்டாலும், இனப்படுகொலையாளி என்ற முத்திரை குத்தப்பட்டுவிட்டது.
அதனை அவ்வளவு சுலமாக ராஜபக்ஸக்கள் அகற்றிவிடமுடியாது என்பது ஆணித்தரமான கருத்தே ஸ்கொட்லாந்துப் போராட்டம்.
இந்தநிலையில் இறுதிப்போரில் சிறுபான்மை மக்களான தமிழர்களை இன அழிப்புக்குள்ளாக்கிய தற்போதைய இலங்கை அரச தலைவரான கோட்டாபய ராஜபக்சவை ஐ.நாவின் பருவநிலை மாநாட்டுக்கு அழைத்தது தவறு.
இதனை நினைத்து தாம் மிகவும் வருந்துவதாக Transnational tamil Academics for Justice என்ற அமைப்பு தெரிவித்துள்ளது.
கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்வதில் எந்த அர்த்தமும் இல்லை.
ஆனாலும் தமிழர்கள் இறுதியாகவும், அறுதியாகவும் ஒற்றை நிலைப்பாட்டில் இருக்கிறார்கள் என்பதை சர்வதேசத்திற்குப் புலர்த்திவிட்டார்கள்.
You must be logged in to post a comment Login