செய்திகள்

கெரவலப்பிட்டிய மின் உற்பத்தி நிலையம் மூலம் இத்தனை பில்லியன் இலாபமா?

Published

on

கெரவலப்பிட்டிய மின் உற்பத்தி நிலையத்தின் 40 வீத பங்கை அமெரிக்க நிறுவனத்துக்கு வழங்குவதன் மூலம், நாட்டுக்கு 110 பில்லியன் ரூபா லாபம் கிடைக்கின்றது.

அத்துடன் எதிர்வரும் ஒன்றரை வருடத்தில் இந்த வேலைத்திட்டத்தை ஆரம்பிக்க இருக்கின்றோம் என இலங்கை மின்சார சபை பொது முகாமையாளர் பொறியியலாளர் எம்.ஆர்.ரணதுங்க தெரிவித்தார்.

கெரவலப்பிட்டிய யுகதனவிய மின்உற்பத்தி நிலையத்தின் முதலீட்டு வேலைத்திட்டத்தின் நன்மை தீமை தொடர்பான கலந்துரையாடல் நேற்று தேசிய அபிவிருத்திக்கான ஊடக மையத்தில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

‘திரவ இயற்கை வாயு மூலம் மின்சாரத்தை பெற்றுக்கொள்ளவே கெரவலப்பிடிய யுகதனவிய 2010இல் அமைக்கப்பட்டது.

10வருடமாகியும் அதனை எங்களால் முன்னெடுக்க முடியாமல் போனது.

கெரவலப்பிடியவில் இருந்து 5 வீதம் வரையான மின்சாரமே பெறப்படுகின்றது. அத்துடன் அரசாங்கத்தின் இலக்காக இருப்பது 2030 வருடமாகும்போது நாட்டுக்கு தேவையான மின் உற்பத்தியில் 70வீதம் மீள் புத்தாக்க சக்தி ஊடாக பெறவேண்டும் என்பதாகும்.

அதன் பிரகாரம் திரவ இயற்கை வாயு மூலம் மின்சாரத்தை பெற்றுக்கொள்ளும் நோக்கில் கெரவலப்பிடிய யுகதனவிய மின்உற்பத்தி நிலையத்தின் 40வீத பங்கை அமெரிக்க நிறுவனம் ஒன்றுக்கு வழங்குவதற்கு இணக்கப்பாட்டுக்கு வந்திருக்கின்றாறோம்.

என்றாலும் ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவில்லை. இது இரகசியமாக மேற்கொள்ளப்படுவதொன்று அல்ல.

இதற்கு அமைச்சரவையினால் 4 தடவைகள் அனுமதி கிடைக்கப்பெற்றிருக்கின்றது. அத்துடன் 250 டொலர் மில்லியனுக்கு 40 வீத பங்கு வழங்கப்படுகின்றது.

இதனால் நாட்டுக்கு நன்மையாகும். அரசாங்கமும் குறித்த அமெரிக்க நிறுவனமும் இணைந்தே இந்த இணக்கப்பாட்டுக்கு வந்திருக்கின்றது.

கெரவலப்பிடியவில் இருக்கும் யுகதனவிய மற்றும் சுபதனவிய ஆகிய இரண்டு மின் உற்பத்தி நிலையங்களின் மூலம் மொத்தமாக நாட்டுக்கு 110 பில்லியன் ரூபா லாபம் கிடைக்கின்றது எனக் குறிப்பிட்டுள்ளார்.

#SrilankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version