செய்திகள்

மக்கள் மிகப்பெரும் விளைவுக்கு முகம்கொடுக்க வேண்டி வரும்! – இரா. சாணக்கியன் எச்சரிக்கை

Published

on

நாட்டில் ஒரு நாடு ஒரு சட்டம் எனும் செயலணி உருவாக்கப்பட்டதன் மூலம் தமிழ் மக்கள் பாரிய விளைவுக்கு முகம்கொடுக்கவேண்டிவரும் – இவ்வாறு மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.

இவ் விடயம் தொடர்பில், இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ள அவர் மேலும் தெரிவிக்கையில்,

இன்று காலை ஜனாதிபதியினால் புதிய செயலணியொன்று உருவாக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அந்த செயலணிக்கு கலகொடே அத்தே ஞானசார தேரர் தலைமைவகிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நாட்டில் உள்ள சட்டத்தினை அமுல்படுத்தினாலேயே போதுமானது. இருக்கின்ற சட்டத்தினை அனைவருக்கும் சமமாக நடைமுறைப்படுத்துங்கள் என்பதே எமது நிலைப்பாடாகும்.

ஜனாதிபதிக்கு வேண்டப்பட்டவர்கள், தமிழ்-முஸ்லிம் மக்களுக்கு எதிராக செயற்பட்டவர்களுக்கு ஒரு சட்டமும், வடகிழக்கு தமிழ் மக்களுக்கு ஒரு சட்டமும் என்ற நிலைப்பாடில்லாமல் ஒரு சட்டத்தினை அமுல்படுத்துங்கள் என்றே நாங்கள் கூறியிருந்தோம்.

அதனைவிடுத்து புதிதாக ஒரு நாடு ஒரு சட்டம் என்ற செயணியை உருவாக்குவதன் மூலம் இலங்கை நாட்டின் சட்டத்தினை மதிக்காத ஒருவரை ஜனாதிபதியாக கொண்டுவந்துள்ளனர். இந்த சட்டத்திற்கு எதிரான எங்களது கண்டனத்தினை தெரிவித்துக்கொள்கின்றோம்.

எதிர்காலத்தில் இதன் ஊடாக தமிழ் பேசும் மக்கள் பாரிய விளைவுகளுக்கு முகம்கொடுக்கும் நிலையுருவாகும்.

இன்று மக்கள் பல்வேறு பிரச்சினைகளுக்காக போராடி வருகின்ற நிலைகாணப்படுகின்றது. இன்னும் இரண்டு வருடத்தில் இந்த நாட்டில் பசியினால் மக்கள் உயிரிழக்கும் நிலையேற்படும்.

இவ்வாறான நிலையில் இலங்கையில் மக்களை திசைதிருப்புவதற்காக போலியான விடயங்களை செய்யாமல், நாட்டு மக்களின் நலனுக்காக செயற்படவேண்டும் என்ற கோரிக்கையினை முன்வைக்கின்றேன். – எனத் தெரிவித்துள்ளார்.

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version