செய்திகள்

சோமாலியாவை விட மிக மோசமான நிலைக்குத் தள்ளப்படுவோம்!-

Published

on

இந்திய இழுவைப் படகை எமது எல்லைக்குள் வருவதைத் தடுக்க வேண்டுமென கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்க சமாசத்தின் தலைவர் நா.வர்ணகுலசிங்கம் தெரிவித்துள்ளார்.

வடமராட்சி வடக்கு மற்றும் வடமராட்சி கிழக்கு மீனவ சங்கங்களின் ஊடக சந்திப்பானது இன்றையதினம் யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்றது.

இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் அதிகரித்துகொண்டே செல்கிறது. இன்னும் 6 மாதங்களுக்குள் சோமாலியாவை விட மிக மோசமான நிலைமைக்குத் தள்ளப்படுவோம் என அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

எங்கள் கடற்பரப்புக்குள் அத்துமீறி வருபவர்களை ஏன் இந்திய அரசாங்கம் பார்த்துக்கொண்டு இருக்கிறது என்று எமக்கு புரியவில்லை.

உங்கள் கடல் வளங்கள் முழுவதையும் அழித்து விட்டீர்கள். மனசாட்சி இல்லாமல் எங்களுடைய வளங்களையும் அழிக்க முற்படுகின்றார்கள். எங்கள் வளம் முற்றாக அளிக்கப்பட்டால் நாம் கேவலமான நிலைக்கு தள்ளப்படுவோம்.

எங்கள் உயிர் போனாலும் சரி தமிழ்நாட்டு மீனவர்கள் உயிர் போனாலும் சரி எல்லாமே ஒன்று தான்.

இந்திய மீனவரின் உயிரிழப்புக்கு ஒருகோடி ரூபா இழப்பீடு கோரப்படுகிறது. இந்திய இழுவைப்படகுகளால் நாங்கள் பல கோடிகளை இழந்திருக்கிறோம். உங்கள் இழப்பீட்டை கழித்துக் கொண்டு மீதியை எமக்குத் தாருங்கள்.

தமிழக மக்கள் தொப்புள் கொடி உறவு தான். ஆனால் நாங்கள் உணவுக்காக கஷ்டப்படும் போது தொப்புள் கொடியைப் பார்க்க முடியாது.

பெரு முதலாளிகளதும் அமைச்சர்களுடைய படகுகளுமே இங்கு அத்துமீறி வருகின்றது. இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

உங்கள் அரசியலை குப்பையில் போடுங்கள். சட்டத்தை நடைமுறைப்படுத்தி விட்டு இங்கு வந்து பேசுங்கள். அத்துமீறி மீன் பிடிப்பது தொடர்பாக இரண்டு சட்டங்கள் காணப்படுகின்றன. அவற்றை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.

நாடு சோமாலியாவை விட மிக மோசமான நிலைக்கு செல்லப் போகின்றது.இவற்றைப் பற்றியும் மக்கள் பிரச்சினை பற்றியும் பேச அரசியல்வாதிகளிடம் வலியுறுத்துகிறோம். மக்களுக்கு தேவையானவற்றை அரசாங்கத்துடன் பேசி செய்யுங்கள் நாங்கள் வரவேற்கிறோம்.

ஆனால் எங்கள் விடயத்தை அரசியலுக்குள் புகுத்த வேண்டாம். ஜனாதிபதி பிரதமர் கடற்றொழில் அமைச்சரிடம் நாங்கள் கோருவது என்னவென்றால் எமது கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைபவர்களையும் சட்டவிரோதமான தொழிலையும் அனுமதிக்க வேண்டாம். அவற்றுக்கு சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

இதன்போது கருத்து தெரிவித்த கொட்டடி கடற்றொழிலார் கூட்டுறவு சங்க உபதலைவர் வீ.அரிகிருஷ்ணன்

இந்தியாவின் எந்தெந்த பகுதியில் இருந்து இங்கு படகுகள் வருகின்றன என்பது எமக்கு தெரியும். அத்துமீறுபவர்களை தடுக்க முற்பட்டோம். ஆனால் முடியாமல் போய்விட்டது.

இனிமேலும் இந்த இழுவைப் படகுகளை எங்கள் எல்லைக்குள் விட வேண்டாமென தமிழக முதலமைச்சரிடம் கேட்டுக் கொள்கின்றோம். அவர் நினைத்தால் கட்டுப்படுத்த முடியும் என்றார்.

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version