செய்திகள்

13 ஐ முழுதாக நிறைவேற்றியே தேர்தல் நடத்தப்பட வேண்டும்! – ரெலோ

Published

on

தமிழ்க் கட்சிகள் ஒருமித்துக்கோருவது அவசியம்  எனவும் வலியுறுத்தல்

“எதிர்காலத்தில் மாகாண சபைத் தேர்தல் எப்போது நடத்தப்படுவதாக இருந்தாலும் அரசமைப்பில் 13ஆவது திருத்தச் சட்டம் முற்றுமுழுதாக நிறைவேற்றப்பட வேண்டும். அதன்பின்னரே மாகாண சபைத் தேர்தல் நடத்துவது அர்த்தமுள்ளதாக அமையும்.”

– இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சி ரெலோ வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பில் அந்தக் கட்சியின் ஊடகப் பேச்சாளர் குருசாமி சுரேந்திரன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-

“நடப்பிலிருக்கும் 13ஆவது திருத்தச் சட்டம் உலக்கை தேய்ந்து உளிப்பிடியான கதையாக இருக்கின்றது. கடந்த காலங்களில் மாகாண சபையின் பல அதிகாரங்கள் பறிக்கப்பட்டு மட்டுப்படுத்தப்பட்ட நிலையில் காணப்படுகின்றன.

13ஆவது திருத்தச் சட்டத்தின் அடிப்படையிலான மாகாண சபை எங்களுடைய அரசியல் தீர்வாக நாங்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால், இருக்கக்கூடிய அரசியல் அதிகாரங்களை இழப்பது என்பது சாணக்கியமானதல்ல.

மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படலாம் என அரசு அறிவித்துள்ளது. இந்தநிலையில் அதிகாரங்கள் பறிக்கப்பட்ட ஒரு மாகாண சபை முறைமையை நாங்கள் ஏற்பதா அல்லது முற்றுமுழுதாக 13ஆவது திருத்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட அதிகாரங்கள் வழங்கப்பட்ட மாகாண சபையை ஏற்பதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதற்கான சரியான நிலைப்பாட்டைத் தமிழ்த் தேசிய கட்சிகள் அனைத்தும் எட்ட வேண்டியது மாத்திரமல்ல வலியுறுத்த வேண்டியதும் கட்டாயமானதாகும்.

அண்மையில் இலங்கைக்கு வருகைதந்த இந்திய வெளிவிவகாரச் செயலாளர் தமிழர் அரசியல் தீர்வில் இந்தியாவின் நிலைப்பாடு சம்பந்தமான தீர்க்கமான கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.

13ஆவது திருத்தச் சட்டத்தை முற்றுமுழுதாக நடைமுறைப்படுத்துவது, அதன் அடிப்படையிலான மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்துவது, அந்தக் கோரிக்கையை தமிழ்த் தேசியக் கட்சிகள் அனைத்தும் ஒருமித்து நின்று கோருவது என்பனவே அவை. இதனூடாக இதை தாண்டிய அரசியல் தீர்வை தமிழ் மக்கள் பெற்றுக்கொள்ள முடியும்.

இந்தியா தொடர்ந்தும் இதை வலியுறுத்தி வந்தாலும் தமிழர் தரப்பு ஒருமித்த நிலையில் கோரவில்லை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்தச் செய்தியை தமிழர் தரப்பு சரியாகப் புரிந்துகொண்டதோ, இல்லையோ இலங்கை அரசு தந்திரமாக கையாள முற்பட்டுள்ளது.

இந்தநிலையில், 13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்தி மாகாண சபைகளின் சுயாதீனத்தை உறுதிப்படுத்த அரசமைப்பில் ஏற்படுத்த வேண்டிய மாற்றங்கள் பற்றிய நீதிமன்ற தீர்ப்புகளும் தமிழ்த் தரப்பால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளும் உள்ளன.

தேர்தல் அறிவிப்பைத் தொடர்ந்து தேர்தல் வியூகங்களை வகுப்பதற்கு முன்னர், தற்போது அரசமைப்பில் இருக்கும் குறைந்தபட்ச அதிகாரப் பகிர்வை அர்த்தமுள்ளதாக ஆக்குவதற்கு தமிழர் தரப்பு ஒருமித்த கோரிக்கையை சம்பந்தப்பட்ட தரப்புகளான இந்திய அரசிடமும் இலங்கை அரசிடமும் முன்வைக்க வேண்டியது கட்டாயமாக உள்ளது.

இதை நாம் தொடர்ந்தும் பல காலமாக வலியுறுத்தி வந்துள்ளோம். இன்று வரலாறு அந்தப் புள்ளியில் தமிழினத்தை கொண்டுவந்து நிறுத்தியுள்ளது. விமர்சனங்களை கடந்து ஆக்கபூர்வமாக ஒருமித்த நிலைப்பாட்டில் செயலாற்ற தமிழ்த் தேசியக் கட்சிகளைக் கோருகின்றோம்” – என்றுள்ளது.

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version