செய்திகள்

சம்பளம் வழங்க முடியாது அரசாங்கம் திண்டாட்டம்! – நாடாளுமன்ற உறுப்பினர் கு.திலீபன் தெரிவிப்பு

Published

on

கொரோனா காரணமாக ஏற்பட்ட வீழ்ச்சியினால் அரசாங்க ஊழியர்களுக்கு கூடுதல் சம்பளத்தினை வழங்கமுடியாது அரசாங்கம் திண்டாடுகின்றது என வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் கு. திலீபன் தெரிவித்துள்ளார்.

வவுனியா ஆச்சிபுரம் கிராமத்தில் 14 லட்சம் பெறுமதியில் கிராமப்புற மற்றும் பிராந்திய குடிநீர் விநியோக திட்டங்கள் இராஜாங்க அமைச்சின் ஊடாக அமைக்கப்படவுள்ள சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,

இந்தியாவின் அழுத்தத்தினால் மாகாணசபை தேர்தல் நடைபெறவில்லை. தீர்க்கமான முடிவெடுக்ககூடிய மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் உள்ள அரசாங்கம் அனைத்து உறுப்பினர்களுடனும் கலந்துரையாடியே இந்த தேர்தல் நடத்துவதாக தீர்மானித்துள்ளது.

எனினும் திகதியோ மாதமோ இன்றும் அறிவிக்கப்படவில்லை. ஆனால் இந்தியாவின் அழுத்தம் என்பது பொய். எமது நாடு சுயமாக ஒரு தீர்மானம் எடுக்ககூடிய வளம்மிக்க நாடு.

இந்நிலையில் புதிய திட்டங்களை வரப்போகும் வரவு செலவுத் திட்டத்தில் பார்த்து அறிந்துகொள்ளலாம். அதில் வறுமைக்கோட்டிற்குட்பட்ட கிராமங்களுக்கே முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக எமது வன்னி பிரதேசத்திற்கும். அதற்கு ஏனைய அமைச்சர்களும் இணக்கம் தெரிவித்துள்ளனர்.

அதுமட்டுமல்ல இன்று வாழ்க்கை செலவீனம் அதிகரித்துள்ளது என்பது நாட்டில் ஏற்பட்ட கொரோனா வீழ்ச்சியால் இன்று அரசாங்கம் அரச உத்தியோகத்தர்களுக்கான சம்பளத்தினை கொடுப்பதற்கு கூட பெரும் திண்டாட்டமான நிலை ஏற்படுகின்றது. அதனால்தான் அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றமும் இடம்பெற்றுள்ளது. இது நிரந்தரமானதல்ல. தற்காலிகமானது.

அத்துடன் சேதனப் பசளை திட்டத்தினை எமது அரசாங்கம் முன்னெடுத்தது. ஆனால் எதிர்க்கட்சிகளும் இங்குள்ள விதண்டாவாதிகளும் சேதனப்பசளை நாட்டிற்கு ஒவ்வாது விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர் என்கின்றனர்.

உயிருடன் விளையாடக்கூடிய விளையாட்டுத்தான் இரசாயன உரம். வவுனியா நொச்சுமோட்டை கிராமத்திற்கு அருகில் உள்ள கிராமத்தில் 4 அடி நிலத்தினை தோண்டினால் வெள்ளை கழியாக உள்ளது. அதற்கு காரணம் அங்கு போடப்பட்ட யூரியா உரம். அது எவ்வாளவு பாதிப்பானது.

எனவே எந்த திட்டத்தினை முன்னெடுத்தாலும் அது கடினமாகத்தான் இருக்கும் பின்னர் அது சரியாக வரும் அதனை நம்பலாம் என தெரிவித்தார்.

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version