செய்திகள்

வெளிநாட்டவர்களை நாடு கடத்த ஜனாதிபதி அதிரடி உத்தரவு!

Published

on

நாட்டில் அதிகரித்துள்ள நிதி மோசடிகளுக்கு தொடர்புடைய அனைத்து நைஜீரிய நாட்டவர்களையும் உடனடியாக நாடு கடத்துமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உத்தரவிட்டுள்ளார்.

குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளருக்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, நுகேகொட, மிரிஹான குடிவரவு குடியகல்வு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 44 நைஜீரிய நாட்டவர்கள் அரசாங்க செலவில் விசேட விமானம் மூலம் நாடு கடத்தப்படவுள்ளனர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நைஜீரியர்களை நாடு கடத்த சுமார் 41 லட்சம் ரூபா வரை செலவாகும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ள நிலையில், அந்த தொகையில் 80 வீதத்தை பொலிஸ்மா அதிபர் நிதியத்திலிருந்து வழங்க பொலிஸ்மா அதிபர் சந்தன விக்ரமரத்ன இணக்கம் தெரிவித்துள்ளார்.

இவர்கள் குறித்த முகாமில் இருந்த நிலையில் பரிசு பெட்டி அனுப்புவதாக கூறி பல்வேறு நபர்களை ஏமாற்றி பணம் கொள்ளையடித்துள்ளனர் எனத் தெரிய வந்துள்ளது.

எவ்வாறாயினும் இதுவரை நைஜீரியர்களின் நிதி மோசடி தொடர்பில் 44 சந்தேக நபர்கள் கைதாகி தடுப்பு முகாமில் உள்ளபோதும் அவர்களில் 24 பேருக்கு வழக்கு தொடரப்பட்டுள்ள நிலையில், அவர்களை நாடு கடத்துவது தொடர்பில் சிக்கல் நிலவுகிறது என அறிய முடிகிறது.

மிரிஹான முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 44 நைஜீரியர்களில் 24 பேர், தங்கள் மீது நிதி மோசடி குற்றச்சாட்டு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது எனக் கூறி இலங்கையில் தங்க முயற்சிப்பது தெரியவந்துள்ளது.

எனினும் சட்டமா அதிபருடன் கலந்துரையாடல் மேற்கொண்டு இந்த நபர்களை உடனடியாக நாடு கடத்த நடவடிக்கை எடுக்க குடிவரவு குடியகல்வு திணைக்கள கட்டுப்பாட்டாளருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேறு விமான நிறுவனங்கள் மூலம் இவர்களை நைஜீரியாவுக்கு அனுப்ப முயற்சித்த போதிலும் விமான நிறுவனங்கள் அதனை நிராகரித்துள்ளன. இதன் காரணமாக ஸ்ரீலங்கன் விமானத்திலேயே இவர்கள் நாடு கடத்தப்படவுள்ளனர்.

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version