செய்திகள்

சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு நாட்டின் ஜனாதிபதி மற்றும் பிரதமர் வாழ்த்துச் செய்தி

Published

on

ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.

அந்தவகையில் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, ‘உலகம் முகங்கொடுத்திருக்கும் தொற்றுப் பரவலுக்கு மத்தியில், அனைத்துச் சிறுவர் சமுதாயத்தினதும் எதிர்பார்ப்புகளுடன் கூடிய சிறுவர் உலகத்துக்கான வரையறைகள் அதிகரித்துள்ளன.

பாடசாலை வகுப்பறைகள், விளையாட்டு மைதானங்கள் ஆகியன எமது பிள்ளைகளுக்குத் தொலைதூரமாகியுள்ளன.

ஆகவே எமது பிள்ளைகள் இழந்துள்ள அந்த அனைத்து எதிர்பார்ப்புகளையும் மிகவும் பாதுகாப்பாக மீளப் பெற்றுக்கொடுப்பதே அரசாங்கத்தின் முதல் கடமையாக காணப்படுகின்றது.

சிறுவர்களின் உலகத்தை அவர்களுக்கு மிக விரைவில் பெற்றுக்கொடுப்பதற்கே, எங்களுடைய ஒட்டுமொத்தத் திட்டங்களும் செயற்படுத்தப்பட்டு வருகின்றன.

சமூகமயமாக்கல் செயற்பாட்டில் முன்னோடியாக இருக்கும் அனைத்து வகையான பெரியோர்களும், சிறுவர்கள் தொடர்பான பொறுப்புக்களை ஒருபோதும் குறைத்து மதிப்பிட முடியாது.

ஆகவே குழந்தைகளுக்கு உரித்தான குழந்தைப் பருவத்தை அவர்கள் சுதந்திரமாக அனுபவிக்க இடமளிக்குமாறு அனைவரிடமும் நான் கேட்டுக்கொள்கிறேன். அந்தப் பருவத்தை ஒருபோதும் நாம் மீளப்பெற முடியாது.

மேலும் தொற்றுப் பரவல் நிலைமை காரணமாக சிறுவர் தினத்தை, வீடுகளில் இருந்தவாறே மகிழ்ச்சியாக கொண்டாடுவதற்கு சிறுவர்களை ஆசிர்வதிக்கின்றேன்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேபோன்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது, “ஓடித் திரியும் பராய சுதந்திரத்தை இழந்து, முடங்கியிருக்கும் சிறுவர்களின் மனங்களை நாம்தான் அழகுபடுத்த வேண்டும்.

சிறுவர்களின் உரிமைகளை பாதுகாப்பதற்கு முன்னுரிமை வழங்குவது அனைத்து மனித வர்க்கத்தினரதும் கட்டாய கடமையாகும்.

பெரியவர்களுக்கு அக்கடமையை நினைவூட்டும் வகையில் இலங்கையில் கொண்டாடப்படும் ‘சிறுவர் தினத்தை’ முன்னிட்டு வாழ்த்து தெரிவிப்பதில் பெரும் மகிழ்ச்சியடைகின்றேன்.

மேலும் நாட்டினது எதிர்காலம் போன்றே உலகத்தின் எதிர்காலமும் குழந்தைகளிலேயே தங்கியுள்ளது.

நாம் சிறுவர்களின் உரிமைகளை உறுதிபடுத்துவதற்கு எப்போதும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகிறோம்.

நல்லொழுக்கம் மற்றும் ஆற்றல் நிறைந்த சிறுவர் தலைமுறை எதிர்காலத்தின் இருளை நீக்கும் என்பது எமது நம்பிக்கையாகும்.

சிறுவர் உரிமைகளை உறுதிபடுத்துவதற்கு நாம் ‘சுபீட்சத்தின் நோக்கு’ கொள்கை திட்டத்தின் ஊடாகவும் உறுதி பூண்டுள்ளோம்.

கொரோனா தொற்று நிலைமை காரணமாக உலகின் பிற நாடுகள் போன்றே நமது நாட்டு சிறுவர்களது குழந்தை பருவமும் மிகுந்த சிக்கலாகியுள்ளது.

சுதந்திரமாக ஓடித் திரியும் சுதந்திரத்தை இழந்து வீடுகளுக்குள் முடங்கிக் கிடப்பதானது சிறுவர்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தும் என்பது அனைவரும் அறிந்த விடயமாகும்.

ஆகையினால் உலகளாவிய தொற்று நிலைமை காணப்படும் இவ்வாறானதொரு சூழ்நிலையில் குழந்தைகள் மன அழுத்தத்திற்கு உள்ளாகாத வகையில் அவர்களை பராமரித்துக் கொள்வது தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்துமாறு பெற்றோர்களிடம் நான் கேட்டுக் கொள்கின்றேன்.

சிறுவர்களுக்கான நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கான கொரோனா தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டத்தை அரசாங்கம் ஏற்கனவே ஆரம்பித்துள்ளது.

விசேட தேவையுடைய சிறுவர்களுக்கு முன்னுரிமை அளித்து அதனை துரிதகதியில் நிறைவுசெய்வது அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version