செய்திகள்

டுபாயில் முதல் வெற்றியை பதிவு செய்தது சென்னை சுப்பர் கிங்ஸ்!

Published

on

கொரோனா வைரஸ் பரவலால் இடையில் நிறுத்தப்பட்ட இந்திய பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டித் தொடர் நேற்று மீண்டும் ஆரம்பமாகியது.

டுபாயில் நேற்று ஆரம்பமான முதல் போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணியும் மும்பை இந்திய அணியும் பங்கேற்றன.

14வது ஐ.பி.எல். ரி-20 கிரிக்கெட் போட்டி கடந்த ஏப்ரல் மாதம் 9ஆம் திகதி ஆரம்பமாகியது.

போட்டிகள் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வந்த நிலையில் 4 அணிகளைச் சேர்ந்த சில வீரர்கள் கொரோனா தொற்றுக்குள்ளானதால் மே மாதம் மூன்றாம் திகதியுடன் ஐ.பி.எல். போட்டி காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது. அதுவரை 29 லீக் போட்டிகள் நடந்து முடிந்திருந்தது.

இந்த நிலையில் எஞ்சியுள்ள 31 போட்டிகள் ஐக்கிய அரபு இராஜ்சியத்தில் உள்ள டுபாய், அபுதாபி, சார்ஜா ஆகிய நகரங்களுக்கு மாற்றப்பட்டு 4 மாதங்களுக்கு பின்னர் நேற்று மீண்டும் ஆரம்பமானது.

அதன்படி, 14வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின் 2வது கட்ட போட்டிகள் டுபாயில் நேற்று இடம்பெற்றன.

போட்டியில் 5 முறை சாம்பியனான ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், முன்னாள் சாம்பியன் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் பங்கேற்றன.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற சென்னை சுப்பர் கிங்ஸ் அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.

அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் ஆறு விக்கட்டுக்களை இழந்து 156 ஓட்டங்களைப் பெற்றது.

ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ருதுராஜ் மாத்திரமே சிறப்பாக விளையாடி அரைசதம் கடந்தார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஆரம்பம் சரியாக அமையவில்லை.

டு பிளிஸ்சிஸ், மொயீன் அலி, அம்பத்தி ராயுடு (காயம் காரணமாக வெளியேறினார்) ஆகியோர் ஓட்டம் எதுவும்பெறாமல் வெளியேறினர்.

அணித் தலைவர் டோனி 3 ஓட்டங்களுடனும், சுரேஷ் ரெய்னா 4 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர். இதனால் சென்னை அணி 24 ஓட்டங்களுக்குள் 4 விக்கெட்டை இழந்தது.

ஒரு பக்கம் விக்கெட் வீழ்ந்தாலும் மறுமுனையில்  ருதுராஸ் அபாரமாக விளையாடினார். அவருக்கு உறுதுணையாக விளையாடிய ஜடேஜா 33 பந்தில் 26 ஓட்டங்களைப் பெற்றார்.

ஜடேஜா ஆட்டமிழக்கும்போது சி.எஸ்.கே. 16.4 ஓவரில் 105 ஓட்டங்களைப்பெற்றிருந்தது. அடுத்து வந்த பிராவோ அதிரடியாக விளையாடி 8 பந்தில் 3 சிக்சருடன் 23 ஓட்டங்களைப் பெற்றார்.

துடுப்பாட்டத்தில் ருதுராஜ் 58 பந்தில் 88 ஓட்டங்களைப் பெற்றார். அதன்படி, சென்னை சூப்பர் கிங்ஸ் 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 156 ஓட்டங்களைப் பெற்றது.

பின்னர் 157 ஓட்டங்கள் என்ற வெற்றி என்ற இலக்குடன் மும்பை இந்தியன்ஸ் அணி களம் இறங்கியது. ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் குயின்டான் டி கொக் 17 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தார்.

அடுத்து வந்த சூர்யகுமார் யாதவ் 3 ஓட்டங்களுடனும் இஷான் கிஷன் 11 ஓட்டங்களுடனும் வெளியேறினர்.

இதனால் மும்பை இந்தியன்ஸ் 58 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டை இழந்தது. நேற்றைய போட்டியில் மும்பை இந்தியன் அணிக்கு தலைமை தாங்கிய பொல்லார்ட் 15 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தார்.
அதன்படி, மும்பை இந்தியன் அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 136 ஓட்டங்கைள மாத்திரமே பெற்றது.

அதற்கமைய சென்னை சூப்பர் கிங்ஸ் 20 ஓட்டங்களால் வெற்றி பெற்றது. இந்த வெற்றி மூலம் ஐபிஎல் தொடரில் 8 போட்டிகளில் விளையாடி 6-ல் வெற்றி பெற்றுள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலிடத்தைப் பிடித்துள்ளது.

சென்னை அணி 8 போட்டிகளில் 2 தோல்வி 6 வெற்றி என 12 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.
டெல்லி கேப்பிடல்ஸ் அணி 8 ஆட்டங்களில் 2 தோல்வி, 6 வெற்றி என 12 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது.

பெங்களூரு ரோயல் சேலஞ்ரஸ் அணி 7 போட்டிகளில் விளையாடி 5-ல் வெற்றி பெற்று 10 புள்ளிகளுடன் 3ஆம் இடத்தில் உள்ளது.மும்பை இந்தியன்ஸ் அணி 8 போட்டிகளில் விளையாடி 4-வெற்றி, 4 தோல்வியுடன் 8 புள்ளிகளைப் பெற்று 4-ம் இடத்தில் உள்ளது.

இதனிடையே, ரோகித் சர்மா ரி-20 போட்டியில் புதிய சாதனை ஒன்றை படைக்க உள்ளார்.
ரோகித் சர்மா டி20 கிரிக்கெட் இதுவரை 397 சிக்சர்கள் விளாசியுள்ளார்.

இந்த நிலையில் இன்னும் மூன்று சிக்சர்கள் பெற்றால் டி20 கிரிக்கெட்டில் 400 சிக்சர்கள் விளாசிய முதல் இந்திய துடுப்பாட்ட வீரர் என்ற சாதனையை ரோஹித் சர்மா படைப்பார்.

 

கோலியின் அறிவிப்பும் – ரசிகர்களின் அதிர்ச்சியும்

ரோஹித் குறித் செய்தி இவ்வாறு இருக்க விராட் கோலி தொடர்பான செய்தி ஒன்றும் வெளியாகியுள்ளது.

அதாவது, ரோயல் செலஞ்சர் பெங்களுர் அணியின் தலைவர் பதவியில் இருந்து விலகப்போவதாக விராட் கோலி அறிவித்துள்ளார்.

பதவியிலிருந்து விலகினாலும் ஒரு துடுப்பாட்ட வீரராக ஆர்.சி.பி. அணிக்கு தனது பங்களிப்பை முழுமையாக வழங்குவேன் என விராட் கோலி கூறியுள்ளார்.

ஆர்.சி.பி. அணியின் தலைவராக செயல்பட்டு வரும் விராட் கோலி, ஐபிஎல் தொடருக்கு பிறகு தான் தலைவர் பதவியிலிருந்து விலகுகிறேன் என அறிவித்துள்ளார்.

முன்னதாக, அடுத்த மாதம் ஆரம்பமாகும் உலக கிண்ண ரி-20 கிரிக்கெட் போட்டித் தொடருக்கு பின்னர் இந்திய ரி-20 அணித் தலைமைப் பதவியில் இருந்தும் விலகவுள்னேன் விராட் கோலி அறிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இன்றைய ஆட்டத்தில் றோயல் சலெஞ்சஸ் – கொல்கொத்தா நைட் ரைடர்ஸ்

இதனிடையே. விராட் கோலி தலைமையிலான றோயல் சலெஞ்சஸ் பங்களுர் அணிக்கும் கொல்கொத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கும் இடையிலான போட்டி இன்று அபுதாபியில் இடம்பெறவுள்ளது.

இந்த போட்டியின் போது பெங்களூரு அணியினர் வழக்கமான சிவப்பு நிற சீருடைக்கு பதிலாக நீல நிற உடை அணிந்து விளையாட உள்ளனர்.

போட்டி முடிந்ததும் இந்த சீருடை ஏலம் விடப்பட்டு அதன் மூலம் கிடைக்கும் நிதியை இந்தியாவில் கொரோனா தடுப்பூசி பணிகளுக்கு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது என அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.

றோயல் சலெஞ்சஸ் பங்களுர் அணியின் சார்பில் இரண்டு இலங்கை வீரர்கள் விளையாடவுள்ளனர். வனிது ஹசரங்க மற்றும் துஸ்மத்த சமீர ஆகியோர் றோயல் சலெஞ்சஸ் பங்களுர் அணிக்கு உள்வாங்கப்பட்டுள்ளனர்.

இலங்கை வீரர்களின் வருகை தமது அணிக்கு பலம் சேர்க்கும் என அணித்தலைவர் விராட் கோலி குறிப்பிட்டுள்ளார்.

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version