செய்திகள்
காலாவதியான பொருள் விற்பனை! – சதொச முகாமையாளருக்கு எதிராக வழக்கு!!
காலாவதியான பொருள்களை விற்பனை செய்தமை தொடர்பில் சுன்னாகம் சதொச விற்பனை நிலைய முகாமையாளருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது இதனைத் தெரிவித்தார்.
இந்த சந்திப்பின்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
தற்போது உள்ள நிலைமையில் பொருள்கள் பதுக்கி வைத்திருப்பது, மற்றும் அரசாங்கம் நிர்ணயித்த விலையை விட அதிக விலைக்கு விற்பனை செய்வது போன்றவை தண்டனைக்குரிய குற்றமாகும்.
இது தொடர்பில் பார்வையாளர்கள் அதிகார சபையின் புலனாய்வு அதிகாரிகள் திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
குறிப்பாக கூட்டுறவு நிலையங்கள், சதொச விற்பனை நிலையங்கள் அதேபோல் வர்த்தக நிலையங்கள் மீது பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை புலனாய்வு அதிகாரிகள் இந்த விலைக் கட்டுப்பாடு மற்றும் அதிக விலைக்கு விற்பனை செய்வது தொடர்பில் திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
சுன்னாகம் சதொச விற்பனை நிலையத்தில் 2020 ஆம் ஆண்டு காலாவதியான பொருள்களை காட்சிப்படுத்தி விற்பனை செய்தமை மற்றும் மேலதிகமான பொருள்களை தரையில் வைத்து விற்பனை செய்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் பொதுமக்கள் வழங்கிய முறைப்பாட்டுக்கு அமையவே சதொச விற்பனை நிலைய முகாமையாளருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டது என யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்தார்.
அதேபோல் காலாவதியான பொருள்களை விற்பனை செய்தமை தொடர்பில் அச்சுவேலி பலநோக்கு கூட்டுறவு சங்கத்துக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
குறித்த வழக்கு மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் பாரப்படுத்தி சட்ட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது என அவர் தெரிவித்தார்.
You must be logged in to post a comment Login