செய்திகள்
இரண்டு மாதங்களாக தேங்கி கிடக்கும் சீனி கொள்கலன்கள்!
இரண்டு மாத காலங்களாக இறக்குமதி செய்யப்பட சுமார் 600 சீனி கொள்கலன்கள் கொழும்பு துறைமுகத்தில் தேங்கியுள்ளன என இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த கொள்கலன்களில், 433 கொள்கலன்கள் ஒன்பது இறக்குமதியாளர்களால் இறக்குமதி செய்யப்பட்டவை என்று தெரிவிக்கப்படுகிறது. இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட இந்த கொள்கலன்கள் சுமார் 12 ஆயிரம் மெற்றிக் தொன் சீனியைக் கொண்டுள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சீனி கொள்கலன்கள் இரண்டு மாதங்களாக துறைமுகத்தில் தேங்கியுள்ளதால் ஒரு கிலோ சீனிக்கு தாமதக் கட்டணமாக ரூபா 20 முதல் 25 வரை செலுத்த வேண்டும் என்று இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை, மற்றுமொரு சீனி கொள்கலன்களும் இரண்டு மாதங்களாக கொழும்பு துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளன. இறக்குமதியாளரால் அனுமதிப்பத்திரம் இல்லாமல் இறக்குமதி செய்யப்பட்ட மற்றொரு தொகுதி கொள்கலன்களே இவ்வாறு தடுத்துவைக்கப்பட்டுள்ளன என தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த இறக்குமதியாளரால் மியான்மாருக்கு 130 சீனி கொள்கலன்கள் அனுப்பப்பட்ட நிலையில், அந்த நாட்டில் ஏற்பட்டுள்ள பிரச்சனை காரணமாக குறித்த கொள்கலன்கள் கொழும்பு துறைமுகத்துக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளன.
இந்த கொள்கலன்களை நாட்டுக்குள் கொண்டுவர இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டாளர் அனுமதிக்காததால், அவற்றை மீண்டும் ஏற்றுமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இந்த சீனி கொள்கலன்களை, லங்கா சதொச நிறுவனம் கொள்வனவு செய்ய தீர்மானித்துள்ளது என துறைமுகங்கள் மற்றும் கப்பல் துறை அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.
இதேவேளை, லங்கா சதொச நிறுவனம் சீனியை கொள்வனவு செய்யும்போது, தாமதமான கட்டணத்திலிருந்து இறக்குமதியாளர்களுக்கு விலக்கு அளிக்கப்படும் என்று வர்த்தக அமைச்சர்பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
அத்துடன், நாட்டில் தற்போது சீனி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், சதொச நிறுவனம் மூலம் சலுகை விலையில் சீனி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
You must be logged in to post a comment Login