அழகுக் குறிப்புகள்

இளமையுடன் ஜொலிக்க வைட்டமின் ஈ

Published

on

சரும பராமரிப்புக்காக தயாரிக்கப்படும் பொருட்களில் வைட்டமின் ஈ சேர்க்கப்படுகிறது. சருமம் முதிர்ச்சி அடைவதை தள்ளிப்போடும் ஆற்றல் இதற்கு உண்டு. ஆன்டிஆக்சிடெண்டுகள் வைட்டமின் ஈயில் அதிகமாக உள்ளது. வைட்டமின் ஈ சத்து போதுமான அளவு இருந்தால் உடலில் ஏற்படும் பிரச்சனைகளை எளிதாக தடுக்கலாம்.

உணவின் மூலம் வைட்டமின் ஈ சத்தை நேரடியாக பெற்று இயற்கையான வழியில் அழகை பாதுகாக்க முடியும். சூரியகாந்தி விதைகள், பாதாம், வேர்க்கடலை, அரிசி தவிடு மற்றும் கோதுமை தவிடுகளில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய் பசலைக்கீரை போன்றவற்றில் வைட்டமின் ஈ அதிகமாக உள்ளது.

நகங்கள் பராமரிப்பு

கைகளுக்கு தொடர்ந்து வேலை கொடுப்பவர்களின் நகங்கள் வலிமை குறைந்து அழகின்றி நிறம் மங்கி காணப்படும். நகங்களை சுற்றிலும் தோல் உரிதல், சருமம் கருமை அடைதல் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். இரவில் தூங்குவதற்கு முன்பு வைட்டமின் ஈ சத்துள்ள எண்ணெய்யை நகங்களை சுற்றியும், விரல்களிலும் தடவி மென்மையாக வட்ட வடிவில் மசாஜ் செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதால் நகங்கள் இயற்கையான வெளிர் சிவப்பு நிறத்தோடும் வலிமையோடும் காணப்படும்.

கருவளையம் மறைவதற்கு

கருவளையம் முகத்தின் பொலிவை குறைப்பதோடு வயது முதிர்ந்த தோற்றத்தையும் ஏற்படுத்துகிறது. சிலருக்கு கருவளையத்தோடு கண்களை சுற்றியுள்ள சருமத்தில் சுருக்கங்களும் ஏற்படும். இவர்கள் தினமும் இரவு தூங்குவதற்கு முன்பு வைட்டமின் ஈ சத்துள்ள எண்ணெயை கண்களை சுற்றிலும் தடவி மென்மையாக மசாஜ் செய்து வந்தால் கருவளையமும் சுருக்கங்களும் நீங்கி கண்களில் பொலிவு ஏற்படும்.

இரவு நேர சரும பராமரிப்பு

குறைந்த அளவிலான மேக்-அப் போட்டிருந்தாலும் இரவு தூங்க செல்வதற்கு முன்பு அதை முழுவதுமாக கலைத்து முகத்தை நன்றாக சுத்தம் செய்ய வேண்டும. மேக் அப் பொருட்களில் உள்ள வேதி மூலக்கூறுகள் சருமத்தை சேதடைய செய்து பருக்கள் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். வைட்டமின் ஈ சத்துள்ள எண்ணெயை சில துளிகள் எடுத்து முகம் மற்றும் கழுத்துபகுதியில் தடவலாம். இதனால் முகத்தில் எண்ணெய் வடியும் சிரமம் ஏற்படாது. வைட்டமின் ஈ சத்துள்ள எண்ணெய் வறண்ட முகத்துக்கு ஈரப்பதம் அளிக்கும்.

இளமையான சருமம்

தளர்வு அடைந்த சருமங்கள் வயதான தோற்றத்தை ஏற்படுத்தும். சருமத்தை சரியாக பராமரிக்காவிட்டால் நெற்றி பகுதியில் சுருக்கங்களும், கோடுகளும் விழத்தொடங்கும். இவை மேலும் அதிகரிக்காமல் இருப்பதற்கு வைட்டமின் ஈ சத்துள்ள எண்ணெய் உதவுகிறது. இது சருமத்தை இறுக்கமாக்கி ரத்த ஓட்டத்தை அதிகரித்து இளமையான தோற்றத்தை ஏற்படுத்துகிறது.

#LifeStyle

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version