அழகுக் குறிப்புகள்

பாத வெடிப்பும் தடுக்கும் வழிமுறைகளும்!

Published

on

தோல் வறட்சியும், அதிக உடல் எடையும்தான் பாத வெடிப்புக்கான முக்கியமான காரணிகள். நம் உடலில் நீர்ச்சத்து குறையும்போது தோல் வறண்டு, பாதத்தில் வெடிப்பு உண்டாகும். குளிர்காலத்தில், இயல்பாகவே தோலில் வறட்சி ஏற்படும்.

அதனால் பாதத்தில் வெடிப்பு ஏற்படக்கூடும். பொதுவாகவே காலில் உள்ள தோல் தடிமனாக இருக்கும். அதற்குள் ஒரு கொழுப்பு அடுக்கு இருக்கும். உடல் எடை அதிகமாக இருந்தால், அந்த அடுக்கு இடம்மாறி தோலில் வெடிப்பு உண்டாகும்.

வெதுவெதுப்பான தண்ணீரில், தினமும் பாதத்தைக் கழுவி வந்தாலே வெடிப்பு ஏற்படாமல் தவிர்க்கலாம். அதோடு காலையிலும் இரவிலும் பாதத்தைத் தண்ணீரில் நன்றாக கழுவினால் வெடிப்பு வரும் வாய்ப்பு குறைவு.

கற்றாழை, தேங்காய் எண்ணெய் தடவலாம். ஆனால் ஒரு சிலருக்கு தொற்று ஏற்பட்டு, புண்கள் அதிகமாகி, கடுமையான வலியுடன் வெடிப்புகள் இருக்கும். அவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாக சர்க்கரை நோயாளிகள் லேசான வெடிப்புகள் ஏற்பட்டாலே, உடனடியாக மருத்துவரிடம் பரிசோதித்து தொற்று ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

பாதவெடிப்புகளுக்குச் சிகிச்சை எடுத்துக்கொள்ளாவிட்டால், கால் முழுவதும் தொற்று பரவுவதற்கு வாய்ப்பிருக்கிறது. தோல் முற்றிலுமாக கெட்டுவிடும். வெடிப்புகள் அதிகமாக உள்ளவர்கள், திறந்தநிலையில் இல்லாமல் மூடிய செருப்புகளையே அணிய வேண்டும்.

உடலில் நீர்ச்சத்துக் குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். நீர்ச்சத்து நிறைந்த காய்கறிகள், பழங்களை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். தவிர, உடல் பருமனாக இருப்பவர்கள், எடை குறைப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

மற்றவர்களைக் காட்டிலும், சர்க்கரை நோயாளிகள் கொஞ்சம் கூடுதல் கவனத்தோடு இருக்க வேண்டும். பாத வெடிப்பு உள்ளவர்கள் மட்டுமல்ல, அனைவருமே பாதங்களை எப்போதும் சுத்தமாக வைத்துக்கொள்வது நல்லது.

கால்களில் நகங்களை வெட்டும்போது முழுமையாக வெட்டிவிடாமல் லேசாக நகம் இருக்குமாறு வெட்ட வேண்டும். முழுமையாக வெட்டினால், சதைப் பகுதிக்குள் நகம் வளர்ந்து வலி உண்டாகும்.

அதேபோல், நகங்களுக்கு இடையே காணப்படும் இடைவெளி எப்போதும் உலர்ந்த தன்மையோடு இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். ஈரத்தன்மையோடு இருந்தால் தொற்றுகள் உண்டாக வாய்ப்பு இருக்கிறது.

#LifeStyle

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version