அழகுக் குறிப்புகள்
கொய்யா இலையின் அளவில்லா பலன்கள்
கொய்யா இலையின் அளவில்லா பலன்கள்
கொய்யாப் பழங்களைப் பற்றி நாம் அறிந்திருப்போம். ஆனால் கொய்யா இலைகளில் உள்ள அற்புத பலன்கள் பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை. கொய்யா பழங்கள் எவ்வாறு எம் உடலுக்கு ஆரோக்கியத்தை வழங்குகின்றனவோ அதேபோல் கொய்யா இலைகளும் எமது சருமம் மற்றும் தலைமுடி ஆரோக்கியத்துக்கு சிறந்ததொன்றாக விளங்குகின்றது.
இந்த இலைகளை சரியான முறையில் பயன்படுத்தும்போது நீங்கள் எதிர்பாராத அற்புத பலன்களைப் பெறலாம்.
தலைமுடி ஆரோக்கியத்துக்கு
கொய்யா இலைகளில் விற்றமின் சி நிறைந்துள்ளதால் இவை முடி உதிர்வுக்கு சிறந்த நிவாரணி ஆகும். அத்துடன் இதில் உள்ள விற்றமின் பி, சி முடி வளர்ச்சியை அதிகப்படுத்துவதோடு அடர்த்தியையும் உண்டுபண்ணுகிறது.
இந்த இலைகளின் சாறு நன்கு தலைமுடி வேர்களில் ஊடுருவினால் அரிப்பு, பொடுகு, வறட்சி போன்ற பிரச்சினைகள் தலையில் ஏற்படுவதை தடுக்கும்.
தலைமுடி சேதம் அடைவதில் இருந்து பாதுகாத்து இரத்த ஓட்டத்தை அதிகப்படுத்துவதுடன் சூரியக் கதிர்களிடமிருந்து பாதுகாப்பு போன்றவற்றையும் கொய்யா இலைகள் தருகின்றன.
தலைமுடிக்கு கொய்யா இலைகளை பயன்படுத்தும் முறை
கொய்யா இலைகளை நன்கு அரைத்து சாறு எடுத்து தலைமுடி வேர்களில் நன்கு தேய்க்கவும். மிதமாக மசாஜ் செய்து பின் 2 மணிநேரம் விட்டு விடவும். அல்லது இரவு முழுவதும் கூட விட்டுவிடலாம். பின் தலைமுடியை தண்ணீரில் அலசி விடுங்கள்.
வாரத்துக்கு இரண்டு முறை இதனை செய்து வந்தால் தலைமுடி உதிர்வு பிரச்சினை நீங்கும்.
சரும ஆரோக்கியத்துக்கு
கொய்யா இலைகளின் சாறு முகத்தில் உள்ள கரும் புள்ளிகள் மற்றும் கரு வளையங்கள் போன்றவற்றை எளிதில் நீக்கிவிடும். இதில் உள்ள அண்டிசெப்டிக் உள்ளதால் முகப்பரு மற்றும் பக்டீரியாவால் ஏற்படும் பிரச்சினையும் போக்க உதவுகின்றது.
மூக்கின் நுனியில் உள்ள கருமுள் போன்றவற்றை நீக்கி இளமையான சருமம் மற்றும் முதுமையாகும் போது ஏற்படும் சரும சுருக்கம் போன்றவற்றை மறையச் செய்கின்றது.
சருமத்தில் அரிப்பு ஏற்பட்டால் அதனைப் போக்க கொய்யா இலைகள் பயன்படுகின்றன.
சருமத்துக்கு பயன்படுத்தும் முறை
கொய்யா இலைகளை தேவையான அளவு எடுத்து நன்கு அரைத்து அதனுடன் சிறிது தயிர் கலந்து இந்தக் கலவையை முகத்தில் தேய்த்து சிறிது நேரம் விட்டு விடுங்கள்.
அதன்பின் மிதமான தண்ணீரில் முகத்தை கழுவிவிடுங்கள். இதனை வாரம் இரண்டு முறை செய்துவந்தால் நல்ல பலனை உணர்வீர்கள்.
அடுத்து கொய்யா இலைகளை சிறிதளவு எடுத்து அரைத்து இதனுடன் சிறிது பன்னீர் அல்லது ரோஸ் வாட்டர் கலந்து மூக்கின் நுனி மற்றும் முகத்தில் தடவி நன்கு மசாஜ் செய்யுங்கள்.
இப்படிச் செய்து வந்தால் இறந்த செல்கள் வெளியேறி இளமை தக்கவைக்கப்படும். அத்துடன் முகத்துக்கு நல்ல பொலிவும் ஏற்படும்.
கொய்யா இலை சாற்றுடன் முல்தானிமெட்டி மற்றும் ரோஸ் வாட்டர் என்பவை சேர்த்து அவற்றை சருமத்துக்கு மற்றும் முகத்துக்கு பூசி அப்படியே விட்டு 30 நிமிடங்கள் கழித்து கழுவினால் சரும பிரச்சினைகள் தீர்ந்து பொலிவான சருமத்தை பெறலாம்.
அதுமட்டுமல்லாது கொய்யா இலைகளில் தேநீரும் செய்து அருந்தலாம். இது உடலுக்கு ஆரோக்கியத்தை அளிக்கின்றது. ஜீரணசக்தி, இரத்த ஓட்டம் போன்றவற்றை சீர்செய்து புத்துணர்ச்சியை வழங்குகின்றது.
You must be logged in to post a comment Login