சினிமா

நடிகர் மனோபாலாவின் இறுதிச் சடங்கில் திரையுலகம் அஞ்சலி!

Published

on

நடிகர் மனோபாலாவின் இறுதிச் சடங்கில் திரையுலகம் அஞ்சலி!

தமிழ் திரையுலகில் பிரபல நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர் மனோபாலா. பல படங்களை டைரக்டு செய்துள்ளதோடு சில படங்களை தயாரித்தும் இருக்கிறார். சென்னை சாலிகிராமம் எல்.வி.சாலையில் உள்ள வீட்டில் குடும்பத்துடன் வசித்து வந்தார்.

மனோபாலாவுக்கு சில நாட்களுக்கு முன்பு உடல்நல குறைவு ஏற்பட்டது. பரிசோதனையில் அவருக்கு கல்லீரல் மற்றும் இருதய பாதிப்புகள் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.

சிகிச்சைக்கு பின் உடல்நலம் தேறி வீட்டில் ஓய்வு எடுத்து வந்தார். இந்த நிலையில் மனோபாலா நேற்று திடீரென மரணம் அடைந்தார். அவருக்கு வயது 69. இவரது சொந்த ஊர் நாகர்கோவில் அருகே உள்ள மரும்பூர். மனோபாலாவுக்கு உஷா என்ற மனைவியும், ஹரிஷ் என்ற மகனும் உள்ளனர்.

மறைந்த மனோபாலாவின் உடல் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக சென்னை சாலிகிராமம் எல்.வி.சாலையில் உள்ள வீட்டில் வைக்கப்பட்டு உள்ளது. அவர் இறந்த தகவல் அறிந்ததும் திரையுலகினரும், அவரது ரசிகர்களும் அதிர்ச்சி அடைந்தனர்.

மனோபாலா உடலுக்கு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார். அப்போது மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உடன் இருந்தார்.

அ.தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார், தென்சென்னை மாவட்ட செயலாளர் விருகை வி.என்.ரவி, அ.தி.மு.க. கலைப்பிரிவு செயலாளர் இயக்குனர் ஆர்.வி.உதயகுமார், கலைப்பிரிவு தலைவர் இயக்குனர் லியாகத் அலிகான் உள்ளிட்டோர் மனோபாலாவின் உடலுக்கு மாலை வைத்து அஞ்சலி செலுத்தினர்.

இதேபோல் தே.மு.தி.க. சார்பில் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் அஞ்சலி செலுத்தினார். இதுதவிர திரையுலகினர் சார்பில் மனோபாலா உடலுக்கு நடிகர்கள் விஜய், ஆர்யா, சிவகுமார், மோகன், ராதாரவி, டெல்லிகணேஷ், ரமேஷ் கண்ணா, மோகன் ராமன், ஜெயபிரகாஷ், நடிகை வித்யுலேகா, இயக்குனர்கள் மணிரத்னம், பி.வாசு, கே.எஸ்.ரவிகுமார், ஏ.ஆர்.முருகதாஸ், சேரன், நாஞ்சில் அன்பழகன், பேரரசு, தயாரிப்பாளர் முரளி ராமசாமி, இசையமைப்பாளர்கள் சங்கர் கணேஷ், கார்த்திக் ராஜா, கவிஞர் சினேகன் உள்பட பலர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

நடிகர்கள் சார்லி, சரவணன், சம்பத் ராம், மதன் பாப், இசையமைப்பாளர் தினா, தாமு, தயாரிப்பாளர் ஏ.எல்.அழகப்பன், முன்னாள் அமைச்சர் செந்தமிழன், நடிகை சி.ஆர்.சரஸ்வதி, ஏ.சி.சண்முகம், மன்சூர்அலிகான், கோவை சரளா, நடிகர் பாக்யராஜ் அவரது குடும்பத்தினருடன் அஞ்சலி செலுத்தினார்கள்.

தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் நாசர், பொதுச்செயலாளர் விஷால் உள்ளிட்டோரும் மனோபாலாவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர். நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்ட இரங்கல் செய்தியில், ‘பிரபல இயக்குனரும், நடிகருமான அருமை நண்பர் மனோபாலாவுடைய இறப்பு எனக்கு மிகவும் வேதனை அளிக்கிறது. அவருடைய குடும்பத்தினருக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள்.

அவரது ஆத்மா சாந்தியடையட்டும்” என்று கூறியுள்ளார். கஜினி, அரண்மனை, கலகலப்பு, தலைவா, பிகில், காஞ்சனா, வரலாறு, வாத்தியார், பொல்லாதவன், யாரடி நீ மோகினி, ஆதவன், சிங்கம், சிறுத்தை, நண்பன், சகுனி, அரண்மனை உள்ளிட்ட படங்களில் மனோபாலாவின் நகைச்சுவை காட்சிகள் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்தன.

தமிழ் உள்பட பல மொழிகளில் 700-க்கும் மேற்பட்ட படங்களில் அவர் நடித்து இருக்கிறார். 1982-ம் ஆண்டு கார்த்திக் நடித்த ஆகாய கங்கை படத்தை இயக்கி டைரக்டராக அறிமுகமானார்.

நான் உங்கள் ரசிகன், பிள்ளை நிலா, பாரு பாரு பட்டணம் பாரு, டிசம்பர் 31, சிறை பறவை, தூரத்து பச்சை, என் புருஷன்தான் எனக்கு மட்டும் தான், மூடுமந்திரம், மல்லுவேட்டி மைனர், வெற்றிப்படிகள், பாரம்பரியம், கருப்பு வெள்ளை, அன்னை உள்பட 24 படங்களை டைரக்டு செய்துள்ளார். 1987-ல் ரஜினிகாந்த் நடித்த ஊர்க்காவலன் படத்தையும் மனோபாலா இயக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் பெரிய வெற்றி பெற்றது. தொலைக்காட்சி தொடர்களையும் இயக்கி உள்ளார்.

எச்.வினோத் இயக்கிய சதுரங்க வேட்டை, பாபிசிம்ஹா, கீர்த்தி சுரேஷ் நடித்த பாம்பு சட்டை ஆகிய படங்களையும் தயாரித்துள்ளார். அனைத்து நடிகர், நடிகைகளுடன் நட்புறவோடு பழகினார்.

நடிகர் சங்கத்தில் செயற்குழு உறுப்பினராகவும் பணியாற்றினார். மறைந்த நடிகர் மனோபாலாவின் உடல் திரையுலகினர், ரசிகர்கள் அஞ்சலி செலுத்திய பின்னர், இன்று (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு வளசரவாக்கம் மயானத்திற்கு ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு இறுதிச்சடங்குகள் நடைபெறுகிறது.

#cinema

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version