அழகுக் குறிப்புகள்

முடி உதிர்வை தடுக்க கருஞ்சீரக எண்ணெய்

Published

on

மாசு, மன அழுத்தம், ஹார்மோன் மாற்றங்கள், சத்து குறைபாடு போன்ற காரணங்களால் பல பெண்களுக்கு முடி உதிர்வு ஏற்படுகிறது. இந்தப் பிரச்சினைக்கு எளிய தீர்வாக அமைகிறது கருஞ்சீரகம்.

இதில் இருந்து தயாரிக்கப்படும் எண்ணெய், முடி உதிர்வை போக்கி வளர்ச்சியை அதிகரிக்கிறது. முடி வறட்சி, வெட்டு, அரிப்பு போன்ற பிரச்சினைகளைத் தீர்க்கிறது.

இந்த எண்ணெய்யை இரண்டு முறைகளில் தயாரித்துப் பயன்படுத்தலாம்.

முதல் முறை

வெந்தயம் – 100 கிராம்,
கருஞ்சீரகம் – 100 கிராம்,
தேங்காய் எண்ணெய் – 150 மில்லி லிட்டர்

கருஞ்சீரகத்தையும், வெந்தயத்தையும் மிக்சியில் போட்டு பொடியாக்கிக் கொள்ள வேண்டும். இந்தப் பொடியை சிறிய பாத்திரத்தில் கொட்டி, அதனுடன் தேங்காய் எண்ணெய் ஊற்றி கலக்க வேண்டும்.

அடுப்பில், ஒரு பெரிய பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும். அந்த நீரில் தேங்காய் எண்ணெய்க் கலவை அடங்கிய சிறிய பாத்திரத்தை வைத்து, சூடுபடுத்த வேண்டும்.

இந்த முறையில், எண்ணெய் தயாரிப்பதற்கு சற்று கூடுதல் நேரம் தேவைப்படும். பின்பு காய்ச்சிய எண்ணெய்யை ஆறவைத்து, கண்ணாடி பாட்டிலில் ஊற்றி 3 முதல் 4 நாட்கள் வரை வெயிலில் வைத்து எடுக்க வேண்டும்.

இதைத் தினமும் பயன்படுத்தலாம். இயலாதவர்கள் வாரத்தில் 2 அல்லது 3 முறை தலையில் நன்றாக தேய்த்து, அரை மணி நேரம் ஊற வைத்து பிறகு மிருதுவான ஷாம்பு பயன்படுத்தி தலைக்கு குளிக்கலாம்.

இரண்டாம் முறை

கருஞ்சீரகம் – 1 டீஸ்பூன்,
வெந்தயம் – 2 டீஸ்பூன்,
கற்றாழை ஜெல் – 1 கப்,
தேங்காய் எண்ணெய் – 1 கப்

கற்றாழையின் தோலை நீக்கி, நடுவில் உள்ள ஜெல்லை எடுத்து நன்றாகக் கழுவ வேண்டும். அப்போதுதான், அதிலுள்ள அரிப்புத் தன்மை நீங்கும்.

அடுப்பில், பாத்திரத்தை வைத்து அதில் தேங்காய் எண்ணெய்யையும், கற்றாழை ஜெல்லையும் சேர்த்து நன்றாகக் கிளற வேண்டும். எண்ணெய் கொதிக்கும் போது, கருஞ்சீரகம், வெந்தயம் ஆகியவற்றைச் சேர்த்து, மிதமான சூட்டில், அரை மணி நேரம் வரை காய்ச்ச வேண்டும்.

காய்ச்சிய எண்ணெய்யை ஒரு போத்தலில் ஊற்றி 6 மாதம் வரை பத்திரப்படுத்தி பயன்படுத்தலாம்.
இதை வாரம் 2 அல்லது 3 முறை தலையில் நன்றாக மசாஜ் செய்து குளிக்கும்போது, உடல் சூடு குறைந்து குளிர்ச்சி ஏற்படும்.

இந்த எண்ணெயை ஆண், பெண் இருவரும் பயன்படுத்தலாம். தொடர்ந்து 1 மாதம் வரை பயன்படுத்தும் போது, முடியின் வளர்ச்சி நீளமாகவும், அடர்த்தியாகவும் முடி வளரும்.

#LifeStyle

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version