ஜோதிடம்

எண்ணிலடங்காத நன்மைகளை வழங்கும் முருகப்பெருமானின் ஆடிக் கிருத்திகை

Published

on

ஆடிக் கிருத்திகையான இன்று விரதம் இருந்து முருகப்பெருமானை வழிபடத் தேடிவரும் நன்மை என்பது ஆன்றோர் வாக்கு. ஈசனின் நெற்றிக் கண்ணிலிருந்து உதித்தவர் ஞானப் பிழம்பான முருகப்பெருமான்.

தன்னை வழிபடும் பக்தர்கள் வாழ்வில் அனுபவிக்கும் அனைத்து இன்னல்களுக்கும் உடனடி நிவாரணம் வழங்குபவர் முருகப்பெருமான்.

சிவபெருமானின் நெற்றிக்கண்ணில் பிறந்த ஆறு அக்னிகளும் ஆறு குழந்தைகளாக சரவணப்பொய்கையில் சேர அவற்றை வளர்த்தவர்கள் கார்த்திகைப் பெண்கள். அதனால் முருகப்பெருமான் கார்த்திகைப் பெண்களைத் தன் தாயினும் மேலாகப் போற்றுவார்.

கார்த்திகைப் பெண்களே கார்த்திகை நட்சத்திரங்களாயினர். எனவே, கார்த்திகை நட்சத்திர நாளில் முருகப்பெருமானை வழிபடுவது மிகவும் சிறப்புக்குரியது.

கிருத்திகை நட்சத்திரம் என்பது சூரியபகவானுக்குரிய நட்சத்திரம். சூரியன் கால புருஷ பூர்வ புண்ணிய ஸ்தான அதிபதி என்பதால் அன்றைய தினம் காவடி எடுத்து, பாலாபிஷேகம் செய்து செந்தில் ஆண்டவனை வணங்குவதால் கர்ம வினையால் தடைபடும் புத்திர பிராப்தம், திருமணம், உத்தியோகம், தொழில் அனுகூலம், வீடு, வாகன யோகம், சொத்து பிரச்சினை, உடன் பிறந்தவர்களுடன் ஒற்றுமை, கடன் நிவர்த்தி, அரச பதவி, அரசாங்க உத்தியோகம், அரசியல் ஆதாயம், நோய் நிவாரணம், புத்திக் கூர்மை, ஆன்ம பலம் பெருகுதல் போன்ற எண்ணிலடங்கா சுப பலன்கள் பெருகும்.

வள்ளல் பெருமானான முருகனை நினைத்து திருப்புகழ், கந்த சஷ்டிக் கவசம், வேல்மாறல் பாராயணம் ஆகியவற்றைப் படிப்பது மிகவும் நல்லது. திருப்புகழ் பாராயணம் செய்வோருக்குத் தீராத துன்பமும் தீரும்.

#LifeStyle

 

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version