சிறுகதை

ஒரு தேநீர் ஒரு குவளை – அகமது ஃபைசல்

Published

on

ஒரு தேநீர் ஒரு குவளை – அகமது ஃபைசல்

“நாக்குத்தானே இதுக்கெல்லாம் காரணம்… இந்தாடி கத்தி நாக்க வெட்டி எறி” கத்தியைக் கொடுத்து நாக்கை வெட்டச் சொல்லும்போது பார்த்துக் கொண்டிருந்த சக்கியாவின் மகள் சட்டெனப் பாய்ந்து கத்தியைப் பறித்து, வெளியே தொங்கிக் கொண்டிருந்த நாக்கை ஒரே வெட்டில் துண்டாக்கியதும், அந்த நாய் பொம்மை அழ ஆரம்பித்தது போல் முகம் சுருங்கிற்று. கீழே நாயின் நாக்கு விழுந்ததா? இல்லை. அங்கு ஒரு கரப்பான் பூச்சிதான் ஓடியது.

அவள் தன் நாய் பொம்மைக்கு தேநீர் கொடுப்பது வழக்கம்.

எப்போது பார்த்தாலும் நாயின் வாயுக்குள் தேநீரை ஊற்றி விளையாடுவதையே வேலையாக்கி வைத்திருந்தாள்.

“இந்தாடி நாய்த் தேநீர்” என்றாள் சக்கியா. மகளுக்கு, புது வீட்டில் காச்சிய பால் போன்று சந்தோசம் பொங்கிற்று.

காட்டில் எந்த விலங்கு ராஜா? அதுபோல் அவள் வீட்டு பண்டம் பாத்திரங்களுக்கு ராஜாவாக இருந்தது அந்தக் குவளை. மான் தோலின் மென்மையுடன் இருக்கும் அதன் வெளிப்புறம். தூரே நின்று பார்த்தால் அதன் உதடு அசைவது போலிருக்கும். அது மிகவும் அழகாக இருக்கும். அது ஒரு ராஜ வம்சத்து வீட்டில் இருந்திருக்க வேண்டும். அல்லது ஒரு சிறந்த மந்திரவாதி வைத்திருந்திருக்க வேண்டும். சீன தேசத்து வல்லுநர் கை வண்ணம் போலவும் இருந்தது. இதன் பெறுமதி தெரிந்திருந்தால் அதில் நாய்த் தேநீரைக் கேட்டு பிடிவாதமாக இருப்பாளா மகள். “இவளொருத்தி அந்திக்கும் சந்திக்கும் தேநீர்தான் கேப்பாள்” என்று எரிந்துகொண்டே அங்குட்டு நடந்தாள் சக்கியா.

குசினிப் பக்கமாகப் போய் அந்தக் குவளையுள் அவளுக்கு மாத்திரம் கொஞ்சம் தேநீரை ஊற்றிப் பருகினாள். பருகும்போது, நாய் பொம்மை அழுவதை நிறுத்தியதுபோல் அவளை உற்றுப் பார்த்தது. நாக்கு இருந்திருந்தால் பேசியிருப்பேன், நியாயத்தைக் கேட்டிருப்பேன். என்பதுபோல் அந்த நாயின் கண்கள் இருந்தன.

“டிடிங்…..டிடிங்…” பெல் சத்தம்.

சக்கியாவும், மகளும் போய்க் கதவைத் திறந்தார்கள்.

எதிர்பார்த்தபடி அங்கு யாருமில்லை.

மாறாக இன்னொரு அறை எதிரே தென்பட்டதுபோல் இருந்தது. அதன் கதவைத் திறந்தாள். அது அந்த அறையின் ஜன்னல் கதவு. அவள் அதிர்ச்சியடையவில்லை. அப்போது வீசியது ஒரு கூதல் காற்று. அது இருவர் உடலையும் தள்ளிவிட்டு வீட்டுக்குள் நூழைந்து சென்று குவளையுள் இருந்த மீதித் தேநீரைப் பருகத் தொடங்கியது.

“..ஆ… காத்து நல்லாக் குளிருது எங்கேயோ நல்ல மழ பெய்யுது உம்மோ” என்றாள் மகள். சக்கியாவின் உடல் உரோமங்கள் எழுந்து நின்றன யாருக்கோ மரியாதை செய்வதுபோல். பிறகு கொஞ்சம் பலத்தைப் பிரயோகித்த காற்று அவள் மார்பில் கிடந்த சேலையை நோகாமல் எடுத்து, குளிரால் நடுங்கிய கதவின் சிறு பகுதியில் போட்டது. அந்த நிமிசம் அவள் காற்றை மட்டும் மார்பில் வாங்கிக்கொண்டாள். சில்லென்று வந்த குளிரோடு சில நிமிடம் போராடினாள். பெருத்த மழைத்துளிகள் அவள் மார்பில் விழுந்து மாயமாகின. ஈரத்தின் வாசனை எங்கும் பரவத் தொடங்கியது. இலேசான தலைச் சுற்றலில் நடுங்கிப் போனவளாய் கீழே தரையில் அமர்ந்துகொண்டாள் சக்கியா.

அந்தக் குவளையில் ஆவி பறக்கும் தேநீருடன் சக்கியாவின் முன்னால் வந்து நின்றான் அலான். “என்னாச்சி சக்கியா ஏன் இப்புடி கீழ கிடக்கிற எழும்பு இதக்குடி” என்றான் பரிவோடு. தேநீரை வாங்கிக் குடித்தவளுக்கு மெல்ல தலைச்சுற்றல் நீங்கியது. “என் உடல் ஆக்கையத்துப்போச்சு” என்று சொல்லியபடி கதவு நிலையில் முதுகைச் சாய்த்தாள்.

அவள் கண்கள் அலானின் கூரான மூக்கின் பக்கம் சாய்ந்தன. ஆந்து சோந்துபோன அவள் முகத்தை உற்றுப் பார்த்தான் அலான். “உம்மா என்னாச்சி உம்மா உனக்கு” என்றாள் மகள். மகளின் குரலைக் கேட்டவளுக்கு அந்த மழை நாள் ஞாபகம் வந்தது.

அலான் எப்போதும் சோடா மூடியை பற்களால்தான் திறப்பான். “உஸ்” என்ற சத்தத்தோடு சீறி வரும் நுரை அவனுக்குப் பிடிக்கும்.

சக்கியாவின் முதல் சந்திப்பு ஒரு போத்தல் சோடா உடைத்தலில்தான் ஆரம்பித்தது. அந்த ஒரு நிமிட நுரை பொங்கியது போன்றுதான் அவர்களுக்கிடையில் காதலும் பொங்கிற்று.

அன்றும் நல்ல மழை பெய்தது ஞாபகமிருக்கிறது.

அதை மழை என்பதை விட தண்ணீரின் இசை எனலாம். தண்ணீரின் இசை என்பதை விட தண்ணீரின் நடனம் எனலாம்.

தண்ணீர் என்றும் இளமையுடன் இருப்பதால்தான் இத்தனை பெரிய நடனத்தை தன்னால் ஆட முடிகிறது.

மேசை மீது குளிர்ந்தபடி இருந்த சோடாப் போத்தலைத் தொட்டதும் சுட்டுவிட்டதுபோல் சட்டென அவள் குளிரின் சிறையிலிருந்து தன் விரல்களை விடுவித்துக்கொண்டாள். அலான் அந்தப் போத்தலை அவளிடமிருந்து வாங்கி அதன் மூடியை பற்களால் கடித்து திறந்தான். “உஸ்” என்றது போத்தல். வெள்ளை நுரை பொங்கி வந்தது.

அந்த ஹோட்டலில் வேலை செய்யும் பொடியன் இதையெல்லாம் பார்த்தவாறு அர்த்தம் புரிந்ததுபோல் அவன் துளிர் மீசையை தடவினான்.

“சாப்பிட ஏதாச்சும் வேணுமா?” என்றான் சற்று அருகில் வந்து. “உஸ்” என்ற சோடாப் போத்தலை ஒரு முறை பார்த்தான். வேறு எதுவும் அவர்களைக் கேட்காமல் திரும்பி நடந்தான். மழையில் குடையை நனைத்தபடி உள்ளே அவள் வந்தாள். குடையை மடித்து அருகில் உள்ள சுவர் மூலையில் வைத்தாள். அவள் பெயர் நஸ்தயா என்று சக்கியா அவளை அலானிடம் அறிமுகப்படுத்தினாள். அலானின் நீண்ட மூக்கில் இருந்த மச்சத்தை பார்த்த நஸ்தயா சுடர் குறைந்த ஔித் துளியாய் சிரித்தாள். “மூக்குல என்ன மச்சமா” என்றாள் பக்கத்துக் கதிரையை இழுத்துப் போட்டு அமர்ந்தபடி.

“உம்மா..ஹால் பெல் அடிச்சது யாரு.?..இங்க அப்படி யாருமில்லையே..” என்றாள் மகள். “அன்று அலானின் மச்சத்தை அவ்வளவு நேரமாக புகழ்ந்தாளே நஸ்தயா ஏன்? என்ற கேள்வி இப்போது இந்த நேரத்தில் எதற்கு என் மனதில் தோன்ற வேண்டும்” என்று அலானிடம் திருப்பிக் கேட்டாள். அவன் ஏதும் பேசவில்லை.

“யாரையும் காணலியே” என்றாள் திரும்பவும். மகளின் முகத்தைப் பார்த்து தலையசைத்தாள். இருந்த இடத்தை விட்டு மெல்ல எழுந்தாள்.

“அலான் இந்தக் குவளை ஞாபகமிருக்கா?” என்றாள். மகளை ஒரு கையால் அணைத்து நடந்தாள்.

“ம்..ம் உன் உதடுகளுக்குத்தான் அதிகம் பழக்கப்பட்டிருக்கு இந்தக் குவளை நஸ்தயா உனக்காக தந்ததாச்சே”

“ம்..ம்..” என்றாள்.

“உம்மா கூதல்ல ஒடம்பெல்லாம் ஊசி போடுற மாதிரி இரிக்கி உள்ள கெதியா வாம்மா போகலாம்..” சொல்லி வாய் எடுக்கவில்லை மழையை யாரோ தூண்டிலிட்டு பிடிக்க முயற்சிப்பது போன்று மின்னல் அடித்து.

அப்போது வீசிக் கொண்டிருந்த காற்றிடமிருந்து தப்பித்து வீட்டினுள் தஞ்சம் புகுந்தது அந்தப் பலா இலை. பாதி மஞ்சளும் பாதி பச்சை நிறமுமாய் இருந்தது. வீட்டுக்குள் புகுந்த மாத்திரத்தில் சுவரோடு ஒட்டிக்கொண்டது. அருகே இருந்த பல்லி என்ன நினைத்ததோ விரண்டோடியது.

தேநீரை அருந்தி முடித்த சக்கியா அந்த மார்பிள் தரையில் அமர்ந்து அலானின் மடியில் சற்று தலையைச் சாய்த்தாள். மகளும் அருகில் அமர்ந்து கொண்டாள். “டிடிங்…..டிடிங்…..”ஹால் பெல் அலறும் சத்தம். “மகள் போய் யாருன்னு பாரு” தன் மகளின் தோளில் கையை வைத்து அழுத்திச் சொன்னாள். “எரசலடிக்குது ஜன்னல சாத்து மகேள்” என்றாள் திரும்பவும்.

“யாருமில்ல வாப்பா” என்று போன வேகத்திலே திரும்பி ஓடி வந்தாள் அவள்.

அப்போது வீடெங்கும் ஒரு குகையின் அமைதி நிலவியது. அரபு மண்ணின் வாசனையும் பரவியது. ஓமானிலிருந்து விடுமுறையில் வந்தபோது கொண்டுவந்த அந்த தொப்பியை மகள் தலையில் அணிந்துகொண்டு வந்து நின்றாள். அது அழகான, நூல் அலங்காரங்கள் கொண்ட, சற்று உயரமான தொப்பி. ஓமானிகளை அந்த தொப்பியோடு பார்த்தால், அதிலும் ஓமான் சிறுவர்கள் அப்படி வடிவாக இருப்பார்கள். மகளின் தலையில் அந்த தொப்பியைப் பார்த்ததும் சக்கியாவுக்கு; குடும்பத்தோடு ஓமானில் இருந்த நாட்களும், கண்ட மலைத் தொடர்களும், குகைகளும் ஞாபகத்திற்கு வந்திற்று. ஓமானில் இருந்த அத்தனை வருடமும் விடுமுறையை அற்புதமாக கழித்தாள்.

மலைத் தொடர்கள் செறிந்த இடமெல்லாம் சென்று பார்த்து வியந்திருந்தாள். அன்றும் அப்படி ஒரு விடுமுறை நாள்தான். ஓமானின் பெரிய அகலமான மலைக் கிணற்றைக் கண்டு வியந்தாள். அது தடாகம் போன்றது. கிணற்றின் உள்ளே இறங்கிப் பார்ப்பதற்காக அமைக்கப்பட்டிருந்த ஏணிப்படி வழியாக உள்ளே இறங்கிப் போய் கிணற்றின் நீல நீரைப் பார்த்துச் சிலிர்த்தாள்.

உயரத்திலிருந்து சிறுவர்களும், பெரியவர்களும் அந்த தெளிந்த நீலத் தண்ணீரில் குதித்து, குளித்து விளையாடினார்கள். அதில் ஒருவன் தண்ணீரின் அழகையும், அதன் குளிரையும் அரபு மொழியில் வர்ணித்துப் பேசிக்கொண்டு குதித்தான். “ழபாக்” என்ற ஓசையில் தண்ணீர் மேலே உயர்ந்து விழுந்தது. அந்த மலைக் கிணற்றைச் சுற்றி கம்பித் தடுப்பு போட்டிருந்தது. அந்தக் கம்பியைப் பிடித்தபடி அலான் தலையை நூறு அடிக்கும் அதிகமான ஆழத்திற்கு குனிந்து அந்த நீலத் தண்ணீரைப் பார்த்துக்கொண்டு நின்றான். அலானை அண்ணார்ந்து பார்த்து

“அலாஆ…..ன்” என்று சத்தமாகக் கூப்பிட்டாள். கீழே இருந்து நூறு அடி உயர்ந்து மேலே வந்து அலானின் காதுகளைச் சுற்றி வளையமிட்டது அவளின் சத்தம். சற்று நேரம் “அலா….ஆ…ன்” என்று அந்தக் கிணறு கூப்பிட்டது போல்தான் இருந்தது. கழுத்தில் இருந்த துப்பட்டாவை இடுப்பிலே கட்டிக்கொண்டாள். அந்த நீலத் தண்ணீரின் கண்கள் அவளின் மார்பை பார்த்த ஒவ்வொரு கணமும் ஒரு படி மேலே உயர்ந்து அசைந்தது. பக்கத்தில் நின்றிருந்த பிலிப்பைன்ஸ்காரி அவளது தாய் மொழியில் ஏதோ, யாருடனோ பேசிக்கொண்டிருந்தாள். அவளின் கையடக்கத் தொலைபேசி இளஞ்சிவப்பு நிறமாக இருந்தது.

அவளின் இன்னொரு கையில் இருந்தது tea time கடையில் வாங்கிய மசாலா டீ. அதன் ஆவி குட்டிப் பாம்புகள் போல் நெளிந்து மேல் நோக்கிச் சென்றது. “ஜீப் வாஹித் ச்ஷாய் மசாலா” என்றான் ஒரு இள வயது ஓமானி. அவன் குரல் அலானின் காதுகளில் வந்து பாய்ந்தது. கிணற்றைச் சுற்றியிருந்த உறுண்டைக் கம்பித் தடுப்பில் சாய்ந்துகொண்டிருக்கும் பலரது கைகளிலும் அந்த மசாலா டீ இருப்பதை அவதானித்தான். அந்த tea time கடையும் மிக அருகேதான் இருந்தது. பாதாம் பருப்பை சிறு சிறு துண்டுகளாக்கி டீயில் போட்டிருப்பர். அபாரமான சுவை. “சேட்டா ரெண்டு மசாலா டீ கொடு” என்றான் அலான்.

ஒரே தடவையில் கிடைத்த இரண்டு ஆஸ்கார் விருதைப்போல கைகளில் டீயை ஏந்தி வந்து “சக்கியா மேலே வா டீ குடிப்பம்” என்றான். அவனது குரல் அந்த ஏணிப்படிகளால் இறங்கிப் போய் அவள் காதுகளைக் கடித்தது. அப்போதுதான் அவன் எதிரில் பளிச்சிடும் அந்த உருண்டைக் கம்பியை விரல்களால் மெல்ல பிடித்து நின்றாள் ஒரு இளம் பெண். அவள்தான் ஓமானின் இறுதிப் பெண்ணோ என வியக்கும் அழகில் ஜொலித்தாள். அன்னநடை போட்டு சக்கியா வெளியே வருவதற்குள் அவன் மசாலா டீயின் முதல் மிடரை அருந்தி, ஜொலிக்கும் அந்த அழகியின் பக்கம் கண்களைச் சாய்த்தான். அடுத்த மூன்றாவது வினாடியே கண்களை சக்கியாவின் பக்கம் வீழ்த்தவேண்டி நிர்ப்பந்திக்கப்பட்டிருந்தான். அதன் பிறகு அந்தக் குதிரை வட்டியை, அதன் பிறகு; இலைகளை அழகாக வெட்டி பந்து போல் அலங்கரிக்கப்பட்ட மரங்களை என்று எங்கெல்லாமோ அவன் பார்வை பரவியது. சிமெந்து கற்கள் பரவிய நடை பாதையில் அந்தக் குதிரை வண்டி ஓடும் சத்தத்தை சிலர் பார்த்துக்கொண்டு நின்றார்கள். அந்த பூங்காவுக்குள் ஒரு சுற்று சுற்றி வர ஒரு ரியால் வாங்கினார் கிழவர். க்ளக் க்ளக் க்ளக் க்ளக் சத்தம் குதிரை வண்டிக்குப் பின்னால் ஓடிப்போகிறது. “அந்த சத்தத்தை வண்டியில் ஏற்ற கிழவர் சம்மதிப்பாரா” என்று சக்கியாவைப் பார்த்துக் கேட்டான் அலான். மசாலா டீயை அருந்தியவள் அரை குறையாக சிரித்தாள். “தூக்கத்தில் நாக்கைக் கடித்தவன்போல் வாயைத் திறந்து இடைக்கிடையே சிரிக்கும் அந்தக் கிழவரை எங்கோ பார்த்த மாதிரியும், பழகின மாதிரியுமே இருக்கிறது இந்தக் கிழவர் முகத்தில என்ட வாப்பாட முகம் இருக்கு உங்களுக்கு ஏதாவது தோனுதா”

“எனக்கும் அப்புடித்தான் தோனுது”

செல்போன் மணி அடித்தது. சத்தம் வீட்டின் அமைதியைக் கலைத்தது. சக்கியாவின் ஓமான் நினைவுகளும் சேர்ந்தே கலைந்தது.

“மாஷா வாப்பாட போன எடுங்க”

“ஹலோ யாரு நஸ்தயாவா”

“ஆமா நான்தான். என்ன ஒன்ட வீட்ட நல்ல மழ பெய்யுதா சத்தமா இருக்கி?”

“இல்ல இது மழ இல்ல தண்ணீ விழிச்சிட்டிருக்கு தண்ணீட கண்கள்தான் நிலமெல்லாம் விழுந்திட்டிருக்கு”

“இது யார்ர கவித? எல்லாம் இருக்கட்டும் முதல்ல என்ன மன்னிச்சிடு”

“ஏன் உன்ன மன்னிக்க என்னாச்சு”

“எங்க வாப்பா மூனு நாளா வீட்ல இல்ல எங்க கூட சண்ட போட்டு வெளியேறிப் போயிட்டாரு”

“அதேன்? கொஞ்சம் வெவரமா சொல்லு”

“எல்லாத்துக்கும் காரணம் நான் ஒனக்குத் தந்த பேத் டே கிப்டு, அந்த மாயக் “கப்” தான் அது என்ட வாப்பாட நான்தான் அது தெரியாம ஒனக்குத் தூக்கித் தந்துட்டன் பிளீஸ் என்ன மன்னிச்சிடு ஒனக்கு ஒரு தங்கச் செயின் வாங்கி வச்சிருக்கன் அத கிப்டா தாரன் அந்தக் கப்ப குடுத்திடு சக்கி”

“இதானா விசியம் வந்து எடுத்துக்கோ”

“தேங்ஸ்டி நா இப்பவே வாரன்” அவள் பேசிய செல்போனைக் கீழே வைக்கவில்லை வாசல் கதவடியில் பெல் சத்தம் கேட்டது.

“நஸ்தயா இவ்வளவு வேகமா வந்துட்டாளா?” என்று வியந்தாள் சக்கியா.

“இல்ல நான் நஸ்தயாட வாப்பா. யார்ர வீட்டுலயும் மழ பெய்யல உங்க வீட்டுல மட்டும் மழ பெய்யுது அதான் இங்க வந்தன். என்ர மாயக் குவளை இங்கதான் இருக்கு. என்ர மாயக் குவளைக்கு இன்று பிறந்த நாள் அதுதான் அது இருக்கிற வீட்டுல மட்டும் மழ பெய்யுது” என்றார் வீட்டுக்கு உள்ளே வந்தவர்.

“தேநீர்க் குவளைக்கு பிறந்த நாளா?” என்று அவரைக் கேட்டு வியந்தாள் சக்கியா.

“நீங்க பிறந்த நாள் கொண்டாடலாம் ஆனா என்ர குவளை பிறந்த நாள் கொண்டாடக் கூடாதா? அந்தக் குவளை என் கைக்கு எப்போ வந்துச்சோ அந்த நாள்தான் என்ர குவளையின்ர பிறந்த நாள். அதுன்ர ஒவ்வொரு பிறந்த நாளைக்கும் அது இருக்கிற வீட்ல மட்டும் நல்ல மழ பெய்யும்”என்றார் அவர் உற்சாகத்துடன். அவர் வலது கண் இமை கக்கட்டி வந்ததுபோல் வீங்கி இருந்தது.

அந்தக் குவளையில் சூடான தேநீர் கொண்டுவந்து அவருக்குக் கொடுத்து அவரை உபசரித்தான் அலான்.

அவர் ஆத்திரத்துடன் தேநீரைக் கீழே ஊற்றினார். தேநீர் நிலத்தில் விழாமல் மறைந்து மாயமாய்ப் போனது.

“அந்தக் கப்ப அவர்ட்ட கொடுக்காத” என்றாள் உள்ளே வந்த வேகத்தில். “இவர் என்ட வாப்பா இல்ல” என்றாள் நஸ்தயா.

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version