கலாசாரம்

மகாசிவராத்திரி நாளில் சிவனுக்கு நான்கு கால அபிஷேகம் …

Published

on

சிவபெருமானுக்கு அன்றாடம் நடைபெறும் பூஜைகளில் அபிஷேகம் செய்வதற்கு என்று பால், தயிர், அன்னம், தேன் என அபிஷேகப் பொருட்கள் இருந்தாலும், பஞ்சகவ்யம், பஞ்சாமிர்தம், கொம்புத்தேன், கரும்புச்சாறு என்றால் கொள்ளை பிரியம். அதிலும், மஹா சிவராத்திரி அன்று நடைபெறும் நான்கு ஜாம கால பூஜைகளிலும் நடைபெறும் அபிஷேகத்தில் இந்த நான்கு அபிஷேகப் பொருட்களே முக்கிய பங்கு வகிக்கும். இந்த நான்கு வகையான அபிஷேகம் செய்வதால் கிடைக்கும் பலன்கள் என்ன என்பதை நாம் பார்க்கலாம்.

மகாசிவராத்திரி தினத்தில் சிவபெருமானுக்கு நான்கு ஜாமங்களில் நடைபெறும் நான்கு விதமான அபிஷேகங்களால் நமக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கும். முதல் ஜாமத்தில் பஞ்சகவ்ய அபிஷேகம் செய்வதால் மன அழுக்குகள் நீங்கும், இரண்டாம் ஜாமத்தில் பஞ்சாமிர்த அபிஷேகம் செய்வதால் காரியத் தடை நீங்கும், மூன்றாம் ஜாமத்தில் கொம்புத்தேன் அபிஷேகம் செய்வதால் ஆரோக்கியம் பெருகும், நான்காம் ஜாமத்தில் கரும்புச்சாறு கொண்டு அபிஷேகம் செய்தால் உடல் வலிமையும் கூடும்.

முதல் ஜாமம்-பஞ்சகவ்யம்

சிவபெருமானுக்கு செய்யப்படும் அபிஷேகத்தில் அவருக்கு மிகவும் பிடித்தமானது, பஞ்சகவ்ய அபிஷேகம். பஞ்சகவ்யம் என்பது பால், தயிர், நெய், கோமயம்(சாணம்), கோசலம் என்பன. மஹாசிவராத்திரியில் முதல் ஜாமத்தில் செய்யப்படுவது பஞ்சகவ்ய அபிஷேகம் தான். இதை மூவர் தமிழ் எனப்படும் தேவாரப் பாடலில் “ஆவினுக்கு அருங் கலம் அரன் அஞ்சாடுதல்” என குறிப்பிடப்பட்டுள்ளது. கோமியம் கலந்த பஞ்சகவ்யத்தால் பத்து குடம் அபிஷேகம் செய்வதால், நம் உடலில் உள்ள அழுக்குகள் நீங்கி, மாசு மருவற்ற தேகத்தையும் உள்ள சுகத்தையும் பெறலாம்.

இரண்டாம் ஜாமம்-பஞ்சாமிர்தம்

மஹாசிவராத்திரி தினத்தின் இரண்டாம் ஜாமத்தில் சிவபெருமானுக்கு செய்யப்படுவது பஞ்சாமிர்த அபிஷேகம் ஆகும். அப்போது பத்தாயிரம் பழங்கலால் பஞ்சாமிர்தம் செய்து, அதை சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்தால் நம் வாழ்வில் எதையும் வீரதீரத்துடன் செய்து முடிக்கும் பக்குவமும் மனோபலமும் கூடும், அதோடு நாம் மேற்கொள்ளும் அனைத்து காரியங்களிலும் இருந்த தடைகள் அகன்று வெற்றி நம் வசப்படும்.

மூன்றாம் ஜாமம்-கொம்புத்தேன்

மஹாசிவராத்திரி நாளின் மூன்றாம் ஜாமத்தில் சிவபெருமானுக்கு செய்யப்படுவது கொம்புத்தேன் அபிஷேகம் ஆகும். சுத்தமான கொம்புத்தேன் கொண்டு அபிஷேகம் செய்தால் நம் மனதில் ஏற்பட்ட துக்கங்கள் அனைத்தும் தொலைந்து போகும். அதோடு, நம் குரல் வளம் பெற்று, மனதை மயக்கும் இனிய கானம் பாடும் குரல் வளம் கிடைக்கப்பெறும். ஆரோக்கியம் பெருகி ஆயுள் பலம் கூடும்.

நான்காம் ஜாமம்-கரும்புச்சாறு

மஹாசிவராத்திரி அன்று நான்காம் ஜாமப் பொழுதில் சிவபெருமானுக்கு செய்யப்படுவது கரும்புச்சாறு அபிஷேகம். கரும்புச்சாறு கொண்டு நாம் சிவபெருமானை அபிஷேகம் செய்வதால், வீட்டிலுள்ள தரித்திர நிலை மாறி, செல்வ வளம் பெருகும். தேக ஆரோக்கியமும் உடல் வலிமையும் கூடும். இந்த அபிஷேக பொருட்களை மகாசிவராத்திரி நாளில் சிவனுக்கு வாங்கிக் கொடுத்து வணங்கலாம்.

 

 

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version