கட்டுரை

காஸ்ட்ரோவை கொலை செய்ய துடித்த அமெரிக்கா

Published

on

காஸ்ட்ரோவை கொலை செய்ய துடித்த அமெரிக்கா

கியூபாவின் வரலாற்று தலைவர் பிடல் காஸ்ட்ரோவை அழிக்க அமெரிக்கா மேற்கொண்ட முயற்சிகள் எண்ணற்றவை.

இவ்வாறு அமெரிக்க இரகசிய உளவுத்துறையானா சி.ஐ.ஏ(CIA) காஸ்ட்ரோ மீது மேற்கொண்ட 638 கொலை முயற்சிகளுக்கு அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகள் வழங்கிய பெயர் Operation Mongoose.

ஒரு நாட்டை 50 வருட காலம் ஆள்வது என்பது சாதாரண விடயமல்ல. அதுவும் கட்சி மாறாமல், ஒரே கட்சியில் இருந்து கொண்டு, கொலை முயற்சிகளிலிருந்து தப்பித்து, கியூபாவை ஆட்சி செய்தார் பிடல் காஸ்ட்ரோ என்பது வியப்புக்குரியது.

இவர் காலத்தில் வன்முறைப் போராட்டங்கள் வெடித்ததும், அதில் இவர் பங்குபற்றியதும் அன்றாட வழக்கமாக இருந்தது. டொமினிக்கன் குடியரசின் வலதுசாரித் தலைவர் ரபேல் என்பவரின் ஆட்சியைக் கவிழ்க்க இவர் போட்ட திட்டமும் இவரின் அரசியல் நகர்வில் ஒரு பகுதியாக இருந்தது.

முதலாளித்துவத்தை நம்பாமல், மக்களின் புரட்சியால்தான் நாட்டின் பொருளாதாரப் பிரச்சினையை தீர்க்க முடியும் என்று நினைத்த தலைவராக பிடல் காஸ்ட்ரோ கருதப்படுகிறார்.

கியூபாவின் தென்கிழக்குப் பகுதியில் உள்ள பிரான் என்ற கிராமத்தில் 1926 ஆகஸ்ட் 13 ஆம் திகதியன்று பிறந்த பிடல் காஸ்ட்ரோ பட்டப்படிப்பை முடித்த வழக்கறிஞர் பிடல் காஸ்ட்ரோ.

ஆனால் கடனில் மூழக்கியிருந்த இவரால் வாழ்க்கையில் முன்னேற முடியவில்லை.

1953 ஆம் ஆண்டுக்கு முற்பட்ட காலப்பகுதியில் விபச்சாரம், சூதாட்டம் , போதை மருந்து கடத்தல் என்ற பணக்காரர்களின் சித்து விளையாட்டுக்கு கியூபா நல்ல விளைநிலமாக மாறியிருந்தது இவரைப் பெரும் வேதனைக்கு உள்ளாக்கி இருந்தது.

புரட்சித் தோல்வியும், 15 வருட சிறைவாசத் தண்டனையும் இவர் வாழ்வின் கறைபடிந்த அத்தியாயங்கள்.

15 வருடங்கள் சிறை விதிக்கப்பட்டாலும், 19 மாத கால சிறைவாசத்தின் பின்னர், 1953இல் பொதுமன்னிப்பு அளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டார். அவர் சிறையில் இருந்த குறுகிய காலத்தில், தன்னுடைய மனைவியை விவாகரத்து செய்து விட்டு, மார்க்ஸிய சித்தாந்தங்களில் மூழ்கினார் சிறையிலிருந்து வெளியேறி கைதாவதைத் தவிர்க்க மெக்ஸிக்கோவுக்கு தப்பியோடி , அங்கு இளம் புரட்சியாளர் எர்னஸ்டோ சேகுவாராவை சந்தித்தார்.

1956இல் 81ஆயுதபாணிகளான சகாக்களுடன் நாடு திரும்பியவர், கொரில்லா தாக்குதல்களை அக்கால கியூபா அரசுக்கு எதிராக ஆரம்பித்தார்.

இதற்கமைய 1959இல் இவர் உருவாக்கிய கிளர்ச்சிப் படை, கியூபாவின் தலைநகரைத் தாக்கி, கியூபாவின் முன்னாள் ஜனாதிபதி பாடிஸ்டாவை நாட்டை விட்டு விரட்டியது. அதன் பின்னர் கியூபாவின் தலையெழுத்தை எழுதும் பொறுப்பை காஸ்ட்ரோ ஏற்றுக்கொண்டார்.

“இங்கு கம்யூனிசம் அல்லது மார்க்ஸிசம் என்றில்லை. ஆனால், பிரதிநிதித்துவ ஜனநாயகம் மற்றும் சிறப்பாக திட்டமிடப்பட்ட பொருளாதாரத்தின் சமூக நீதிதான் இங்கு இருக்கிறது” என்பதுவே காஸ்ட்ரோவின் கொள்கையாக காணப்பட்டது.

கியூபா மீதான அமெரிக்காவின் ஏகாதிபத்திய ஆட்சி கண்டு கொதிப்புற்ற பிடல் காஸ்ட்ரோ கியூபா அரசுக்கு எதிரான கம்யூனிச போராட்டத்தில் மக்களோடு குதித்தார்.

பிடல் காஸ்ட்ரோவுக்கு கல்லூரிக்காலத்திலேயே நாளொரு போராட்டமும், பல மாதங்கள் சிறைத் தண்டனையும் பழகிப்போனது. அவரது கொரில்லா போர் தந்திரத்தோடு விவசாயிகளின் ஆதரவும் இணைய, 1959ம் ஆண்டு புல்ஜென்சியோ பாடிஸ்டாவின் ஆட்சி வீழ்த்தப்பட்டு, நாட்டின் ஜனாதிபதியானார்.

1959-1976 வரை கியூபாவின் பிரதமராகவும், 1976 – 2008ம் ஆண்டு வரை கியூபாவின் ஜனாதிபதியாகவும் பொறுப்பு வகித்தார். இவர் ஆட்சியில் அமெரிக்காவும் கியூபாவும் நேரடியாக மோதிக்கொண்டன.

அமெரிக்கா முதலில் காஸ்ட்ரோவை தன் ஆதரவாளராக்க முயற்சித்து தோல்வியுற்றது. இதன் பின்னர் தன் மக்களுக்கான அடிப்படை வசதிகளை உருவாக்கித்தர “கியூபா வளங்கள் கியூபா மக்களுக்கே சொந்தம், நாட்டிலுள்ள தொழிற்சாலைகள் அனைத்தும் அரசுடைமை” என அறிவித்தார்.

காஸ்ட்ரோ தடையினால் பாதிக்கப்பட்ட முதலாளிகள் முறையிட, கோபமான அமெரிக்கா, கியூபாவின் மீது பொருளாதாரத் தடைகளை விதித்தது.

கியூபாவின் பொருட்களை ரஷ்யா இறக்குமதி செய்ய ஒப்புக்கொண்டு கைகொடுத்தது. இச்சமயங்களில் அமெரிக்காவின் சி.ஐ.ஏ, காஸ்ட்ரோவை படுகொலை செய்ய 638 முறை முயற்சித்தது.

பிடல் காஸ்ட்ரோவை கொலை செய்ய முயற்சித்த அமெரிக்காவின் சதியை இங்கிலாந்து ஊடகமான சேனல் 4 ஆவணப்படமாக வெளியிட்டது. அதன் பெயர் “ஃபிடல்காஸ்ட்ரோவை கொல்ல 638 வழிகள்” என கூறப்பட்டது.

கியூபா கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமைப் பொறுப்பை பிடல் காஸ்ட்ரோவின் சகோதரர் ரவுல் காஸ்ட்ரோ ஏற்பார் என அந்நாட்டின் அமைச்சரவை, 2016 ஏப்ரல் 19 ஆம் திகதி அதிகாரபூர்வமாக அறிவித்தது.

இதன் போது அவர் ஆற்றிய கடைசி உரையில், “நெருக்கடியின்போது மக்களையும் அணி திரட்டுவதும், அவர்களுக்குத் தலைமையேற்பதும் கடினமான சவால் ஆகும். மக்களை அணி திரட்டாமல் மாற்றங்கள் மேற்கொள்வது சாத்தியமில்லை.

ஏழைகளை சுரண்டி, உழைப்பு, திறமை மற்றும் ஒட்டுமொத்த மனித சக்தியால் உருவாக்கப்படும் பொருள் செல்வத்தையும் முற்றாக அபகரித்துக் கொள்வதை தங்களது உரிமையாக எடுத்துக் கொண்டவர்களால் வரலாறு, காலம் காலமாக கம்யூனிஸ்ட் என்ற வார்த்தை மட்டமான சொல்லாகி கம்யூனிச சித்தாந்தம் வரலாற்றில் சிறுமைப்படுத்தப்பட்டே வந்துள்ளது.

நான் பொருளாதாரம் படித்துக் கொண்டிருந்த போது நானாகவே எனது சித்தாந்தத்தைப் பெற்றுவிடவில்லை. நான் சட்டம், அரசியல் அறிவியல் மாணவனாக இருந்த போது தனியாக பாடம் நடத்தும் ஆசிரியரைப் பெற்றிருக்கவில்லை.

நான் 20 வயது இளைஞனாக விளையாட்டுகளில் துடிப்பாக ஈடுபட்டபோது மார்க்சியம் – லெனினியத்தை கற்பிக்கவும், படிக்க உதவிடவும் எந்த ஆசிரியரும் இல்லை. சோவியத் ஒன்றியத்தின் மீதான நம்பிக்கையே உற்சாகம் தந்தது.

ரஷ்யப் புரட்சியைப் போன்று இன்னொரு புரட்சி நடப்பதற்கு 70 ஆண்டுகாலம் காத்திருக்க அவசியமில்லை என்று கருதுகிறேன். ஏகாதிபத்தியத்திற்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தினால் கிளர்ந்த சோவியத் புரட்சியைப் போன்ற பிரம்மாண்டமான சமூகப் புரட்சியை இந்த மனித குலம் காண்பது அவசியம்.

நவீன ஆயுதங்களின் பேரழிவு சக்தியினால் உலகிற்கு ஆபத்துள்ளது. அந்த ஆயுதங்கள் இந்த புவிக்கோளத்தின் அமைதி, மனித வாழ்வை குலைக்க காத்திருக்கின்றன. கோடிக்கணக்கான மனிதர்களுக்குத் தேவைப்படுவதைவிட, மிகக் குறைவான குடிநீரும், இயற்கை வளங்களுமே உலகில் உள்ளன.

மக்களுக்கு எப்படி உணவளிப்பது என்பதைப் பற்றி அவர்கள் யோசிக்கவே இல்லை. எனது பேச்சில் அரசியல் எங்கே? என்று யோசிக்கலாம். ஆனால் இன்று அரசியல் என்பது நான் கூறிய வார்த்தைகளில்தான் உள்ளது.

எந்தவிதமான தொழில்நுட்பமும் சென்றடையாத, பசியோடு காத்திருக்கும் ஆப்பிரிக்க மக்களுக்கு யார் உணவளிப்பது? கியூபக் கம்யூனிஸ்ட்டுகளின் சிந்தனைகள் ஒரு பூவுலகின் அழியாத சின்னமாக செயலாற்றி, மனித குலத்திற்கான பொருட்களையும், கலாச்சாரச் செல்வங்களையும் உற்பத்தி செய்து வரும்.” என்பதே அவரின் உரையாக அமைந்தது.

சி.ஐ.ஏ.வின் 2007 ஆண்டு காலப்பகுதியில் இயக்குநரான இருந்த மைக்கேல் வி. ஹேடன், சி.ஐ.ஏ.வில் நடந்த சட்டத்துக்குப் புறம்பான, அழுக்கான விடயங்களை 2007 ஜூன் 26ஆம் திகதி, சி.ஐ.ஏ.வின் ‘தணிக்கை’ செய்யப்பட்ட 702 பக்க ஆவணங்களை வெளியிட்டார்.

இந்த 702 பக்கங்கள் கொண்ட ஆவணத்திலிருந்து கியூபா ஜனாதிபதி பிடல் காஸ்ட்ரோ மீது நடந்த கொலை முயற்சி நிகழ்வுகளை விவரிக்கும் பக்கங்கள் குறித்தும் விளக்கியுள்ளார்.

பல ஆண்டுகளாகவே தன்னை கொல்ல சி.ஐ.ஏ. சதி செய்வதாக பிடல் காஸ்ட்ரோவினால் அக்காலப்பகுதியில் குற்றம்சாட்டப்பட்டது.

அதுவரை அவரது குற்றச்சாட்டை மறுத்து வந்த சி.ஐ.ஏ. இந்தத் ‘தணிக்கை’ செய்யப்பட்ட ஆவணத்தின் மூலம் காஸ்ட்ரோ சொல்வது உண்மைதான் என ஒப்புக் கொண்டது.

கியூபா தொடர்பான உண்மைகள் இந்த ஆவணங்களில் மூன்று பெரும் பிரிவுகளாக விரிந்திருக்கின்றன. முதல் பகுதி காஸ்ட்ரோவைக் கொலை செய்ய நடந்த முயற்சிகளை விவரிக்கிறது.

அதுவும் கேள்வி கேட்காமல் (அல்லது கேள்விக்கு உட்படுத்தாமல்?) சட்டத்தோடு இணைந்த அதிகாரத்துடன் இந்த முயற்சிகள் நடந்ததாக தெரிவிக்கிறது.

இரண்டாவது பகுதி, மத்திய உளவுப் பிரிவு இயக்குநர்களுக்கு இந்த கொலை முயற்சிகள் தெரியுமா?, அவர்களது ஒப்புதலுடன்தான் இந்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதா? என்பதை விவரிக்கிறது.

மூன்றாவது பகுதி, அந்தக் கால கட்ட அமெரிக்க ஜனாதிபதிகளுக்கு இந்தக் கொலை முயற்சி தொடர்பான திட்டங்கள் தெரியுமா? அவர்களது ஒப்புதலுடன்தான் நடத்தப்பட்டதா? என்பதை ஆதாரத்துடன் விவரிக்கிறது.

1960 – 1965 ஆகிய ஐந்து ஆண்டுகளுக்குள் எட்டு முறை பிடல் காஸ்ட்ரோவை கொலை செய்ய சி.ஐ.ஏ. முயற்சி செய்ததற்கான திட்டவட்ட ஆதாரங்கள் முதல் பகுதியில் காணப்பட்டுள்ளன.

ஆனால், 1975 ஆகஸ்ட் மாதம், ஒரு பட்டியலை காஸ்ட்ரோ வெளியிட்டார். அதில் தன்னை இருபத்து நான்கு முறை கொலை செய்ய முயற்சி நடந்ததாக திகதி வாரியாக குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், சி.ஐ.ஏ. இருபத்து நான்கு முறை அல்ல, எட்டு முறை மட்டுமே ‘முயற்சிகள்’ மேற்கொண்டதாக பதிலளித்திருந்தது. அதிலும் பல திட்டங்கள் ஆரம்பக்கட்ட நடவடிக்கைகளுடன் நின்று விட்டதாக கூறப்பட்டது .

இதில், நிழலுலக மாஃபியா கும்பல் மூலம் இரண்டு முறை காஸ்ட்ரோவை அழிக்க திட்டம் வகுக்கப்பட்டது வெளிச்சத்துக்கு கொண்டுவரப்பட்டது.

சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால், நவீன ஆயுதங்கள் முதல், விஷ மாத்திரை, விஷ பேனா, நச்சு பாக்டீரியா பவுடர்கள் வரை கற்பனை செய்ய முடியாத அளவு, சகல வழிகளிலும் காஸ்ட்ரோவை கொலை செய்ய சி.ஐ.ஏ. தந்திரங்களைக் கையாண்டுள்ளது அம்பலமாகியது.

எனினும் இந்த ஆவணங்களின் முதலில் காஸ்ட்ரோவை கொலை செய்ய வேண்டும் என்பது சி.ஐ.ஏ.வின் நோக்கமாக இருக்கவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.

மக்களிடம் இருந்து காஸ்ட்ரோவின் நற்பெயரைக் களங்கப்படுத்தும் முயற்சியே முதலில் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. உதாரணமாக ‘தாடிக்காரர்’, ‘விலங்குகளின் முடியைத் தாடியாகக் கொண்டவர்.’ என்பது போன்ற கேலி வார்த்தைகளை அதிகமாக கசிய விட்டிருக்கிறார்கள்.

1960ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் ஆகஸ்ட் வரை குறிப்பாக அந்த ஆண்டின் பிற்பகுதியில் காஸ்ட்ரோவின் பேச்சுக்களைத் திரிக்கும் வேலையில் சி.ஐ.ஏ. இறங்கியிருக்கிறது.

தனது திட்டங்களையும், செயலையும் நாட்டு மக்களுக்கு தெரியப்படுத்த அவ்வப்போது வானொலியில் காஸ்ட்ரோ உரையாற்றுவார். அப்போது அவர் பேசும் ஒலிபெருக்கியில் (மைக்) இரசாயன பவுடரைத் தெளிக்கலாமா என்று யோசித்ததாக உயரதிகாரிக்கு அனுப்பிய செய்திக் குறிப்பில் ஒரு சி.ஐ.ஏ. அதிகாரி குறிப்பிட்டிருக்கிறார்.

ஆனால், அது யோசனையுடன் நின்றுவிட்டது. அதேபோல் உரை நிகழ்த்துவதற்கு முன் சுருட்டுப் பிடிப்பது காஸ்ட்ரோவின் வழக்கம். அப்போது அவருக்கு விஷ சுருட்டு கொடுக்கலாமா என்றும் முயற்சி செய்திருக்கிறார்கள்.

இதற்கெல்லாம் உச்சமாக காஸ்ட்ரோ அணியும் பாதணிகளுக்குள் நச்சு இரசாயனத்தை தெளிக்கலாமா என ஒரு சி.ஐ.ஏ. அதிகாரிகள் திட்டம் தீட்டியுள்ளதாக ஆவணத்தில் கூறப்பட்டுள்ளது.

இதன் தொடர்ச்சியாக ‘விபத்து’ மூலமாக கியூபாவில் உள்ள முக்கியமான மூன்று தலைவர்களை ‘அழிக்க’ முடியுமா என 1960களில் சி.ஐ.ஏ. முயற்சி செய்துள்ளது.

இதே காலகட்டத்தில் சி.ஐ.ஏ.வின் ‘மருத்துவ பிரிவு’ 1960 ஆம் வருடம் ஆகஸ்ட் 16 ஆம் திகதி, விஷ சுருட்டுகள் அடங்கிய பெட்டியை சி.ஐ.ஏ. அதன் அதிகாரிகளிடம் கொடுத்துள்ளது.

அதில் உள்ள எந்தச் சுருட்டை எடுத்து காஸ்ட்ரோ தன் உதடுகளில் வைத்தாலும் உடனே மரணம் நிகழும் அந்தளவு சக்தி வாய்ந்த அந்த இரசாயன சுருட்டுப் பெட்டி, காஸ்ட்ரோவிடம் போய்ச் சேர்ந்ததா என்பதற்கான குறிப்பு இந்தத் ‘தணிக்கை’ செய்யப்பட்ட ஆவணங்களில் குறிப்பிடப்படவில்லை.

இவ்வாறான யோசனைகளுக்கு பின் நிழலுலக மாஃபியா கும்பலின் உதவியுடன் காஸ்ட்ரோவை கொலை செய்ய உயரதிகாரிகளின் கூட்டத்தில் பரிசீலிக்கப்பட்ட திட்டம் ஒரே மனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டதாக குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்படுகிறது.

ஆனால், தங்களைச் சேர்ந்த யாரும் முன்னின்று இதை நடத்தக் கூடாது என்பதில் சி.ஐ.ஏ. தீர்மானமாக இருந்துள்ளது. இதுதவிர, காஸ்ட்ரோவுக்கு விஷ மாத்திரை கொடுக்கலாமா என்றும் கூட சி.ஐ.ஏ. பரிசீலித்திருப்பதாக குறித்த ஆவணத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், இந்த முயற்சியும் தோல்வியில் முடிந்தது. 1963 ஆம் ஆண்டு தொடக்கத்தில் அமெரிக்காவின் சிறப்பு இராணுவப் படையான “டாஸ்க் போர்ஸ்” மூலமாக காஸ்ட்ரோவை அழிக்க முடியுமா? என சி.ஐ.ஏ. உயர்மட்ட குழுவின் திட்டங்கள் குறித்த ஆவணங்களில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறான பல வழிகளில் காஸ்ட்ரோவை கொலை செய்வது தவிர, அவரைப் பதவியில் இருந்து இறக்குவதற்கான முயற்சிகளும் சேர்ந்தாற்போல மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.

இவ்வாறாக CIA மேற்கொண்ட காஸ்ட்ரோ மீதான 638 கொலைமுயற்சிகளும் தோல்வியிலேயே முடிந்துள்ளது. காஸ்ட்ரோவின் வரலாற்று பதிவில் அவர் நீதிமன்றில் வழக்கு நீதி விசாரணை ஒன்றில் ஆற்றிய உரை உலகை அவர்பக்கம் திரும்பி பார்க்க செய்தது.

1953ஆம் ஆண்டு ஜுலை 26 திகதி மொன் காடாத் இராணுவ முகாமின் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டார். இந்த தாக்குதல் நகர்வுகளில் மாறிய வழித்தடங்கள் காரணமாக தாக்குதல் முயற்சி தோல்வியை தழுவியது.

காஸ்ட்ரோவும் அந்நாட்டு பாதுகாப்பு அதிகாரிகளிடம் சிக்கிக்கொண்டார். இதன் பின்னர் காஸ்ட்ரோவின் வழக்கு நீதி விசாரணைக்கு வந்தது. காஸ்ட்ரோ புரட்சிக்கு திட்டம் தீட்டியதை நீதிமன்றில் ஒப்புக்கொண்டார்.

மேலும் பாடிஸ்டாவின் அரசையும் அமெரிக்காவையும் கடுமையாக சாடினார். “நீதிபதி அவர்களே, தனக்குச் சாதகமான பாதையை நோக்கிப் பயணிப்பவன் ஒரு உண்மையான மனிதனல்ல.

கடமை எந்த திசையில் இருந்து அழைக்கிறதோ, அத்திசையில் பயணிப்பவனே உண்மையான மனிதன். அவனது இன்றைய கனவு, நாளைய சட்டமாகும்.

ஏனென்றால் அவன்தான் வரலாற்றைப் பின்னோக்கிப் பார்த்தவன். பல நூற்றாண்டுகளாக வரலாற்றின் பழைய பக்கங்களில் உள்ள, இரத்தம் தோய்ந்த போராட்ட நாட்களையும், பெரு நெருப்பில் அழிந்த சமூகங்களையும், அறிந்தவனால் மட்டுமே, மனித குலத்தின் எதிர்கால வாழ்வை சிந்திக்க முடியும். என் நாட்டு மக்கள், பலரும் பசியோடுதான் படுக்கப் போகிறார்கள்.

மருத்துவ வசதிகள் ஏதுமின்றிக் குழந்தைகள் கல்லறைகளை நாடுகிறார்கள். முப்பது சதவீத மக்களுக்கு, தங்கள் பெயரைக் கூட எழுதத் தெரியவில்லை.

அதைவிடக் கொடுமை, தொண்ணூற்று ஒன்பது சதவீத மக்களுக்கு நாட்டின் வரலாறே தெரியவில்லை.

நீதிபதி அவர்களே, நீங்கள் எனக்குக் கொடுக்க இருக்கின்ற தண்டனை கடுமையானதாக இருக்கும் என்பது எனக்குத் தெரியும்.

சிறையைக் கண்டோ அல்லது எனது எழுபது உடன் பிறந்தவனின் உயிரைக் குடித்த, இந்த கொடுங்கோல் ஆட்சியை கண்டு, அஞ்சுபவனல்ல நான்.

நீங்கள் என்னை சிறையில் அடைக்கலாம். ஆனால் வரலாறு என்னை விடுவிக்கும்.” என தெரிவித்தார். கியூபாவை பிடல் ஆட்சி செய்த காலங்களில், அமெரிக்காவில் பத்து பேர் ஜனாதிபதிகளாக இருந்துள்ளனர்.

தன் 90 வயதில் 2016 நவம்பர் 25 ஆம் திகதியன்று காற்றில் கரைந்துவிட்ட பிடல் காஸ்ட்ரோவின் நம்பிக்கையும் போர்க்குணமும், இன்று உலகமெங்கும் சமூக அரசியல் போராட்டங்களில் முன் வரிசையில் நிற்கும் இளைஞர்களின் மனங்களில் வெளிச்சங்களாக காணப்படுகின்றன.

Exit mobile version