அரசியல்

நாடாளுமன்றில் ஜனாதிபதி தேர்வு எவ்வாறு நடைபெறும்? மூவர் போட்டியிட்டால் வெற்றி எவ்வாறு கணிக்கப்படும்?

Published

on

ஜனாதிபதிக்கான பதவிகாலம் உத்தியோகப்பூர்வமாக நிறைவடைவதற்குள், அப்பதவியில் வெற்றிடம் (மரணித்தால், பதவி விலகினால், பதவி நீக்கப்பட்டால்) ஏற்படும் பட்சத்தில், புதிய ஜனாதிபதி எவ்வாறு தெரிவு செய்யப்படுவார் என்பது தொடர்பில் பலரும் கேள்விகளை எழுப்பிவருகின்றனர்.

இந்நிலையில் அரசமைப்பில் அதற்காக உள்ள ஏற்பாடுகள் மற்றும் நடைமுறைகள் தொடர்பில், இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான சாலிய பீரிஸ் இன்று (10) விளக்கமளித்தார்.

ஜனாதிபதியொருவர் பதவி விலகுவதாக இருந்தால், அது தொடர்பான பதவி விலகல் கடிதத்தை தனது கையொப்பத்துடன் சபாநாயகரிடம் கையளிக்க வேண்டும். அப்போதுதான் பதவி வெற்றிடம் ஏற்படும்.

( எதிர்வரும் 13 ஆம் திகதி கோட்டா, இராஜினாமா கடிதத்தை கையளிப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது)

அதன்பின்னர் பிரதமர் பதில் ஜனாதிபதியாக செயற்பட முடியும். அவ்வாறு இல்லாவிட்டால் சபாநாயகர் பதில் ஜனாதிபதியாக செயற்படலாம்.

ஜனாதிபதி பதவிக்கு வெற்றிடம் ஏற்பட்டு, ஒரு மாதத்துக்குள், நாடாளுமன்றம் ஊடாக புதிய ஜனாதிபதியை தெரிவுசெய்து கொள்ள வேண்டும்.

இலங்கை வரலாற்றில் ஒரு தடவை மாத்திரமே ஜனாதிபதி பதவிக்கு வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. 1993 மே முதலாம் திகதி ரணசிங்க பிரேமதாச படுகொலை செய்யப்பட்ட பின்னர், பதில் ஜனாதிபதியாக டிபி விஜேதுங்க செயற்பட்டார். அதன்பின்னர் அவர் ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டார்.

அந்த காலப்பகுதியில் ஜனாதிபதி பதவிக்கு டிபி விஜேதுங்க மட்டுமே, நாடாளுமன்ற செயலாளரிடம் வேட்பு மனு கையளித்திருந்தார். எனவே, அவர் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டார். (வாக்கெடுப்பு நடத்தப்படவில்லை)

நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒன்றுக்கு மேற்பட்டோர் ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடும்பட்சத்தில், 50 வீதத்துக்கும் மேலான வாக்குகளைப் பெறுபவர் அப்பதவிக்கு தெரிவு செய்யப்படுவார்.

நாடாளுமன்ற உறுப்பினர்கள்தான் வாக்காளர்கள், . 225 பேர் வாக்களிப்பில் பங்கேற்றால் 113 வாக்குகளைப் பெறுபவர் ஜனாதிபதியாவார்.

ஜனாதிபதி தேர்தலில்போன்றே 1,2,3 என விருப்பு வாக்குகளை பயன்படுத்தலாம். 4 வரை செல்லமுடியும்.

இதில் எவராவது 50 வீதத்துக்கு மேல் வாக்குகளைப் பெற்றால் ஜனாதிபதியாவார். எவரும் 50 வீத வாக்குகளைப் பெறாதபட்சத்தில், ஜனாதிபதி தேர்தலைபோன்றே, பட்டியலில் இறுதியாக உள்ளவருக்கு அளிக்கப்பட்ட வாக்குகளில் உள்ள 2 ஆம் விருப்பு வாக்கு கருத்தில் கொள்ளப்படும். இவ்வாறு 50 வீதம்வரும்வரை எண்ணிக்கை இடம்பெறும்.

இவ்வாறு ஜனாதிபதி சட்டத்தரணி விளக்கமளித்தார்.

( நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையால் ஜனாதிபதி பதவிக்கு தற்போது போட்டி இடம்பெறாது, கட்சி தலைவர்களின் இணக்கப்பாட்டுடன் ஒருவர் தெரிவுசெய்யப்படுவார் என்றே நம்பப்படுகின்றது.)

ஆர்.சனத்

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version