அரசியல்

கோட்டா – ரணில் அரசுக்கு எதிராக முன்முனைத் தாக்குதல்!

Published

on

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவையும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளடங்கலான அரசையும் பதவி விலகச்செய்வதற்கான ஜனநாயகப் போரில் – மிக உக்கிரமாக மும்முனைத் தாக்குதல் தொடுக்கப்பட்டுள்ளதால் கோட்டா – ரணில் அரசு கடும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. இதனால் அடுத்துவரும் நாட்களில் அரசியல் மாற்றங்கள் இடம்பெறுவதற்கான அறிகுறிகள் அரசியல் களத்தில் பிரகாசமாக தென்படுகின்றன.

‘ கோ ஹோம் கோட்டா’ எனற போஷத்துடன்
பொதுமக்கள், சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள், தொழிற்சங்க பிரமுகர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் என மக்களின் ஒன்றிணைந்த சக்தி ஒரு புறத்திலும், மகாசங்கத்தினர், பேராயர் உட்பட சர்வமதத் தலைவர்கள் மறு புறத்திலும், எதிர்க்கட்சிகளின் கூட்டு தாக்குதல் என ஆட்சி கட்டமைப்புக்கு எதிரான மும்முனைத்தாக்குதல் தற்போது தீவிரமடைந்துள்ளது.

அதேபோல தமது இருப்பை தக்கவைத்துக்கொள்வதற்காக ஜனாதிபதியும், பிரமரும் கடும் பிரயத்தனங்களில் ஈடுபட்டுவருகின்றனர்.

மக்கள் சக்திக்கு பணிந்து, அரசு பதவி விலகினால் – அல்லது நாடாளுமன்றத்தின் அறுதிப்பெரும்பான்மையை பெற்று ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தினால் – அடுத்ததாக மேற்கொள்ள வேண்டிய நகர்வுகள் சம்பந்தமாக ஆராய்வதற்காக எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில், இன்று (08) விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றது.

ஐக்கிய மக்கள் சக்தி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் முற்போக்கு கூட்டணி, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி, முஸ்லிம் காங்கிரஸ், மக்கள் காங்கிரஸ், விமல் – வாசு உள்ளடங்கலான 10 கட்சிகளின் கூட்டு உட்பட எதிரணி பிரமுகர்கள் சந்திப்பில் பங்கேற்றிருந்தனர். ஜே.வி.பி. கலந்துகொள்ளவில்லை.

சர்வக்கட்சி இடைக்கால அரசமைப்பதற்கான ஏற்பாடுகள் தொடர்பில் இதன்போது விரிவாக ஆராயப்பட்டது என தெரிவித்த ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவர் வாசுதேவ நாணயக்கார், ஜனாதிபதி பதவி விலகுவார் என்ற நம்பிக்கையையும் வெளியிட்டார்.

நாடாளுமன்றத்தில் 113 ஆசனங்களை பெறமுடியும் என உறுதிபட தெரிவித்த வாசு, இன்னும் ஒரு வாரமளவில் சர்வக்கட்சி அரசு அமையலாம் என்ற தகவலையும் மேற்படி கலந்துரையாடலின் பின்னர், ஊடகங்களிடம் தெரிவித்தார்.

” 10 பேர் கொண்ட அமைச்சரவை நிறுவப்படும். தேசிய தலைமைத்துவச் சபை அமைக்கப்படும். அதில் அங்கம் வகிப்பவர்கள் அமைச்சு பதவிகளை வகிக்கமாட்டார்கள், அதேபோல தேசிய ஆலோசனைக் குழுவொன்று அமைக்கப்படும். அதில் நிபுணர்கள், தொழிற்சங்க பிரமுகர்கள், சிவில் அமைப்பு பிரதிநிதிகள் ஆகியோர் இடம்பெறுவார்கள்.

113 ஐ விட ஆதரவு உள்ளது. மொட்டு கட்சியில் இருந்தும் சிலர் வருவார்கள். ” என்று நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

இன்றைய சந்திப்பின் கூட்டமைப்பின் சார்பில் சுமந்திரன் எம்.பி. பங்கேற்றிருந்தாலும், சர்வக்கட்சி அரசில் இணைவது சம்பந்தமாக தமது கட்சி இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை என தெரிவித்தார்.

அதேவேளை, நாடாளுமன்றத்தின் ஒத்துழைப்பு இல்லாமல் ஜனாதிபதியால் தனித்து செயற்படமுடியாது என சம்பிக்க ரணவக்க சுட்டிக்காட்டினார்.

செங்கடகல பிரகடனம்

இதற்கிடையில் சர்வக்கட்சி இடைக்கால அரசமைப்பதற்கு இடமளித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும், அவர் தலைமையிலான அரசும் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி சர்வமதத் தலைவர்கள் இன்று ‘செங்கடகல’ பிரகடனத்தை நிறைவேற்றியுள்ளனர்.

மகாசங்கத்தினரின் ஏற்பாட்டில் கண்டியில் நடைபெற்ற இதற்கான நிகழ்வில் பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையும், இந்து, இஸ்லாம் மதத் தலைவர்களும் பங்கேற்று பிரகடனத்தில் கையொப்பமிட்டனர். தொழிற்சங்க பிரமுகர்கள், சிவில் செயற்பாட்டாளர்களும் பிரகடனத்தில் கைச்சாத்திட்டனர்.

அதன்பின்னர் கலாநிதி ஓமல்பே சோபித தேரர் உள்ளிட்ட குழுவினர், செங்கலடக பிரடகனத்தை அஸ்கிரிய மற்றும் மல்வத்த பீடங்களின் மகாநாயக்க தேரர்களிடம் கையளித்தனர்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நிபந்தனையின்றி பதவி விலக வேண்டும், பொது வேலைத்திட்டத்தை உருவாக்குதல், சர்வக்கட்சி அரசமைத்தல் என 6 கோரிக்கைகள் குறித்த பிரடகனத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

ஜனாதிபதி தலைமையிலான அரசை பதவி விலக வலியுறுத்தி நாளை நாடு தழுவிய ரீதியில் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மேல் மாகாணத்தில் நீர்கொழும்பு, களனி, நுகேகொடை, கல்கிசை, கொழும்பு வடக்கு, தெற்கு மற்றும் கொழும்பு மத்தி ஆகிய பொலிஸ் பிரிவுகளில் பொலிஸ் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இன்று இரவு 9 மணி முதல் மறு அறிவித்தல் வரை பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆர்.சனத்

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version