அரசியல்

பேசுபொருள் ஆகும் ‘அரசியலமைப்பு பேரவை’

Published

on

அரசியலமைப்பிற்கான 21 ஆவது திருத்தச்சட்டமூலத்தை, இறுதிப்படுத்துவதற்கான பணிகள் தற்போது இடம்பெற்றுவரும் நிலையில், அதில் ஓர் அங்கமாக உள்ளடக்கப்பட்டுள்ள ‘அரசியலமைப்பு பேரவை’யும் பேசுபொருளாக மாறியுள்ளது.

எனவே, அரசியலமைப்பு பேரவை என்றால் என்ன, அதில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்கள் யார், அப்பேரவை ஊடாக முன்னெடுக்கப்படும் பணிகள் எவை, 21 ஆவது திருத்தச்சட்டமூலத்தில் அது எந்த அடிப்படையில் உள்வாங்கப்பட்டுள்ளது என்பதை அறிய பலரும் ஆர்வமாக உள்ளனர். அது பற்றிய ஓர் சுருக்கமான விளக்கம்.

அரச சேவையில், அரசியல் தலையீடுகளை தவிர்த்து, சுயாதீனத்தன்மையை உறுதிப்படுத்திக்கொள்ளும் பிரதான நோக்கிலேயே அரசியலமைப்பு பேரவை ஸ்தாபிக்கப்பட்டது. அரசியலமைப்பின் 17 ஆவது திருத்தச்சட்டத்தில் இதற்கான ஏற்பாடுகள் உள்ளடங்கியிருந்தாலும், 18 ஆவது திருத்தச்சட்டம் ஊடாக அந்த ஜனநாயக ஏற்பாட்டுக்கு மஹிந்த ராஜபக்சவால் சமாதி கட்டப்பட்டது.

2015 இல் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிபால சிறிசேன வெற்றிபெற்ற பின்னர் நிறைவேற்று அதிகார ஜனாதிபதிக்கான அதிகாரங்களை மட்டுப்படுத்தி, நாடாளுமன்றத்தின் அதிகாரத்தை மேம்படுத்துவதற்கும்,
நீதித்துறையின் சுயாதீனத்தன்மையை உறுதிப்படுத்திக்கொள்வதற்கும் 19 ஆவது திருத்தச்சட்டம் முன்வைக்கப்பட்டு, நிறைவேற்றப்பட்டது. அதன்மூலம் அரசியலமைப்பு பேரவையும் மீள ஸ்தாபிக்கப்பட்டது.

அரசியலமைப்பு பேரவையில் 10 உறுப்பினர்கள் அங்கம் வகித்தனர். இதன் தலைவராக சபாநாயகர் செயற்படுவார். (19 அமுலானபோது சபாநாயகராக கருஜயசூரிய பதவி வகித்தார். அவர் தலைவராக செயற்பட்டார்)
பிரதமர், எதிர்க்கட்சி தலைவர் ஆகியோர் இதில் நிரந்தர உறுப்புரிமையை பெற்றிருப்பர்.
அதாவது மேற்படி பதவிகளை வகிப்பவர்கள் பதவிநிலை அடிப்படையில் உள்வாங்கப்படுவார்கள்.

ஜனாதிபதியின் பிரதிநிதியொருவர் இடம்பிடித்திருப்பார், பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோர் மேலும் இருவரின் பெயரை முன்மொழியலாம். அதற்கு மேலதிகமாக மூன்று சிவில் பிரதிநிதிகளுக்கு (கட்சிசாராத) இடமளிக்கப்பட வேண்டும்.
பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சாராத கட்சி உறுப்பினர் ஒருவருக்கு இடமளிக்க வேண்டும். ( 19 அமுலில் இருந்தபோது ஜே.வி.பியின் சார்பில் விஜித ஹேரத் நியமிக்கப்பட்டிருந்தார்)

✍️ தேசிய தேர்தல் ஆணைக்குழு
✍️ அரச சேவை ஆணைக்குழு
✍️ தேசிய பொலிஸ் ஆணைக்குழு
✍️ மனித உரிமைகள் ஆணைக்குழு
✍️ இலஞ்சம் , ஊழல் ஆணைக்குழு
✍️ நிதி ஆணைக்குழு
✍️ எல்லை நிர்ணய ஆணைக்குழு
✍️ கணக்காய்வு ஆணைக்குழு
✍️ தேசிய பெறுகை ஆணைக்குழு

மேற்படி ஆணைக்குழுக்களுக்கான உறுப்பினர்களின் பெயர்களை, அரசியலமைப்பு பேரவையே ஜனாதிபதிக்கு பரிந்துரைக்கும்.

✍️பிரதம நீதியரசர்,
✍️உயர்நீதிமன்ற நீதியரசர்கள்,
✍️மேன்முறையீட்டு நீதிமன்ற தலைவர் மற்றும் நீதிபதிகள்
✍️சட்டமா அதிபர்,
✍️பொலிஸ்மா அதிபர்,
✍️கணக்காய்வாளர் நாயகம்,
✍️ஒம்புட்ஸ்மன்,
✍️நாடாளுமன்ற செயலாளர் நாயகம்

ஆகியவற்றுக்கான நியமனங்கள், அரசியலமைப்பு பேரவையின் அனுமதியுடனேயே ஜனாதிபதி நியமிக்க வேண்டும். ஜனாதிபதி தன்னிச்சையான முறையில் முடிவெடுப்பதை, இந்த ஏற்பாடு தடுத்தது.

20 ஆவது திருத்தச்சட்டம் ஊடாக அரசியலமைப்பு பேரவை இல்லாதொழிக்கப்பட்டது. அதற்கு பதிலாக நாடாளுமன்ற பேரவை உருவாக்கப்பட்டது.
பிரதமர், சபாநாயகர், எதிர்க்கட்சித் தலைவர் உட்பட ஐவர் அதில் அங்கம் வகித்தனர்.
அரசியலமைப்பு பேரவைபோல் இதற்கு அதிகாரம் இருக்கவில்லை. ஜனாதிபதியின் நியமனம் குறித்து பரிந்துரை முன்வைக்கலாம், அதனை சவாலுக்குட்படுத்த முடியாது. ஒரு வாரத்துக்குள் பரிந்துரை முன்வைக்காவிடின், ஜனாதிபதியால் தன்னிச்சையான முறையில் நியமனம் வழங்கலாம்.
கணக்காய்வு ஆணைக்குழு, தேசிய பெறுகை ஆணைக்குழு தவிர ஏனைய ஆணைக்குழுக்கள் பாதுகாக்கப்பட்டன. எனினும், நியமனம் ஜனாதிபதி வசம் இருந்தது.

உத்தேச 21 ஆவது திருத்தச்சட்டமூலத்தில் 19 இல், அரசியலமைப்பு பேரவைக்கு இருந்த அதிகாரங்கள் உள்வாங்கப்பட்டுள்ளன. குறிப்பாக மத்திய வங்கி ஆளுநர் நியமனத்தையும் அரசியலமைப்பு பேரவை கையாள வேண்டும் என்ற விடயம் உள்வாங்கப்பட்டுள்ளது. நிதிச்சபை உறுப்பினர்களின் நியமனத்தையும் இப்பேரவை கையாள்வது பற்றி தற்போது பரீசிலிக்கப்பட்டுவருகின்றது.

(21ஆவது திருத்தச்சட்டமூலம் இன்னும் இறுதிப்படுத்தப்படவில்லை. தற்போது திருத்தங்கள் உள்வாங்கப்பட்டுவருகின்றன. ஏனைய விடயங்களில் மாற்றங்கள் வந்தாலும், அரசியலமைப்பு பேரவையில் பாரிய மாற்றங்கள் வராது அதாவது 19 இல் இருந்த நிலை மாறாது என்றே நம்பப்படுகின்றது.)

ஆர்.சனத்

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version