அரசியல்

அரசியல் நெருக்கடி உச்சம் – கஜானாவும் காலி

Published

on

🛑 அரசியல் நெருக்கடி உச்சம் – கஜானாவும் காலி
🛑 திங்கள் மஹிந்த இராஜினாமா
🛑 பிரதமர் பதவியை ஏற்குமாறு சஜித்துக்கு அழைப்பு
🛑 நிபந்தனையுடன் ஐக்கிய மக்கள் சக்தி பச்சைக்கொடி
🛑 18 மாதங்களுக்கு இடைக்கால அரசு அமையும் சாத்தியம்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கும், பிரதமர் மஹிந்த ராஜபக்ச உள்ளடங்கலான அமைச்சர்களுக்கும் இடையிலான விசேட கூட்டமொன்று ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்றது.

சுமார் இரு மணிநேரம் நடைபெற்ற இச்சந்திப்பில், முதல் விவகாரமாக – அவசரகால நிலையை அமுல்படுத்த வேண்டியதன் அவசியத்துவம் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது. அதன்பின்னர் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட ஹர்த்தால், மக்களின் தன்னெழுச்சி போராட்டம் மற்றும் சமகால அரசியல் நிலைவரம் சம்பந்தமாகவும் விரிவாக அலசி ஆராயப்பட்டுள்ளன.

இதன்போது நாட்டில் அரசியல் உறுதிப்பாடு இன்மையால், பொருளாதாரத்துக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்தும், இந்நிலைமை நீடித்தால் எதிர்காலத்தில் ஏற்படும் விபரீதங்கள் பற்றியும் ஜனாதிபதி விளாவாரியாக எடுத்துரைத்துள்ளதுடன், பிரதமர் உள்ளடங்கலான அரசு பதவி விலக வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார் என அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.

ஜனாதிபதியின் மேற்படி கோரிக்கை தொடர்பில், பதிலளித்துள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ச தற்போதைய நெருக்கடி நிலைமைக்கு அரசாங்கம் பதவி விலகுவது தீர்வாக அமையாதென குறிப்பிட்டு, அதற்கான காரணங்களையும் பட்டியலிட்டுள்ளார்.

அரசு பதவி விலகினால், நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு அஞ்சியே ‘பதவி விலகல்’ என்ற முத்திரை குத்தப்படும் எனவும், தனது அரசியல் வாழ்வில் தோல்விகளை சந்தித்திருந்தாலும். இடையில் பாய்ந்தோடியது கிடையாது எனவும் மஹிந்த தனது உள்ளக் குமுறல்களை வெளிப்படுத்தி, பிரதமர் பதவியில் நீடிப்பதற்கான நியாயங்களை முன்வைத்துள்ளார்.

மஹிந்தவின் கருத்துகளுக்கு ஆதரவாக தினேஷ் குணவர்தன, விமலவீர திஸாநாயக்க உள்ளிட்ட சிலர் அமைச்சர்கள் குரல் கொடுத்துள்ளனர்.

எனினும், நாலக கொடஹேவா, சன்ன ஜயசுமன உட்பட ஜனாதிபதிக்கு சார்பான அமைச்சர்கள் சிலர் இதற்கு உடன்படவில்லை, பதவி விலகி, புதிய அரசை அமைக்க வழிவிடுவதே சிறந்தது என வாதிட்டுள்ளனர். ஒவ்வொரு அமைச்சராக இராஜினாமா செய்தால் அது நெருக்கடியை மேலும் உக்கிரமடையச் செய்யும், எனவே, பிரதமர் பதவி துறந்தால் அமைச்சரவையும் கலைந்துவிடும் எனவும் பரிந்துரைத்துள்ளனர்.

” தற்போதைய நிலையில் 2.9 ரில்லியன்வரைதான் கடன் பெறமுடியும். அந்த எல்லையை அண்மித்துவிட்டோம். இந்த தொகையை 4 ரில்லியன்வரை அதிகரித்துக்கொள்ளாவிட்டால், அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதிலும் நெருக்கடி ஏற்படும். இதற்கு நாடாளுமன்றத்தின் அனுமதி வேண்டும். அதனை பெறமுடியாத
நிலையில் அரசு உள்ளது.” என்று நிதி அமைச்சர் அலிசப்ரி விளக்கமளித்துள்ளார்.

இறுதியில், பிரதமர் பதவியை துறப்பதுதான், பிரச்சினைக்கு தீர்வெனில், அதனை செய்துவிட்டு, எதிரணியில் அமர்வதற்கு தான் தயார் என மஹிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி நாளை திங்கட்கிழமை, பிரதமர் மஹிந்த ராஜபக்ச, தனது பதவியை இராஜினாமா செய்வார் என அறியமுடிகின்றது. ‘இராஜினாமா’ குறித்த தகவலை பிரதமரின் ஊடக செயலாளர் நேற்று நிராகரித்திருந்தாலும், அந்த சம்பவம் திங்கள் நடக்கவுள்ளமை ஏரத்தாள உறுதியாகியுள்ளது.

🛑 சஜித் அணி இணக்கம்

இவ்வாறானதொரு பின்புலத்தில் தேசிய இணக்கப்பாட்டு அரசுக்கு ஆதரவு வழங்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, எதிர்க்கட்சித் தலைவரிடம் கோரிக்கை விடுத்துள்ளார் என அறியமுடிகின்றது.

அதன்பின்னர் சஜித் பிரேமதாச தலைமையில் ஐக்கிய மக்கள் சக்தியின் விசேட கூட்டமொன்று இடம்பெற்றுள்ளது.

இதன்போது அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் முன்வைத்துள்ள 13 கோரிக்கைகளுக்கமைய, தேசிய இணக்கப்பாட்டுக்கான வேலைத்திட்டம் உருவாக்கப்படுமானால், இடைக்கால அரசுக்கு ஆதரவு வழங்குவதற்கு சஜித் அணி தீர்மானித்துள்ளது.

🛑 அரசமைப்பின் 20 ஆவது திருத்தச்சட்டத்தை நீக்கிவிட்டு, 19 ஐ செயற்படுத்துதல், நாடாளுமன்றத்தில் அனைத்து கட்சிகளின் இணக்கப்பாட்டுடன் புதிய பிரதமர் நியமனம், அமைச்சரவை எண்ணிக்கை 15, 15 நிபுணர்கள் அடங்கிய தேசிய சபை, தேசிய இணக்கப்பாட்டு அரசின் ஆயுள் 18 மாதங்கள், 6 மாதங்களுக்குள் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை நீக்குவதற்கான உறுதிப்பாடு உட்பட 13 கோரிக்கைகளை சட்டத்தரணிகள் சங்கத்தால் முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்த யோசனைகள் தொடர்பில் சட்டத்தரணிகள் சங்கத்துடன், ஐக்கிய மக்கள் சக்தி நாளை பேச்சு நடத்தவுள்ளது.

🛑 11 அணிகளின் முடிவு

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியால் முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவு வழங்குவதற்கு 11 கட்சிகளின் கூட்டணி தீர்மானித்துள்ளது.

ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேனவின் இல்லத்தில் இன்று நடைபெற்ற கூட்டத்தின்போதே இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அவசரகால சட்டத்தை எதிர்க்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இடைக்கால அரசில் தேசிய சபையால் நியமிக்கப்படும் பிரதமருக்கு ஆதரவு வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது . பிரதமர் பதவியை ஏற்குமாறு சஜித்துக்கு பல தரப்பினரும் அழைப்பு விடுத்துள்ளனர்.

ஆர்.சனத்

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version