அரசியல்

பதவியை தக்கவைக்க ஜனாதிபதி, பிரதமர் கடும் பிரயத்தனம்

Published

on

  • பதவியை தக்கவைக்க ஜனாதிபதி, பிரதமர் கடும் பிரயத்தனம்
  • ஆளுங்கட்சிக்குள் மேலும் பிளவு
  • மொட்டு கட்சி எம்.பிக்களுடன் ஜனாதிபதி நாளை அவசர சந்திப்பு
  • இடைக்கால அரசுக்கு சஜித், அநுர, பொன்சேகா போர்க்கொடி
  • ரணில் – பஸில் ‘அரசியல் டீல்’ குறித்து வாசு வெளியிட்ட தகவல்

நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி நாளுக்கு நாள் உக்கிரமடைந்துவருவதால் அரசியல் களமும் கொதிநிலையிலேயே காணப்படுகின்றது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும், அவர் தலைமையிலான அரசும் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி நாட்டில் பல பகுதிகளிலும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுவந்தாலும், பதவி துறப்பதற்கு ஜனாதிபதியும், பிரதமரும் மறுப்பு தெரிவித்துவிட்டனர். மக்களும் பின்வாங்குவதாக இல்லை.

இந்நிலையில் தனது பதவியை தக்கவைத்துக்கொள்வதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கடும் பிரயத்தனங்களில் ஈடுபட்டுவருகின்றார். மூத்த உறுப்பினர்களை ஓரங்கட்டிவிட்டு, இளம் உறுப்பினர்களை அமைச்சரவைக்கு உள்வாங்கினார்.

அத்துடன், மஹிந்த – பஸில் தரப்பின் கடும் எதிர்ப்பையும்மீறி – புதிய பிரதமர் ஒருவர் தலைமையில் இடைக்கால அரசை நிறுவுவதற்குகூட கோட்டாபய ராஜபக்ச பச்சைக்கொடி காட்டியுள்ளார்.

மறுபுறத்தில் மஹிந்த மற்றும் பஸில் ராஜபக்ச தரப்பு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையையும், ஆட்சியையும் தக்கவைத்துக்கொள்வதற்கு பெரும்பாடுபடுகின்றது. அரசமைப்பில் திருத்தம் மேற்கொண்டு, ஜனாதிபதியின் அதிகாரங்களைக் குறைத்து, 21 ஆவது திருத்தச்சட்டமூலம் ஊடாக நெருக்கடி நிலைமையை சமாளிப்பதற்கு அத்தரப்பு திட்டம் தீட்டியது. ஆனால் அந்த முயற்சியும் கைகூடவில்லை என்றே தெரிகின்றது.

இந்நிலையில் பிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்கு நம்பிக்கை தெரிவித்து ஆளுங்கட்சிக்குள் கையொப்பம் திரட்டப்படுகின்றது. முன்னாள் மாகாணசபை உறுப்பினர்களை கொழும்புக்கு அழைத்து, மஹிந்தவும், அரசும் பதவி விலகக்கூடாது என ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இவ்வாறு ஆட்சியை தக்கவைத்துக்கொள்வதற்கு பஸில் தரப்பு காய்நகர்த்தல்களில் ஈடுபட்டாலும், பிரதமர் பதவி விலகி, சர்வக்கட்சி இடைக்கால அரசு அமைப்பதற்கு இடமளிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை ஆளுங்கட்சிக்குள் வலுத்துள்ளது.

அதேபோல ஜனாதிபதி தரப்பு, பிரதமர் தரப்பு என ஆளுங்கட்சிக்குள் பிளவும் ஏற்பட்டுள்ளது என அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.
‘ஹிரு’ தொலைக்காட்சிக்கு இன்று வழங்கிய நேர்காணலில் இராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்ணான்டோ முக்கிய சில விடயங்களை வெளியிட்டார்.

” அரசுக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இருந்தாலும், மக்கள் மத்தியில் செல்வாக்கு சரிந்துவிட்டது. பிரதமர், அமைச்சரவை பதவி விலகி, ஜனாதிபதிக்கு புதிய ஆட்சியை அமைப்பதற்கு வழிவிட வேண்டும்.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், ஜனாதிபதிக்கும் இடையில் நாளை (27) சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது. இதன்போதே ஜனாதிபதிக்கு தனது முடிவை செயற்படுத்த வாய்ப்பளிக்கப்படும்.” – என்று இராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்ணான்டோ குறிப்பிட்டார்.

ஜனாதிபதியை இன்று சந்தித்து இந்த யோசனை முன்வைக்கப்பட்டதாகவும், இதில் அமைச்சர்கள் உட்பட 10 பேர்வரை கலந்துகொண்டனர் எனவும் அவர் குறிப்பிட்டார்.

நாடாளுமன்றத்தில் சுயாதீன அணியில் ஆரம்பத்தில் இடம்பிடித்திருந்த அருந்திக்க பெர்ணான்டோ, பின்னர் தனது முடிவை மாற்றிக்கொண்டு, இராஜாங்க அமைச்சு பதவியை பெற்றுக்கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

நாளைய சந்திப்பின் பின்னர் ஜனாதிபதி தீர்க்கமானதொரு அரசியல் முடிவை எடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அதேவேளை, தற்போதை அரசியல் நெருக்கடிக்கு இடைக்கால தீர்வாக, சர்வக்கட்சி இடைக்கால அமைப்பததற்கான பேச்சுகளும் இடம்பெற்று வருகின்றன.

ஐக்கிய மக்கள் சக்தியினருக்கும், 11 கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் இடையில் இது தொடர்பில் நேற்று கலந்துரையாடல் இடம்பெற்றிருந்தாலும், இடைக்கால அரசு சம்பந்தமாக இறுதி முடிவு எட்டப்படவில்லை.

இந்நிலையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, அப்பதவியில் நீடிக்கும்வரை இடைக்கால அரசு அமைக்க ஆதரவு வழங்கப்படாது என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச இன்று மீண்டுமொருமுறை அறிவிப்பு விடுத்தார். தனது இந்த முடிவைமீறி கட்சி உறுப்பினர்கள் இடைக்கால அரசமைத்தால் பதவி துறப்பேன் என்ற எச்சரிக்கையையும் அவர் விடுத்துள்ளார்.

அதேபோல அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தியும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தமையில் அமையும் இடைக்கால அரசுக்கு இணக்கம் தெரிவிக்க மறுத்துள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும், அரசும் முதலில் பதவி விலகவேண்டும், அதன்பின்னர் குறுகிய காலத்துக்கு இடைக்கால அரசு அமைக்கலாம். பின்னர் தேர்தலுக்கு செல்லாம் என அநுரகுமார திஸாநாயக்க ஆலோசனை முன்வைத்துள்ளார். ஆனால் ஜனாதிபதி பதவி விலகாமால், அமையும் அரசுக்கு அவர் எதிர்ப்பை வெளியிட்டுள்ளார். பொன்சேகாவும் பச்சைக்கொடி காட்ட மறுத்துள்ளார்.

ஜனாதிபதி பதவியில் கோட்டா நீடிக்கும் சூழ்நிலையில், இடைக்கால அரசமைக்க சஜித் போர்க்கொடி தூக்கியுள்ளதால் 11 கட்சிகளின் கூட்டணில் கடும் சீற்றத்தில் உள்ளது.

‘இந்த முடிவின் பின்னணியில் அரசியல் ‘டீல்’ இருக்கலாம் என அந்த கூட்டணி சந்தேகம் வெளியிட்டுள்ளது. கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார இது குறித்து பரபரப்பான தகவலொன்ற வெளியிட்டார்.

“ ரணில் விக்கிரமசிங்க ஊடாக பஸில் ராஜபக்ச, சஜித் பிரேமதாசவுடன் அரசில் டீலுக்கு வந்திருக்கலாம். தனியே ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சி அமைய ஒத்துழைப்பு வழங்கப்படும் என்ற உறுதிமொழியை வழங்கியிருக்கலாம்.” – என்றார்.

அதேவேளை, ஜனாதிபதி மற்றும் அரசை பதவி விலக வலியுறுத்தி ஐக்கிய மக்கள் சக்தியால் இன்று பாரியதொரு பேரணி ஆரம்பிக்கப்பட்டது. நாளை மறுதினம் 28 ஆம் திகதி வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன. அன்றைய தினம் 21 பற்றி ஆராய்வதற்கான கட்சி தலைவர்கள் கூட்டமொன்றும் சபாநாயகர் தலைமையில் இடம்பெறவுள்ளது.

ஆர்.சனத்

#SriLanka #Artical

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version