கட்டுரை
பொருளாதார தலையிடிக்கு – ‘விலை உயர்வு’ தைலம் தீர்வாகுமா?
கடும் பொருளாதார நெருக்கடியால் இலங்கை திண்டாடிக்கொண்டிருக்கின்றது. டொலர் பற்றாக்குறையாலும் நெருக்கடி நிலைமை உருவாகியுள்ளது. அந்நிய செலாவணியும் உரியளவு கையிருப்பில் இல்லை. வருமான வழிமுறைகளும் ஏதோவொரு விதத்தில் முடங்கியுள்ளன.
அத்தியாவசிய பொருட்களைக்கூட கொள்வனவு செய்யமுடியாதளவுக்கு நெருக்கடி உச்சம் பெற்றுள்ளதாகவும், நாட்டில் பஞ்சம் ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் எதிர்க்கட்சிகள் எச்சரிக்கை விடுத்துள்ளன. இதனை அரசியல் ரீதியிலான குற்றச்சாட்டாக மட்டும் கருதிவிடமுடியாது. பொருளாதார நிபுணர்களும் இதற்கு நிகரான சிவப்பு சமிக்ஞையையே வெளிப்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் பொருளாதார நெருக்கடி நிலைமையை சமாளிப்பதற்கும், டொலர்களை உள்ளீர்ப்பதற்கும் மத்திய வங்கி கடும் பிரயத்தனங்களில் ஈடுபட்டுவருகின்றது. ஆனாலும் உரிய பலன் கிட்டவில்லை. வெளிநாடுகளிடம் சலுகை அடிப்படையில் கடன் கோரப்பட்டுள்ளன. இறக்குமதிகளுக்குகூட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
கடுமையான இறக்குமதி கட்டுப்பாடுகளாலும், டொலர் பிரச்சினையாலும் உள்நாட்டு சந்தையில் கேள்வி அதிகரித்து, பொருட்களின் விலைகளும் நாளாந்தம் அதிகரித்துவருகின்றன. மறுபுறத்தில் மக்களின் வாழ்க்கைச்சுமையும் அதிகரித்துள்ளது. இதற்கிடையில் எரிபொருட்களின் விலையும் எகிறியுள்ளமை சந்தையில் ‘சங்கிலி வலைய’ தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மக்கள் மென்மேலும் நெருக்கடிகளை எதிர்கொள்ள வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.
நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும்வகையில் எரிபொருள் விலைகள் அதிகரித்துள்ளன.
இதன்படி 92 ஒக்டேன் பெட்ரோல் லீற்றரொன்றின் விலை 20 ரூபாவாலும், 95 ஒக்டேன் பெட்ரோல் லீற்றரொன்றின் விலை 23 ரூபாவாலும் ஒட்டோ டீசலின் விலை 10 ரூபாவாலும்,177 ரூபாவாக அதிகரித்துள்ளது. சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் புதிய விலை 15 ரூபாவாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது. மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலையும் 10 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. ஐஓசி நிறுவனமும் விலை அதிகரிப்பை செய்துள்ளது.
வழமையாக உலக சந்தையில் எரிபொருளின் விலை அதிகரிக்கும்பட்சத்திலேயே உள்நாட்டிலும் அதிகரிப்பு இடம்பெறும். ஆனால் தற்போது உலக சந்தையில் எரிபொருள் விலை 10 வீதத்தால் குறைவடைந்துள்ளது.
கொரோனா நிலைமையால் அமெரிக்கா, இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகள் தம்வசமிருந்த எரிபொருட்களை சந்தைக்கு விநியோகித்துள்ளமையே விலை குறைவுக்கான காரணமாக கருதப்படுகின்றது.
எனவே, உலக சந்தையில் விலை குறைவடைந்துள்ள நிலையிலும் இலங்கையில் ஏன் அதிகரிப்பு இடம்பெறுகின்றது என்ற வினா எழலாம். அந்நிய செலாவணி நெருக்கடியை சமாளிக்கவே இவ்வாறு விலை அதிகரிப்பு இடம்பெற்றுள்ளது. இதன்மூலம் பொருளாதார நெருக்கடி முழுமையாக தீரப்போவதில்லை. ஆனாலும் பணவீக்கத்தில் விலை அதிகரிப்பு 3 வீத தாக்கத்தை செலுத்தும் என மத்திய வங்கி மதிப்பிட்டுள்ளது.
எரிபொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளதால் சகல விதமான போக்குவரத்து கட்டணங்களும் அதிகரிக்கும். அதற்கான அறிவிப்புகள் தற்போது வெளியாகியுள்ளன.
கேஸ் நெருக்கடியால் மக்கள் தற்போது அதிகளவு மண்ணெண்னையை பயன்படுத்திவருகின்றனர். வழமையாக ஒற்றை இலக்கத்தில் கூடும் மண்ணெண்னை விலை உயர்வு இம்முறை இரட்டிப்பாகியுள்ளது.
இதனால் மீனவர்கள் பெரிதும் பாதிக்கப்படும் நிலைமை காணப்படுகின்றது. குறிப்பாக ஆழ்கடல் மீன்பிடிக்கு செல்பவர்களுக்கு மேலதிகமாக 30 ஆயிரம் ரூபாவரை செலவு ஏற்படும் எனவும், ஏனையோருக்கு நாளாந்தம் 500 ரூபா வரை செலவு அதிகரிக்கும் என மீனவ சங்கங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
கொரோனாவால் சுற்றுலாத்துறை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் இலங்கையின் பொருளாதாரத்துக்கும் தாக்கம் ஏற்பட்டுள்ளமை உண்மைதான். ஆனால் கொரோனாவால்தான் முழுமையாக இந்நிலைமை ஏற்பட்டுள்ளது என்ற விடயத்தை ஏற்கமுடியாது. ஊழல்கள் மற்றும் முறையற்ற முகாமைத்துவமும் இதற்கு பிரதான காரணமாகும்.
ஆரம்பத்தில் கடுமையான நிபந்தனைகளுக்கு அஞ்சி சர்வதேச நாணய நிதியத்தை இலங்கை நாடகவில்லை. தற்போதைய சூழ்நிலையில் ஐஎம்எவ் ஐ அரசு நாடும் என்றே எதிர்பார்க்கப்படுகின்றது.
#SriLanka #Article
You must be logged in to post a comment Login