கட்டுரை
பிரபாகரனை விடுவிக்குமாறு ‘உயர்மட்ட’ அழுத்தம்! – பிரபாகரனை கைதுசெய்த பொலிஸ் அதிகாரி ‘பகீர்’ தகவல்கள்!
நன்றி – ‘லங்காதீப’ வார இதழ்
நேர்காணல் – இந்திகா ராமநாயக்க
தமிழாக்கம் – ஆர்.சனத்
“ பிரபாகரனை கைது செய்து, நான் சிறையில் அடைத்தேன். மக்கள் பொலிஸ் நிலையத்தை சுற்றிவளைத்து அவரை கொண்டுசெல்ல முற்பட்டனர். மறுபுறத்தில் பிரபாகரனை விடுவிக்குமாறு அரச தரப்பில் இருந்தும் கடும் அழுத்தம். எனினும், நான் அவரை விடுவிக்கவில்லை. இறுதியில் அப்போது வட மாகாணத்துக்கு பொறுப்பாக இருந்த பிரதி பொலிஸ்மா அதிபர், கிளிநொச்சி பொலிஸ் நிலையத்துக்கே வந்து பிரபாகரனை அழைத்துச்சென்றுவிட்டார். அதன்பிறகே அவர் தலைமையில் புலிகள் அமைப்பு தலைதூக்கியது.”
இவ்வாறு தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வே. பிரபாகரனை முதன் முதலில் கைது செய்த, கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரியாக கடமையாற்றிய உதவி பொலிஸ் அத்தியட்சகர் (ஓய்வுநிலை) பியரத்ன வீரசேன தெரிவித்துள்ளார்.
1957 ஆம் ஆண்டில் உப பொலிஸ் பரிசோதகராக இலங்கை பொலிஸ் சேவையில் இணைந்த அவர், 40 வருடங்கள் அத்துறையில் பணியாற்றி ஓய்வுபெற்றுள்ளார். குறிப்பாக 1980 முதல் 85 வரை அவர் கிளிநொச்சி பொலிஸ் தலைமையகத்தில் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரியாகவும் செயற்பட்டுள்ளார்.
வவுனியாவிலிருந்து கிளிநொச்சிவரை பிரபாகரன் தன்னுடன் காரில் பயணித்துள்ளார் எனக்கூறும் குறித்த முன்னாள் பொலிஸ் அதிகாரி, பிரபாகரன் நன்றாகவே சிங்களம் கதைப்பாரென்ற தகவலையும் வெளியிட்டுள்ளார்.
பிரபாகரனின் செயற்பாடுகள் தொடர்பில் அப்போதைய அரச மேல் மட்டத்துக்கு அறிக்கை சமர்ப்பித்தும் காத்திரமான நடவடிக்கை இடம்பெறவில்லையென சுட்டிக்காட்டும் அவர், முக்கியமான சில விடயங்களையும் அம்பலப்படுத்தியுள்ளார்.
‘லங்காதீப’ வார இதழுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் கூறியுள்ள விடயங்களில் முக்கியமான அம்சங்கள் வருமாறு,
புலிகள் அமைப்பின் முதல் கொள்ளை
” அன்று LTTE அமைப்பு இருக்கவில்லை. தமிழ்ப் பயங்கரவாதிகளாகவே அவர்கள் அடையாளப்படுத்தப்பட்டனர். அவ்வமைப்பிடம் நிதி பலம் இருக்கவில்லை. இதனால் அமைப்பை கட்டியழுப்புதற்கான வேலைத்திட்டங்கள் இடம்பெற்றுக்கொண்டிருந்தன. அவர்கள் ஒவ்வொரு இடங்களில்கூடி ஆட்களை திரட்டியதுடன், நிதி சேகரிப்பிலும் ஈடுபட்டனர்.
அக் காலப்பகுதியில் அவர்களின் குழுவில் நூறு பேர்கூட இருக்கவில்லை. அதேபோல அவர்கள் மக்களை துன்புறுத்தியமை தொடர்பிலோ, குற்றம் இழைத்தனர் என்றோ எந்தவொரு முறைப்பாடும் பதிவாகவில்லை. இவ்வாறானதொரு பின்புலத்திலேயே நிதி பலத்தை அதிகரிக்கும் நோக்கில் அவர்கள் முதலாவது கொள்ளையில் ஈடுபட்டனர். இக் கொள்ளைச் சம்பவம் இடம்பெற்ற காலப்பகுதி எனக்கு சரியாக நினைவில் இல்லை.
கிளிநொச்சி, துணுக்காய் பகுதியில் அமைந்திருந்த கூட்டுறவு நிலையத்தில் அந்த கொள்ளை இடம்பெற்றது. அது பெரிய நிலையம். நாளாந்தம் அதிக பணம் வரும். மூன்று வாரங்களுக்கு ஒருமுறையே பணத்தை வங்கிக்கு அனுப்புவார்கள். அது தொடர்பில் நன்கு அறிந்து வைத்திருந்து, வேன் செல்லும்போதுதான் கொள்ளை இடம்பெற்றது.
இக் கொள்ளைச் சம்பவம் பேசுபொருளாக மாறியது. பலரும் அது தொடர்பில் கவனம் செலுத்த ஆரம்பித்தனர். அப்போது பொலிஸ்மா அதிபராக பதவி வகித்த அனா செனவிரத்ன, என்னுடன் இது சம்பந்தமாக கதைத்தார். ” இது பாரிய பிரச்சினை. எனவே, இந்த கொள்ளைக் கும்பலை கூடிய விரைவில் கைது செய்ய வேண்டும்.”- என்றார்.
இதன் பிரகாரம் விசாரணை – தேடுதல் நடவடிக்கைக்காக மூன்று பொலிஸ் குழுக்கள் அமைக்கப்பட்டன.
கிளிநொச்சி, மன்னார் மற்றும் வவுனியா ஆகிய பகுதிகளை மையப்படுத்தி இம் மூன்று குழுக்களும் அமைக்கப்பட்டன. அவை எனது ஆலோசனையின் பிரகாரம் செயற்பட்டன.
மூன்று குழுக்களும் கூட்டாக இணைந்து முன்னெடுத்த விசாரணைகளின் பிரகாரம் இரண்டு வாரங்களுக்குள் சம்பவத்துடன் தொடர்புடைய 10 பேர்வரை எம்மால் கைது செய்யக்கூடியதாக இருந்தது. அவர்கள் வழங்கிய தகவல்களின் பிரகாரம் நிதியையும் மீளப் பெறக்கூடியதாக இருந்தது. இது தொடர்பான வழக்கு விசாரணை வவுனியா நீதிமன்றத்தில் இடம்பெற்றது. சந்தேக நபர்கள் ‘பி’ அறிக்கை ஊடாக வவுனியா நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
பொலிஸ்மா அதிபரின் ஆலோசனையின் பிரகாரம் குறித்த வழக்கு நடவடிக்கைக்கு பொறுப்பான சிரேஷ்ட அதிகாரியாகவும் நான் செயற்பட்டேன்.
பிரபாகரனுடனான முதல் சந்திப்பு
இந்த வழக்குக்காக நான் பல தடவைகள் வவுனியா நீதிமன்றத்துக்கு சென்றுள்ளேன். அவ்வாறு செல்லும்போது ஒரு நாள் முதன்முறையாக பிரபாகரனை சந்தித்தேன். அக் காலப்பகுதியில் பிரபாகரன் தொடர்பில் தகவல்கள் இருந்தாலும் அவர் பெருமளவில் பிரபல்யமடைந்திருக்கவில்லை. குற்றம் தொடர்பில் அவருக்கு எதிராக ஒரு முறைப்பாடுகூட கிடைக்கப்பெறவில்லை. இக்கொள்ளை சம்பவத்தை பிரபாகரனே வழி நடத்தினார் என தகவல் பதிவானாலும் அவரை கைதுசெய்யுமளவுக்கு சாட்சி இருக்கவில்லை.
பிரபாரனின் பெயரை கேள்விப்பட்டிருந்தாலும் அவரை எனக்கு தெரியவில்லை. நீதிமன்ற வளாகத்தில் வைத்துதான் நீதிமன்ற அதிகாரி ஒருவர் அடையாளம் காட்டினார். மரத்தின்கீழ் இளைஞர்கள் சிலருடன் நின்றுகொண்டிருந்தார். வழக்கு விசாரணையை அவதானிக்க வந்திருக்கக்கூடும்.
அப்போது நான் பிரபாகரனின் அருகிலேயே சென்றேன். ” வழக்குடன் சம்பந்தப்பட்டவர்களை சந்திக்க வந்தீர்களா” என தமிழ் மொழியில் வினவினேன்.
“ இந்த வழக்கில் எமது பொடியன்கள் உள்ளனர். அவர்களை சந்திக்க வந்தோம்.” – என பிரபாகரன் சிங்களத்தில் பதிலளித்தார். பிரபாகரனுக்கு நன்றாக சிங்களம் கதைக்க முடியும். அவர் கூறியதை கேட்ட பிறகு மீண்டும் நீதிமன்றம் சென்றேன்.
வழக்கு விசாரணையின் பின்னர், காரில் கிளிநொச்சி பொலிஸ் நிலையம் நோக்கி புறப்பட தயாரானேன். நீதிமன்ற நுழைவாயிலில் வைத்து எனக்கு பிரபாகரனை மீண்டும் சந்திக்க கிடைத்தது.
” நான் கிளிநொச்சி செல்கின்றேன். நீங்களும் போகின்றீர்களா” என வினவினேன். அவர் ஆம் என்றார். அப்படியானால் காரில் ஏறுமாறு கூறினேன். அவரும் ஏறினார்.
பயணத்தின் நடுவில் விசேடமாக எதுவும் கதைக்கப்படவில்லை. ” எங்கே இருக்கின்றீர்கள் என நான் கேட்க, கிளிநொச்சியில் என பதில் வந்தது. நான் காரை செலுத்தியதால் கதையில் நாட்டம் காட்டவில்லை. பிரபாகரனும் வீணாக கதையளக்கும் நபர் கிடையாது.
மாங்குளம் பகுதியில் வாகனத்தை நிறுத்தி, தேநீர் குடிப்பமா என தமிழில் கேட்டேன், அதற்கு அவரும் தலையாட்ட, இருவருக்கும் தேநீர் ‘ஓடர்’ செய்தேன்.
அப்பகுதியில் இராணுவ முகாமொன்று இருந்தது. அதன் பிரதானியாக கொப்பேகடுவ செயற்பட்டார். அவரை எனக்கு நன்கு தெரியும். இருவருக்குமிடையில் நல்லுறவு காணப்பட்டது. அவரை சந்தித்து, பிரபாகரன் என்னுடன்தான் இருக்கிறார், தேநீர் அருந்துகிறார் எனக் குறிப்பிட்டேன்.
‘அவருக்கு எதையும் செய்துவிட வேண்டாம்’ என அவர் கூறினார். பிரபாகரன் தொடர்பில் சந்தேகம் இருந்ததால் நான் எதையாவது செய்துவிடுவேன் என அவர் நினைத்திருக்கலாம்.
“சேர் நான் ஒன்றும் செய்யமாட்டேன். உங்களுக்கு தெரியப்படுத்துவதற்காகவே அது பற்றி அறிவித்தேன்.” – என அவருக்கு பதிலளித்தேன்.
அப்போது பிரபாகரனுக்கு இந்தியாவுடன் தொடர்பு இருந்தது. இராணுவ புலனாய்வு பிரிவு இதை கண்டறிந்திருந்தது.
தேநீர் அருந்திவிட்டு கிளிநொச்சி நோக்கி புறப்பட்டோம். கிளிநொச்சி சந்தியில் பிரபாகரன் இறங்கினார். நான் பொலிஸ் நிலையம் நோக்கி சென்றேன்.
இசை நிகழ்ச்சிமூலம் நிதி திரட்டல்
இந்த சம்பவம் இடம்பெற்று சில மாதங்களுக்கு பிறகு அமைப்புக்கு நிதி திரட்டுவதற்காக, தென்னிந்தியாவிலிருந்து மலேசியா வாசுதேவன் உள்ளிட்ட பாடகர்களை அழைத்துவந்து இசை நிகழ்ச்சி நடத்தினர். அமைப்புக்கு நிதி திரட்டுவதற்கான இரண்டாவது சந்தர்ப்பம் இதுவாகும்.
இசைக்குழுவில் 20 பேர்வரை இருந்தனர். யாழிலுள்ள ஹோட்டலொன்றிலேயே அவர்கள் தங்கியிருந்தனர். அவர்கள் அங்கிருப்பது தெரியவந்த பிறகு நான் ஹோட்டலுக்குச் சென்றேன். அங்கு பிரபாகரனை கண்டேன். கதைப்பதற்கு செல்லவில்லை. அவரும் வரவில்லை. அவர்கள் என்ன செய்கின்றனர் என்பதை அறிவதே எனது தேவையாக இருந்தது.
கிளிநொச்சி பொலிஸ் நிலையத்துக்கு அருகிலுள்ள மைதானத்தில் இசைநிகழ்ச்சியை நடத்தினர். பெருமளவானோர் பங்கேற்றனர். பெருமளவு நிதியும் திரட்டினர். இதற்கு கொப்பேகடுவவையும் அழைத்திருந்தனர். அவரும் வருகை தந்திருந்தார். ஆனால் அங்கிருந்து விரைவில் சென்றுவிட்டார்.
புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவலின் பிரகாரம், பயங்கரவாத செயலுக்காகவே அவர்கள் இதனை நடத்துகின்றனர் என்ற சந்தேகம் இருந்தது. எனவே, புலனாய்வாளர்களை ஈடுபடுத்தி இது தொடர்பில் நாம் விசாரணைளை ஆரம்பித்திருந்தோம்.
அக் காலப்பகுதியில் முஸ்லிம் அதிகாரி ஒருவரே கிளிநொச்சி புலனாய்வு பிரிவுக்கு பொறுப்பாக செயற்பட்டார். அவர் திறமையான அதிகாரி. அவரின் பெயர் நினைவில் இல்லை. தமிழ் பயங்கரவாதிகள் 40-50 பேரின் படங்களை அவர் என்னிடம் ஒப்படைத்தார்.
பிரபாகரன் குறித்து ஜே.ஆரிடம் முறைப்பாடு
சீஆர் புத்தகமொன்றை எடுத்து, ஒவ்வொரு பக்கத்திலும் ஒவ்வொருவரின் படத்தை ஒட்டி நபர்கள் தொடர்பான விபரங்களை எழுதினேன். இது தொடர்பில் பொலிஸ்மா அதிபர் அனா செனவிரத்னவுக்கும் அறிவித்தேன். இது தொடர்பில் கதைப்பதற்காக மாதம் ஒருமுறை அவர் கிளிநொச்சிக்கு வருவார்.
இச்சம்பவம் தொடர்பில் அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தனவுக்கு தெரியப்படுத்த நான் தீர்மானித்தேன். இதற்கு பொலிஸ்மா அதிபரின் அனுமதியும் கிடைத்தது.
ஜனாதிபதியை சந்திப்பதற்கு ஜனாதிபதி செயலாளரிடம் நேரம் கோரினேன். வாய்ப்பு வழங்கப்பட்டது.
ஜனாதிபதியை சந்தித்து நிலைமையை தெளிவுபடுத்தினேன், சேர், இவர்கள் ஏதோவொரு வேலைக்கு தயாராகின்றனர் எனக் குறிப்பிட்டு, படங்கள் சகிதம் புத்தகத்தை வழங்கினேன்.
அவர் மகிழ்வுடன் அதனை ஏற்றார். எனக்கு குளிர்பானமும் வழங்கினார். தகவல்களை வழங்கிய பின்னர் நான் அங்கிருந்து வந்துவிட்டேன். நான் வழங்கிய தகவல்கள் தொடர்பில் உரிய நடவடிக்கைகள் இடம்பெறவில்லை.
உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுத் தாக்குதல் தொடர்பில் தகவல்கள் கிடைத்தும், அதனை தடுப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு தற்போது உள்ளது. அன்று நான் ஜே.ஆர் ஜயவர்தனவுக்கு எல்லா தகவல்களையும் வழங்கினேன். உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால் புலிகள் தலைதூக்கியிருக்கமாட்டர்.
இதற்கிடையில் வடக்கை மையப்படுத்தி அவர்கள் குழுவாக செயற்பட்டனர். புளொட், ஈபிஆர்எல்எப், ஈரோஸ், ரெலோ, எல்ரீரீஈ மற்றும் ஈபிடிபி என குழுக்கள் அமைத்து செயற்பட்டனர். இக் குழுக்களுக்கு தலைவர்கள் இருந்தனர். எல்ரீரீஈ அமைப்பின் தலைவராக பிரபாகரன் நியமிக்கப்பட்டிருந்தார். வடக்கின் அதிகாரத்தைக் கைப்பற்ற முற்பட்டனர். இக் காலப்பகுதியில் இவர்களால் மக்களுக்கு துன்புறுத்தலென எந்த முறைப்பாடும் கிடைக்கப்பெறவில்லை. இக்காலப்பகுதியில் நான் பிரபாகரனை மீண்டும் சந்திக்கவில்லை.
பிரபாகரன் கைதும் சுற்றிவளைப்பும்
அந்த காலத்தில் எனது பொலிஸில் அதிகளவு தமிழ் அதிகாரிகள் பணியாற்றினர். பிரபாகரன் உள்ளிட்டவர்களை அவர்கள் எதிர்த்தனர். சிறு குழுக்களின் செயற்பாடுகளால் பயங்கரவாதம் தலைதூக்க ஆரம்பித்தது. பிரபாகரனும் மக்கள் மத்தியில் ஓரளவு பிரபல்யமடைந்திருந்தார்.
பிடியாணை கிடைத்ததும், தமிழ் பொலிஸ் அதிகாரிகளால்,கிளிநொச்சி நகரிலுள்ள வர்த்தக நிலையமொன்றில் இருக்கையில் பிரபாகரன் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட பிரபாகரன் பொலிஸ் நிலையம் கொண்டுவரப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இது தொடர்பான தகவல் வெளியானதும், அவரை அழைத்து செல்ல சிலர் பொலிஸ் நிலையம் வந்தனர். பிரபாகரன் கைது செய்யப்பட்டுள்ளார் என்ற தகவல் எல்லா இடங்களிலும் பரவியது. அவரை விடுதலை செய்யுமாறு அரச மற்றும் உயர் மட்ட பொலிஸ் அதிகாரிகளிடமிருந்து எனக்கு அழுத்தங்கள் வந்தன. நான் விடுவிக்கவில்லை. ஏனெனில் பிணை வழங்குமாறு பிடியாணையில் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை. நான் எனது கடமையையே செய்தேன்.
பொலிஸ்மா அதிபர் அனா செனவிரத்ன சட்டத்தின் பிரகாரம் செயற்படும் நபர். அந்த காலத்து பொலிஸுக்கு தற்போது போன்று அழுத்தம் இருந்தில்லை. பிடியாணையின் பிரகாரம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு அவர் எனக்கு ஆலோசனை வழங்கினார்.
மக்கள் பொலிஸ் நிலையத்தை சுற்றிவளைத்துவிட்டனர். நாலா புறங்களில் இருந்தும் எனக்கு தொலைபேசி அழைப்புகள். கடும் மன அழுத்தத்துக்கு உள்ளானேன். முடியாத கட்டத்தில் பொலிஸ் நிலையத்திலிருந்து இரகசியமாக வெளியேறி மாங்குளம் சென்றேன். கொப்பேகடுவவை சந்திக்கவே அங்கு சென்றேன்.
அதற்கிடையில் சம்பவம் குறித்து அவரும் அறிந்து வைத்திருந்தார். நான் அவரை சந்தித்து,” சேர் பிரபாகரன் எனது கட்டுப்பாட்டின்கீழ் இருக்கிறார். எதிர்காலத்தில் எமக்கு பெரும் பிரச்சினை தரக்கூடிய நபர் அவர். நான் முடித்துவிடவா” என கேட்டேன்.
” உனக்கு பைத்தியமா, பைத்தியத்தனமான செயலில் ஈடுபட வேண்டாம். நீ அவ்வாறு செய்தால் உன்னை தொங்கவிட்டுவிடுவார்கள், கை வைக்காதே. பொலிஸ்மா அதிபர் கூறியதுபோல் செயற்படு” என கொப்பேகடுவ எனக்கு ஆலோசனை வழங்கினார்.
அங்கிருந்து மீண்டும் பொலிஸ் நிலையம் வந்தேன். அங்கு குவிந்திருந்தவர்கள் இருக்கவில்லை. பொலிஸாரும் மௌனம் காத்தனர். என்ன நடந்தது என வினவினேன்.
புலிகளிடமிருந்து வந்த மரண ஓலை!
” சேர், டிஐஜி சேர் வந்தார், அரச உயர் அதிகாரிகள் கையொப்பமிடும் புத்தகத்தில் கையொப்பமிட்டு பிரபாகரனை அழைத்துச்சென்றுவிட்டார்.” – என பதில் வந்தது.
நான் அந்த குறிப்பை வாசித்தேன். பிரபாகரனை கொண்டுசெல்வதாக யாழ். டிஐசி அதில் எழுதியிருந்தார். அந்த டிஐஜி தமிழர். அவர் இவ்வாறு விடுவித்து அழைத்துச்சென்ற பிரபாகரனை அதன் பிறகு நான் காணவில்லை. அவர் காட்டுக்கு சென்றுவிட்டார். அதன்பிறகு அவர் தலைமையில் புலிகள் அமைப்பு தலைதூக்க ஆரம்பித்தது. அவர்களின் செயற்பாடுகள் தொடர்பில் முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றன.
எனது பெயர் குறிக்கப்பட்டு கிளிநொச்சி பொலிஸ் நிலையத்துக்கு கடிதமொன்று வந்தது. புலிகளால் அது அனுப்பட்டிருந்தது. பாரிய போஸ்டர். அது மரண ஓலை என்றுகூட சொல்லலாம்.
இது தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக கொழும்பிலிருந்து பொலிஸ் குழுவொன்று கிளிநொச்சி நோக்கி வந்தது. முருகண்டி பகுதியில் வைத்து அவர்கள் கொல்லப்பட்டனர்.
பிரபாகரன் கைது விவகாரத்தில் நான் அரசின் உத்தரவை மீறிவிட்டதாககூறி, பணியில் இருந்து என்னை இடைநிறுத்தினர். பதவி உயர்வு தடுக்கப்பட்டது. பழிவாங்கல் தொடர்ந்தது. இதனால் உதவி பொலிஸ் அத்தியட்சகராகவே ஓய்வு பெற வேண்டிய நிலைமை ஏற்பட்டது.
#Artical #Pirabhakaran
You must be logged in to post a comment Login