கட்டுரை

‘உணர்வுகளை மதிப்போம் – உறவுகளை நினைவுகூர அனுமதிப்போம்’

Published

on

உயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்து அஞ்சலி செலுத்துவதற்கான சந்தர்ப்பமென்பது அடிப்படை மனித உரிமைகளுள் ஒன்றாகும். அதனை தடுப்பதோ அல்லது தடுத்து நிறுத்துவதற்கு முற்படுவதோ மனித உரிமை மீறலாகவே கருதப்படுகின்றது. சர்வதேச சாசனங்களிலும் இவ்விடயம் தெளிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

தமிழர் தாயகத்திலும் நாளை பிரதான நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெறவுள்ளன. போரில் உயிரிழந்த தமது பிள்ளைகளை, உறவுகளை நினைவுகூர்ந்து அவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்கு மக்கள் தயார் நிலையில் உள்ளனர்.

மாவீரர் நினைவேந்தல் வாரத்தில் அதற்கான நிகழ்வுகளை தடுத்து நிறுத்துவதற்கு அரசு வழமைபோல் இம்முறையும் தீவிரம் காட்டியது. இதன்பிரகாரம் பொலிஸார் நீதிமன்றங்களை நாட்டினாலும் அவர்களின் நோக்கம் நிறைவேறவில்லை. இருந்தும் வடக்கு, கிழக்கில் வழமையைவிட பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

பிரச்சினைகளுக்கு ஜனநாயக வழியில் தீர்வு கிடைக்காத பட்சத்திலும், அடக்குமுறைகள் தலைவிரித்தாடும் போதும்தான் ஆயுதப் போராட்டம் தலைதூக்குகின்றது. விடுதலைக்கான ஜனநாயக வழிகள் மூடப்பட்டால் மாற்றுவழிதான் என்ன?

இலங்கையில் ஜே.வி.பியினரும் ஆயுதம் ஏந்திப் போராடினர். அக்கட்சியும் தடை செய்யப்பட்டிருந்தது. பிறகு ஜனநாயக நீரோட்டத்தில் அக்கட்சியினர் இணைந்த பிறகு, கிளர்ச்சியின்போது கொல்லப்பட்ட தமது போராளிகளை ஜே.வி.பியினர் இன்றளவிலும் பகிரங்கமாக நினைவுகூர்ந்து – அஞ்சலி செலுத்துகின்றனர். அதற்கு சட்டரீதியாக எவ்வித தடையும் ஏற்படுத்தப்படுவதில்லை.

இந்தநிலையில், விடுதலைப் போராட்டத்தில் உயிரிழந்த போராளிகளையும் நினைவுகூரும் உரிமை அவர்களின் உறவினர்களுக்கு இருக்க வேண்டும் என்பதே தமிழ் அரசியல் கட்சிகளதும், தமிழ் மக்களதும் கோரிக்கையாகும். தென்னிலங்கையிலுள்ள சில இடதுசாரி தலைவர்களும் இதனையே வலியுறுத்துகின்றனர்.

ஒரு தாய்க்கு அவரின் பிள்ளை, பிள்ளைதான். அரசின் பார்வைக்கு அவர் பயங்கரவாதியாக தெரிந்தால்கூட , உயிரிழந்த தனது பிள்ளையை நினைத்து கண்ணீர் விட்டு அழும், மலர் தூவி அஞ்சலி செலுத்தும் உரிமை அந்த தாய்க்கு இருக்க வேண்டும்.

விடுதலைப் புலிகள் அமைப்பு இலங்கையில் தடைசெய்யப்பட்ட அமைப்பாகும். எனவே, புலிகள் மாவீரர் நாளை அனுஷ்டித்த நாளில் நினைவேந்தலுக்கு அனுமதி வழங்கமுடியாது என்பதே ஆளுந்தரப்பின் வாதமாகும். அதற்காக தமது நடைமுறையை – பாரம்பரியத்தை மாற்றமுடியுமா என தமிழ் சிவில் அமைப்புகளின் செயற்பாட்டாளர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

“ 2ஆம் உலகப்போரில் கொல்லப்பட்ட ஜேர்மன் படையினரை, பிரிட்டன் படையினர் இன்று நினைவுகூருகின்றனர். அதேபோல ஜே.வி.பியினர் நினைவுகூருகின்றனர். எனவே, தமிழ் மக்களின் நினைவேந்தலை தடுப்பது தவறு” – என பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்திகூட சுட்டிக்காட்டியுள்ளது.

2016,2017,2018 ஆகிய ஆண்டுகளில் வடக்கு, கிழக்கில் அமைதியான முறையில் நினைவேந்தல்கள் இடம்பெற்றன. மக்களும் தமது உறவுகளை நினைத்து, அஞ்சலி செலுத்தினர். 2019 ஜனாதிபதி தேர்தலுக்கு பின்னர்கூட இந்த வாய்ப்பு இருந்தது. ஆனால் 2020 முதல் கெடுபிடிகள் அதிகரித்துள்ளன.

குறிப்பாக நினைவேந்தலுக்கான அனுமதியை அரசு வழங்கினால் மக்கள் அமைதியாக இருந்துவிடுவார்கள், தடுத்து நிறுத்த முற்பட்டால்தான் வீறுகொண்டெழுவார்கள் என செல்வம் எம்.பி. அண்மையில் சபையில் எச்சரிக்கை விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

உணர்வுகளுக்கு மதிப்பளிக்கப்பட வேண்டும். உண்மையான நல்லிணக்கத்தின் பிரதான அம்சம் அதுதான். மாறாக சட்டத்தை பயன்படுத்தி உணர்வுகளை – உரிமைகளை கட்டுப்படுத்த எத்தனித்தால் வீண் பிரச்சினைகளுக்கே அது வழிவகுக்கும்.

அபிவிருத்திகள் இல்லை, அப்படியே வாழு என்றால்கூட அதனை தாயக மக்கள் சகித்துக்கொள்வார்கள், ஆனால் உரிமைகள் இல்லை, அடங்கி வாழு என கட்டளையிட்டால் உயிரே போனாலும் அதனை அவர்கள் ஏற்கமாட்டார்கள் என்பதே ‘கடந்த காலம்’ என்ற வரலாற்று ஆசான் எமக்கு உணர்த்தியுள்ள பாடம்.

ஆக, வீடு கொளுத்தும் ராசாக்களுக்கு நெருப்பெடுக்கும் மந்திரிகளாக அல்லாமல், தமிழ் மக்களின் உணர்வுகளை ஆளுந்தரப்பிடம் எடுத்துரைக்கும் வகிபாகத்தை ஆளுங்கட்சி தமிழ் பிரமுகர்கள் உரிய வகையில் நிறைவேற்றினால் அதுவே அவர்கள் மக்களுக்கு செய்யும் மிகப்பெரிய சேவையாக அமையும் என்பதே தமிழ் தரப்புகளின் கோரிக்கையாகும்.

#SrilankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version