கட்டுரை

தெற்கு அரசியலில் மீண்டும் சூடு பிடித்துள்ள ‘பண்டோரா’ சர்ச்சை – ஐ.தே.க வின் முக்கிய புள்ளிக்கு வலைவிரிப்பு

Published

on

உலகளவில் பெரும் சர்ச்சையைக் கிளப்பிவிட்டுள்ள ‘பண்டோரா’ ஆவணத்தில் மற்றுமொரு இலங்கையர் தொடர்பான தகவல்களும் பட்டியலிடப்பட்டுள்ளமை தெற்கு அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சிக்கு மிகவும் நெருக்கமானவராகக் கருதப்படும் ஆர். பாஸ்கரலிங்கத்தின் இரகசிய கொடுக்கல் – வாங்கல்கள் மற்றும் சொத்துகள் தொடர்பான விபரங்கள் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளன.

பாஸ்கரலிங்கம் என்பவர் இலங்கை அரச மற்றும் அரசியல் கட்டமைப்பில் முக்கிய பதவிகளை வகித்தவர்.

முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் ஆலோசகராக செயற்பட்டுள்ளார். பிரேமதாசவின் திடீர் மறைவின் பின்னர் ஜனாதிபதியாக டி.பி.விஜேதுங்க நியமிக்கப்பட்டார். அவரின் ஆலோசகராகவும் அவர் செயற்பட்டுள்ளார்.

1994 இல் ஐக்கிய தேசியக் கட்சி கவிழ்ந்தது. அதன்பின்னர் 2002 இல் மீண்டும் ஆட்சிக்கு வந்தது. அப்போது நிதி அமைச்சின் ஆலோசகராகவும் இந்த பாஸ்கரலிங்கம் செயற்பட்டுள்ளார். குறுகிய காலப்பகுதிக்குள் ஐக்கிய தேசியக்கட்சி ஆட்சி மீண்டும் ஆட்சியை இழந்தது.

இந்நிலையில் 2015 ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. பொதுவேட்பாளராக களமிறங்கிய மைத்திரிபால சிறிசேன வெற்றிபெற்றதும் பிரதமர் பதவியை ரணில் ஏற்றார். அதன்பின்னர் பாஸ்கரலிங்கத்தை தனது பொருளாதார ஆலோசகராக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நியமித்தார்.

நல்லாட்சியின்போது பிணைமுறி மோசடி இடம்பெற்றது. இலங்கை மத்திய வங்கி வரலாற்றிலேயே இடம்பெற்ற பாரிய மோசடியாக இது கருதப்பட்டது. இவ் விவகாரத்துடன் பாஸ்கரலிங்கத்தை தொடர்புபடுத்தி பலகோணங்களில் கருத்துகளும் முன்வைக்கப்பட்டன. அவரிடம் வாக்குமூலங்களும் பதிவுசெய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இவ்வாறானதொரு பின்புலத்திலேயே பண்டோரா புயலிலும் சிக்கியுள்ளார் பாஸ்கரலிங்கம்.

உலகத் தலைவர்கள், அரசியல்வாதிகள் , பிரபலங்கள் மற்றும் கோடீஸ்வரர்களின் ரகசிய பண கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் இரகசிய சொத்துக்கள் தொடர்பிலான தகவல்கள் பாரிய நிதி ஆவணத்தினூடாக (PANDORA PAPERS) அண்மையில் அம்பலப்படுத்தப்பட்டன. புலனாய்வு ஊடகவியலாளர்கள் இணைந்து, பல தரப்பட்ட ஆய்வுகளுக்கு பின் வெளியிட்ட இந்த ஆவணம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இலங்கையை பொறுத்தமட்டில் இருவரின் பெயர்கள் ஆரம்பத்தில் பட்டியலிடப்பட்டிருந்தன. ராஜபக்ச குடும்பத்தின் உறவினரும், முன்னாள் இராஜாங்க அமைச்சருமான நிருபமா ராஜபக்ச மற்றும் அவரின் கணவரான திருக்குமார் நடேசன் ஆகியோரின் கொடுக்கல் – வாங்கல்களே அம்பலப்படுத்தப்பட்டிருந்தன. இவ் விவகாரம் இலங்கை அரசியல் களத்தையும் முழுமையாக ஆக்கிரமித்துக்கொண்டது.

இது தொடர்பில் உடனடியாக விசாரணைகளை ஆரம்பிக்குமாறு அழுத்தங்கள் குவிந்தன.

இந்நிலையில் பண்டோரா ஆவணத்தில் பெயரிப்பட்டுள்ள இலங்கையர்கள் தொடர்பில் விசாரணை நடத்தி , ஒரு மாதகாலத்துக்குள் தனக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகத்திற்கு ஜனாதிபதி ஒக்டோபர் 6 ஆம் திகதி உத்தரவிட்டிருந்தார்.

இதன் பிரகாரம் இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவும் விசாரணை வேட்டையில் இறங்கியது. திருக்குமார் நடேசனிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. நிருபமா ராஜபக்சவும் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழு ஜனாதிபதியிடம் விரைவில் இடைக்கால அறிக்கையொன்றை முன்வைக்கும் என எதிர்பார்க்கப்டுகின்றது. பாஸ்கரலிங்கம் தொடர்பிலும் விசாரணைகள் இனி முடுக்கிவிடப்படலாம்.

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version