கட்டுரை

இந்திய வெளிவிவகாரச் செயலாளரின் கொழும்புப் பயணம் – பின்னணி என்ன? -அ.நிக்ஸன்-

Published

on

இந்திய வெளிவிவகாரச் செயலாளரின் கொழும்புப் பயணம் – பின்னணி என்ன?

பிரான்சுடன் இணைந்து ஐ.ஒ.ஆர்.ஏ
அமைப்பை டில்லி செயற்படுத்துமா?

இந்தோ- பசுபிக் மற்றும் தென் சீனக்கடல் பிராந்தியத்தை மையமாகக் கொண்ட சீன எதிர்ப்பு அரசியல் செயற்பாடுகள் வேகமடைந்து வரும் நிலையில், இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கஸ்வர்த்தன ஸ்ரிங்லா (Harsh Vardhan Shringla) கொழும்புக்கு வந்துள்ளார் பலதரப்பட்ட வேலைத் திட்டங்களோடு இவருடைய பயணம் அமையுமென கொழும்பில் உள்ள இந்தியத் தூதரகம் கூறுகின்றது. ஈழத் தமிழர்களின் அரசியல் விடுதலை குறித்த பேச்சுக்கள் இங்கு முக்கியமாக இருக்காது.

ஆனால் புவிசார் அரசியல் நோக்கில் இலங்கையை மீண்டும் எச்சரிக்கின்ற அல்லது இலங்கைக்கு நம்பிக்கையூட்டக்கூடிய முறையில் சிங்கள ஆட்சியாளர்கள் விரும்புகின்ற 13 ஆவது திருத்தச் சட்டம் பற்றி மீண்டுமொரு தடவை ஞாபகப்படுத்தக்கூடும்.

ஆனால் அதனைத்தான்டி மிகக்கடும் தொணியில் இலங்கையை அச்சுறுத்தும் நகர்வில் புதுடில்லி செயற்படக்கூடிய நிலைமை இல்லை. ஏற்கனவே அவ்வாறான நகர்வுகளைக் கையாண்டும் பயனளிக்காத நிலையில், முடிந்தவரை இலங்கையைத் தம் கட்டுப்பாட்டில் வைத்திருக்கக்கூடிய அளவுக்கு இலங்கையோடு பணிந்து போகக்கூடிய அல்லது இலங்கை விரும்புகின்ற நகர்வுகளை மாத்திரமே புதுடில்லியால் அணுக முடியும் என்பது கடந்தகாலப் படிப்பினை.

இந்தவொரு நிலையில் கஸ்வர்த்தன ஸ்ரிங்லாவின் வருகையினால் அரசியல் தீர்வு குறித்த விவகாரங்களில் முன்னேற்றங்கள் வருமென ஈழத்தமிழர்கள் எதிர்பார்க்க முடியாது. ஆனால் அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய மூன்று நாடுகளும் இணைந்து மேற்கொண்ட அக்கியூஸ் ஒப்பந்தம் மற்றும் அமெரிக்காவுடன் பிரதமர் நரேந்திர மோடிக்கு தற்போது ஏற்பட்ட கசப்பான அனுபவங்களின் பின்னணியில் இந்தோ- பசுபிக் செயற்பாடுகளில் புதிய மாற்றங்களை மேற்கொள்ளும் திட்டங்கள் கஸ்வர்த்தன ஸ்ரிங்லாவிடம் இருக்கலாம்.

அத்துடன் கடந்த யூலை மாதம் இலங்கை முதலீட்டுச் சபையோடு இந்தியாவின் பிரபல வர்த்தக நிறுவனங்கள் நடத்திய முதலீடுகள் பற்றிய பேச்சுக்கள், ஒப்பந்தங்கள் மற்றும் அதன் தொடர்ச்சியான முன்னேற்றங்கள் குறித்தும் பேசக்கூடும். ஆனாலும் இலங்கையில் அமெரிக்க மற்றும் சீன நிறுவனங்களுக்கு உள்ள முக்கியத்துவம் இந்திய நிறுவனங்களுக்கு பெரியளவில் இல்லை.

இலங்கையைப் பொறுத்தவரை. இந்தியாவைக் கடந்து செயற்பட வேண்டுமென்ற ஆர்வமும் அதற்காக அமெரிக்காவுடன் இணைந்து மேற்கொண்டு வரும் சில நகர்வுகளும் இடமளிக்குமா என்பதே இங்கு கேள்வி. குறிப்பாக ஐ.ஒ.ஆர்.ஏ எனப்படும் (Indian Ocean Rim Association -IORA) இந்து சமுத்திரத்தைத் தொடுகின்ற கடலின் கரையோரத்தில் உள்ள பிராந்திய நாடுகளின் ஒத்துழைப்புக்கான கூட்டு முயற்சி மற்றும் பிம்ஸ்டெக் ஆகிய இரு அமைப்புகளையும் தூரிதமாகச் செயற்படுத்துவது தொடர்பாக இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கடந்த யூன் மாதம் 21 ஆம் திகதி அமைச்சர் தினேஸ் குணவர்த்தனவுடன் நடத்திய இணையவழி மாநாட்டில் வலியுறுத்தியிருந்தார்.

ஆனால் இதுவரையும் இலங்கை அதற்கான திட்டங்களை முன்னெடுக்கவில்லை. அதனைவிட இந்த ஆண்டு ஜனவரி மாதம் ஒன்பதாம் திகதி கொழும்புக்கு வந்திருந்த ஜெய்சங்கர் ஐ.ஒ.ஆர்.ஏ அமைப்பை சில நாட்களுக்குள் ஆரம்பிக்க வேண்டுமெனக் கட்டளையிட்டிருந்தார். அதன் பின்னரே கடந்த யூன் மாதம் நடத்தப்பட்ட இணையவழி மாநாட்டிலும் இது குறித்து வலியுறுத்தப்பட்டிருந்தது.

அத்துடன் பிம்ஸ்டெக் எனப்படும் பல்துறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான பிராந்தியக் கூட்டுச் செயற்பாடுகள் (The Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Cooperation- BIMSTEC) அமைப்பைத் தொடர்ந்து ஊக்குவிப்பது குறித்தும் அந்த மாநாட்டில் பேசப்பட்டிருந்தது. ஆனால் இதுவரையும் அவற்றைச் செயற்படுத்தும் நகர்வுகளில் இலங்கை ஈடுபட்டதாக இல்லை.

இந்த நிலையில் இந்திய வெளியுறவுச் செயலாளர் கஸ்வர்த்தன ஸ்ரிங்லா கொழும்புக்கு வந்துள்ளார். அதுவும் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை உள்ளிட்ட சார்க் அமைப்பைச் செயற்படுத்தவது தொடர்பாகவும் அதில் தலிபான்களை உள்ளடக்குவது குறித்தும் சீனா, பாகிஸ்தான், ஆகிய இரு நாடுகளும் கடந்தவாரம் தலிபான்களுடன் உரையாடியுள்ள நிலையில், கஸ்வர்த்தன ஸ்ரிங்லாவின் கொழும்புப் பயணம் அமைந்துள்ளது.

சார்க் அமைப்பைத் தொடர்ந்து இயக்க இந்தியா விரும்பாததன் பின்னணியிலேயே 1997 ஆம் ஆண்டு பிம்ஸ்டெக் உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பில் பாகிஸ்தான் இல்லை. இதனாலேயே பாகிஸ்தான் அங்கம் வகிக்கும் சார்க் அமைப்பை மீளவும் செயற்படுத்த சீனா முயற்சிக்கின்றது. பிம்ஸ்டெக் மற்றும் ஐ.ஒ.ஆர்.ஏ ஆகிய அமைப்புகளை துரிதமாகச் செயற்படுத்த இந்தியா திட்டமிடுகின்றது என்பதை அறிந்தே, சீனா கடந்த யூலை மாதம் 12 ஆம் திகதி இந்தியாவைத் தவிர்த்துப் பாகிஸ்தான் இலங்கை, பங்களாதேஸ் போன்ற நாடுகள் அடங்கலாக சீனா தெற்கு நாடுகளின் வறுமை ஒழிப்பு மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு மையம் (China-South Asian Countries Poverty Alleviation and Cooperative Development Centre) ஒன்றை உருவாக்கியிருந்தது.

நேட்டோ படைகள் விலகியதால் தலிபான்களை அரவணைக்கும் நோக்கில் சார்க் அமைப்பை மீண்டும் செயற்படுத்த கடந்த வாரம் தலிபான்களுடன் பேச்சுக்களை ஆரம்பித்துள்ளதாக சீன வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ஜாவோ லிஜியன் கூறியிருந்தார். இந்தநிலையில் கொழும்புக்கு வந்துள்ள கஸ்வர்த்தன ஸ்ரிங்லா. இலங்கையோடு என்ன பேசப் போகிறார்? சார்க் அமைப்பை மீளச் செயற்படுத்தும் சீனாவின் முயற்சிக்கு ஆதர வழங்கக்கூடாதெனக் கேட்கப் போகிறாரா? அல்லது பாகிஸ்தான் இல்லாத பிம்ஸ்டெக் ஐ.ஒ.ஆர்.ஏ அமைப்பை துரிதமாகச் செயற்படுத்த வேண்டுமென வற்புறுத்தப் போகிறாரா? என்ற கேள்விகள் உண்டு.

அத்துடன் இந்தியாவோடு இணைந்து பயணிப்பதில்லை அல்லது இந்தோ- பசுபிக் விவகாரத்தில் இந்தியாவின் பரிந்துரைகளைக் கேட்கத் தேவையில்லை. அமெரிக்கா மாத்திரம் சொன்னால் போதும் என்ற எண்ணத்தோடு செயற்படும் இலங்கையை, இந்திய வெளியுறவுச் செயலாளர் கஸ்வர்த்தன ஸ்ரிங்லா எவ்வாறு அணுகப்போகிறார்? அதுவும் இந்தோ- பசுபிக் நலனுக்காக அமெரிக்க ஆதரவுடன் இந்தியாவைத் தலைமையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட குவாட் அமைப்பை மீறி அக்கியூஸ் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ள நிலையில், எவ்வாறு இலங்கையை இந்தியா கையாளப் போகின்றது என்பதே இங்கு பிரதான கேள்வி.

ஏனெனில் கடந்த ஏப்ரல் மாத இறுதியில் (Supply Chain Resilience Initiative -SCRI) என்ற அமைப்பை ஜப்பான். அவுஸ்ரேலியா ஆகிய குவாட் உறுப்பு நாடுகளோடு இணைந்து இந்தியா உருவாக்கியிருந்த நிலையிலேயே அக்கியூஸ் ஒப்பந்தத்தை அவுஸ்திரேலியா, பிரித்தானியா ஆகிய நாடுகளைச் சேர்த்து அமெரிக்கா கைச்சாத்திட்டிருந்தது.

ஆகவே இந்தோ- பசுபிக், தென்- சீனக் கடல் விவகாரங்களில் இந்தியாவை நம்பி குவாட் அமைப்பை உருவாக்கிச் செயற்பட்டு வந்த அமெரிக்கா, திடீரென அக்கியூஸ் ஒப்பந்தத்தைக் கைச்சாத்திட்டன் மூலம் இந்தோ- பசுபிக் பிரந்தியத்தில் இந்தியாவையும் வல்லாதிக்க நாடாகக் காண்பிக்க விரும்பிவில்லை என்பது பட்டவர்த்தனமாகிறது. ஆகவே இந்தப் பிராந்தியத்தில் சீனா மாத்திரமல்ல, இந்தியாவும் அமெரிக்காவுக்கு எதிரிதான் என்ற சமிக்ஞை வெளிப்படுகின்றது.

ஆப்கானிஸ்தானில் இருந்து நேட்டோ படைகளை வெளியேற்றி இந்தோ- பசுபிக் மற்றும் தென் சீனக் கடல் பிராந்திய விவகாரங்களில் அமெரிக்கா கவனம் செலுத்தும் என ஏற்கனவே இக் கட்டுரையாளர் எழுதியுள்ளதன் பிரகாரம், இந்தியாவைத் தவிர்த்து பாராம்பரியக் குடியேற்றவாதச் சிந்தனையுள்ள பிரித்தானியாவுடன் இணைந்து அவுஸ்ரேலியாவையும் அனைத்துக் கொண்டதன் ஊடாக ஆசிய மக்களுக்கு மதிப்புக் கொடுக்காத வெள்ளைத் தோல் குணத்தையும் அமெரிக்கா வெளிப்படுத்தியிருக்கிறது எனலாம்.

ஐ.நா.பொதுச் சபையில் உரையாற்றச் சென்ற நரேந்திர மோடிக்கு அமெரிக்காவில் கொடுக்கப்பட்ட வரேவற்பில் புறக்கணிப்பு இருந்ததாக இந்திய ஊடகங்களும் சமூக வலைத்தளங்களும் வெளிப்படுத்தியிருந்தன. அதனை இந்திய வெளியுறவு அமைச்சு மறுத்திருந்தாலும், 2019 ஆம் ஆண்டு மோடி அமெரிக்காவுக்குச் சென்றிருந்தபோது டொனால்ட் ட்ரம் வழங்கிய மரியாதையும் இந்தியாவுக்குரிய முக்கியத்துவமும் இல்லையென லன்டன் பிபிசி சுடடிக்காட்டியிருந்தது. (டொனால்ட் ட்ரம்ப் முக்கதியத்துவம் வழங்கியமைகூட இந்தியாவைப் பயன்படுத்தும் நோக்கம் மாத்திரமே)

ஆகவே சீனாவை எதிர்க்கத் திராணியற்ற நிலையில் அமெரிக்காவோடு கூட்டுச் சேர்ந்த இந்தியா, குவாட் அமைப்புக்கு அமெரிக்க ஒத்துழைப்புடன் தலைமை தாங்கி அதன் மூலம் இந்தோ- பசுபிக் பாதுகாப்புக்காக SCRI என்ற அமைப்பையும் உருவாக்கிச் செயற்பட்டிருந்த நிலையில, இந்தோ- பசுபிக் மற்றும் தென் சீனக் கடல் விவகாரங்களைக் கையாள அவுஸ்திரேலியாவுக்கு அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களை வழங்கும் அக்கியூஸ் ஒப்பந்தம் கைச்சாத்திட்டிருப்பதை இந்தியா எந்தக் கண்ணோட்டத்தில் அவதானிக்கின்றது? ஆனால் மோடிக்கு அமெரிக்காவில் வழங்கப்பட்ட முக்கியத்துவமற்ற வரவேற்பு இந்தியாவுக்கு அதனை மெதுவாக உணர்த்தியுள்ளது.

கஸ்வர்த்தன ஸ்ரிங்லா கொழும்பில் இந்தியா சார்புடைய மேற்படி இரு அமைப்புகளைச் செயற்படுத்துவது குறித்து இலங்கையோடு பேசவுள்ள தன்மையைக் கொண்டும் அமெரிக்கா இந்தியாவோடு இடைவெளியை உருவாக்கிவிட்டது என்பதையும் அறியக்கூடியதாக இருக்கும்.

அக்கியூஸ் ஒப்பந்தத்தை பிரான்ஸ் கடுமையாக எதிர்ப்பதால் ஐ.ஒ.ஆர்.ஏ அமைப்புக்கு பிரான்ஸின் உதவியை சில வேளைகளில் இந்தியா கோரலாம். ஏனெனில் கடந்த ஆண்டுதான் இந்த அமைப்பில் பிரான்ஸ் இணைந்து கொண்டது. இதில் இணைவதற்கு பாகிஸ்தான் கடந்த ஆண்டு விண்ணப்பித்துமுள்ளது. ஆனால் இந்தியா விரும்பவில்லை.

எனவே அக்கியூஸ் ஒப்பந்தத்திற்கு எதிராக நேடியான எதிர்ப்பை புதுடில்லி இதுவரை வெளியிடாதவொரு நிலையில், பிரான்ஸ் நாட்டோடு நட்புத் தொடருமென சமூகவலைத் தளத்தில் நரேந்திரமோடி அறிவித்திருக்கிறார். இதன் மூலம், ஐ.ஒ.ஆர்.ஏ அமைப்பை பிரான்ஸின் ஒத்துழைப்போடு செயற்படுத்த விரும்பக்கூடும். ஆனால் கஸ்வர்த்தன ஸ்ரிங்லாவின் கொழும்புப் பயணத்தின் பின்னரே அதனை உறுதிப்படுத்த முடியும்.

ஐ.ஒ.ஆர்.ஏ என்பது ஒரு சர்வதேச அமைப்பாகும். அதாவது இந்துமா சமுத்திரத்தின் கடலோர எல்லைகளைத் தொடுகின்ற நாடுகளின் கூட்டுச் செயற்பாடுகளாகும். பிரான்ஸ் நாட்டுக்குச் சொந்தமான சில தீவுகள் இந்தப் பிராந்தியத்தில் உண்டு. அது மாத்திரமல்ல இந்தோ- பசுபிக் பிராந்தியப் பாதுகாப்பு விடயத்தில் பிரான்ஸ் தனித்தும் சில நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது.

ஆகவே அக்கியூஸ் ஒப்பந்தத்திற்கு எதிராகவுள்ள பிரான்ஸ் இந்தியாவுடன் கைகோர்த்து இந்தோ- பசபிக் விவகாத்தைக் கையாளலாம். ஆனாலும் அமெரிக்காவை ஆழமாக நம்பியதுபோன்றல்லாது. இந்தப் பிராந்தியத்தில் இந்தியாவே முதன்மை நாடு என்ற அந்தஸ்த்தை உறுதிப்படுத்தும் விகையிலேயே பிரான்சுடன் இந்தியா கைகோர்க்க வேண்டும்.

அவுஸ்திரேலியா, மொரீசியஸ், மாலைதீவு, ஈரான், இலங்கை, இந்தியா உள்ளிட்ட 23 நாடுகள் இந்த அமைப்பில் அங்கம் வகிக்கின்றன. 1997 ஆம் ஆண்டு மார்ச் ஆறாம் திகதி இந்த அமைப்பு உருவாக்கப்பட்டது. 2017 ஆம் ஆண்டு இந்த அமைப்பின் மாநாடு இந்தோனேசியாவில் நடத்தப்பட்டது.

ஆனால் ஐ.ஒ.ஆர்.ஏ அமைப்பில் அங்கம் வகிக்கும் அவுஸ்திரேலியா அக்கியூஸ் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டதால் அமெரிக்காவை மீறி பங்களிப்பச் செய்யுமா என்ற கேள்வி எழும். ஆனாலும் அக்கியூஸ் ஒப்பந்த்தின் பின்னரான அரசியல். இராணுவக் கொதிநிலையில் இந்திய இராஜதந்திரம் அமெரிக்காவோடு அணுகும் முறையிலேயே இவை அனைத்தும் சாத்தியமாகும்.

ஆனால் அமெரிக்காவைத் தாண்டி சுயமாகச் செயற்படும் தற்துணிவு புதுடில்லிக்கு வருமா என்பதும் பலருடைய கேள்வி. அரசியல். பொருளாதார ஸ்திரமற்ற சிறிய நாடான இலங்கையைக்கூடக் கையாள முடியாத இந்திய இராஜதந்திரம், இந்தோ- பசுபிக் விவகாரத்தில் அமெரிக்காவைக் கடந்து செயலாற்றுமா? ஆனால் தலிபான்களின் எழுச்சியும் அதன் பின்னரான அக்கியூஸ் ஒப்பந்தமும் இந்தியாவுக்கு அரசியல் இராணுவ நெருக்கடிகளை மாத்திரமல்ல பொருளாதாரச் சிக்கல்கலையும் உருவாக்கும்.

இதற்குக் காரணம் அமெரிக்காதான் என்பதை இந்தியா உணராதவரை இந்த லாபங்களை அனுபவிக்கப்போவது இலங்கைதான். அதனால் மேலும் நசுக்கப்படப்போவதும் ஈழத்தமிழர்களே.

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version