கட்டுரை

இலங்கையுடன் இந்தியா ஒப்பந்தம் செய்யுமா? – அ.நிக்ஸன்

Published

on

இலங்கையுடன் இந்தியா ஒப்பந்தம் செய்யுமா? –
பூகோள அரசியல் மாற்றங்கள் தரும் எச்சரிக்கை
பூகோள அரசியல் நகர்வுகளில் எழக்கூடிய மாற்றங்கள் அதனால் உருவாகும் வல்லாதிக்கப் போட்டிகள் இலங்கை போன்ற நாடுகளும்,  அந்த நாடுகளில் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் தேசிய இனங்களுக்கும் அடுத்த என்ன செய்ய வேண்டுமென்ற செய்தியைச் சொல்லுகின்றன.

 

பூகோள அரசியல் மாற்றங்களை சாதகமாகப் பயன்படுத்தும் இலங்கை ஆட்சியாளர்கள்

இலங்கையில் சிங்கள ஆட்சியாளர்களைப் பொறுத்தவரை, 2009 ஆம் ஆண்டு மே மாதத்திற்குப் பின்னரான சூழலில் இந்தியாவைக் கடந்து இலங்கையை தெற்காசியப் பிரந்தியத்தில் முக்கியத்துவம் உள்ள நாடாக மாற்ற வேண்டுமென்ற நோக்கில் பூகோள அரசியல் மாற்றங்களைச் சாதகமாகப் பயன்படுத்துகின்றனர்.

அமெரிக்க – இந்திய நெருக்கம், பாகிஸ்தான் – அமெரிக்க முரண்பாடு, பாகிஸ்தான் – சீன உறவு, பாகிஸ்தான் – இந்திய மோதல், இந்திய – ஜப்பான் உறவு ஆகியவற்றைக் கடந்து இலங்கை இந்த நாடுகளுடன் தமது உறவைப் பேணுகின்றது. ஏனெனில் அது சிறிய நாடு, ஆனாலும் அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகளுடன் சமாந்தரமான உறவை இலங்கை பேணுகின்றது. இதற்காக புதுடில்லியை அவ்வப்போது பகைத்துக் கொண்டதும் உண்டு.

அமெரிக்க ஆதரவு போக்கை பின்பற்றும் இலங்கை

கொழும்புத்துறைமுக கிழக்கு முனைய அபிருத்தி தொடர்பான உடன்படிக்கையை இலங்கை கைவிட்டமை உள்ளிட்ட பல விவகாரங்களில் இலங்கை சீனச் சார்பை வெளிப்படுத்தினாலும் அமெரிக்க ஆதரவுப் போக்கையே இலங்கை எடுத்திருந்தது.

ஜப்பான், இந்தியா ஆகிய நாடுகளுடன் இணைந்து இலங்கை கொழும்புத்துறைமுக கிழக்கு முனைய அபிருத்தி குறித்த உடன்படிக்கை கைச்சாத்திட்டிருந்தமைக்கு அமெரிக்க ஒத்துழைப்பு இருந்தது. ஆனாலும் கொழும்பு மற்றும் அம்பாந்தோட்டை துறைமுகங்களை அண்மித்த இலங்கைக் கடற்பகுதியில் சீனாவுக்கு முக்கியத்தும் வழங்கப்பட்டிருந்த நிலையில், கொழும்புத் துறைமுக கிழக்கு முனைய அபிவிருத்தியில் இந்தியா பங்களிப்புச் செய்வதை விரும்பவில்லை என்பதை சிங்கள ஆட்சியாளர்கள் வெளிப்படையாகவே காண்பித்திருந்தனர்.

மென்போக்கை கையாளும் இந்தியா

ஆனால் இதுவரையும் இலங்கையோடு இந்தியா மென்போக்கையே கையாண்டு வருகின்றது. 2009 இற்கு முன்னரான காலத்திலும், அதன் பின்னரான சூழலிலும் இலங்கையை இந்தியா செல்லப்பிள்ளையாகவே கையாளுகின்றது. அதேநேரம் அமெரிக்காவும் இந்தியாவைக் கடந்து இலங்கையோடு மிகவும் நேசமான உறவைப் பேணுகின்றது. பாகிஸ்தானோடு அமெரிக்கா முரண்பட்டுக் கொண்டாலும் இந்தியாவை மேலும் தமது பக்கம் ஈர்க்க வேண்டியதொரு சூழல் தோன்றினால் அமெரிக்கா 2004 ஆம் ஆண்டு போன்று மீண்டும் பாகிஸ்தானோடு கூட்டாளி உறவை உருவாக்கலாம்.

இதன் பின்புலத்திலேதான் அக்கியூஸ் ஒப்பந்தத்தை நோக்க வேண்டும். ஆசியாவின் நேட்டோ அணி என்ற புகழாரத்தோடு 2017 இல் மீளப் புதுப்பிக்கப்பட்ட குவாட் அமைப்புக்கு மாற்றீடாக அல்லது அதனையும்விட அணு சக்தியைக் கையாளும் நோக்கில் உருவாக்கப்படட அக்கியூஸ் ஒப்பந்தம், தெற்காசிப் பிராந்தியத்தில் இந்தியாவுக்கு பாதிப்பை அல்லது இந்தியாவின் இராணுவப் பலத்தை மதிப்பிழக்கச் செய்யும் என்ற நோக்கம் அமெரிக்காவுக்கு ஏன் இல்லாமல்போனது என்ற கேள்விகள் உண்டு.

இதுவரையும் இந்தியாவும் அவ்வாறு கேள்வி எழுப்பவில்லை. இந்த ஒப்பந்தத்துக்கு எதிர்ப்பு வெளியிட்ட பிரான்ஸ் அவுஸ்திரேலியாவைத் திட்டியுள்ளது. அமெரிக்க ஏகாதிபத்தியம் என்ற கோணத்திலும் பிரித்தானியாவின் அமைதியான அடக்குமுறை என்ற வர்ணனையோடும் பிரான்ஸ் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுமுள்ளது.

பிரான்ஸுடன் கைகோர்க்கும் இந்தியா

இந்த நிலையில், இந்தோ – பசுபிக் விவகாரங்களில் பிரான்ஸுடன் இந்தியா கைகோர்க்குமென நரேந்திரமோடி சமூகவலைத்தளத்தில் கூறியிருக்கிறார். ஜனாதிபதி மைக்ரோனுடன் தொலைபேசியில் உரையாடிய பின்னர் இந்தப் பதிவை மோடி வெளியிட்டிருக்கிறார். ஆகவே அக்கியூஸ் ஒப்பந்தம் இந்தியாவை ஆத்திரமடையச் செய்துள்ளது என்பதையே அந்த உரையாடல் காண்பிக்கிறது. ஆனாலும் துணிவோடு அக்கியூஸ் ஒப்பந்தத்தை மோடி இதுவரை கண்டிக்கவேயில்லை.

மாறாக நியூயோர்க்கில் இடம்பெற்ற இந்தோ- பசுபிக் விவகாரம் குறித்த குவாட் மாநாட்டிலும் மோடி பங்குபற்றியிருக்கிறார். அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களைக் கொள்வனவு செய்யும் விவகாரத்தில் அவுஸ்திரேலியா பிரான்ஸுடன் ஒப்பந்தம் செய்திருந்த நிலையில், அமெரிக்கா மற்றும் பிரித்தானியாவுடன் சேர்ந்து அவுஸ்திரேலியா அக்கியூஸ் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டதால், அந்த இடத்தை பிரான்ஸுடன் இணைந்து ஏன் இந்தியாவால் நிரப்ப முடியாது என்ற கேள்வியும் உண்டு. அல்லது அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பலைக் கையாளும் தகுதி இந்திய இராணுவத்துக்கு இல்லையா?

உளவுத் தகவல்களைப் பகிர்ந்து கொள்வது, குவாண்டம் தொழில்நுட்பம், குரூஸ் ரக ஏவுகணைகளை வழங்குவது எனப் பல்வேறு அம்சங்கள் இந்த அக்கியூஸ் ஒப்பந்தத்தில் உண்டு. பாதுகாப்புக் கூட்டணியாக இணைந்து செயற்படவுள்ள இந்த மூன்று நாடுகளும் ஒப்பந்தத்தில் உள்ளபடி நகர்வுகளை மேற்கொள்ளவுள்ளன. ஆனால் குவாட் அமைப்பில் அங்கம் வகிக்கும் அவுஸ்திரேலாயாவும் அமெரிக்காவும் இந்த அக்கியூஸ் ஒப்பந்தம் குறித்து குவாட் அங்கத்துவ நாடான ஜப்பானுடன்கூட எதுவுமே உரையாடவில்லை.

தனித்து கால் பதிக்க முற்படும் அமெரிக்கா

ஆகவே இந்தோ- பசுபிக் பிராந்தியத்தில் முதன்மை பெற வேண்டுமெனத் துடிக்கின்ற இந்தியா, ஜப்பான் ஆகிய நாடுகளைவிட இந்தோ- பசுபிக் பிராந்தியத்துக்குத் தொடர்பில்லாத அமெரிக்கா, இந்தியாவை மீறி அவுஸ்திரேலியாவோடு புதிய ஒப்பந்தத்தின் மூலமாக வேறு கோணத்தில் தனித்துக் கால்பதிக்க முற்படுகின்றமை பட்டவர்த்தனமாகியுள்ளது. இதற்கு ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறிய பிரித்தானியாவின் இணக்கம் என்பதுதான் இங்கே பிரதான பேசுபொருளாகும்.

சீன எதிர்ப்பு மற்றும் பிராந்தியப் பாதுகாப்பு என்ற போர்வையில் மேற்கொள்ளப்படும். அமெரிக்க நகர்வுக்குத் தெற்காசிப் பிராந்தியத்தில் ஜப்பான் ஆதரவு வழங்கக்கூடிய வாய்ப்பு இருக்காது. ஆனால் சிறிய நாடான இலங்கை ஆதரவு கொடுக்கக்கூடிய சந்தர்ப்பங்கள் நிறையவே உண்டு.

பாகிஸ்தான் தலிபான்கள் விவகாரத்தில் நடந்து கொள்ளும் முறையைப் பொறுத்தும், பாகிஸ்தான் இராணுவத்துக்கு நிறுத்தப்பட்டுள்ள நிதியுதவி மீண்டும் அமெரிக்காவால் வழங்கப்படுமாக இருந்தால், பாகிஸ்தானும் அக்கியூஸ் ஒப்பந்தம் பற்றிக் கண்டும் காணாமலும் இருக்கலாம்.

இந்தோ – பசுபிக் பிராந்தியங்களில் ஆதிக்கம் செலுத்த முற்படும் அமெரிக்கா

ஆகவே இந்தோ- பசுபிக், தென் சீனக் கடல் பாதுகாப்பு விவகாரம் என்பது, சீனாவை எதிர்கொள்வது என்ற போர்வையில் இந்தப் பிராந்தியங்களில் தமது மேலாதிக்கத்தை நிலை நிறுத்த வேண்டுமென்பதே அமெரிக்காவின் முதன்மை நோக்கமாகும். இதற்குப் பிரித்தானியா. அவுஸ்திரேலிய நாடுகள் மாத்திரமே உண்மையான பங்காளிகளாக இருப்பர் என்ற நம்பிக்கையில் அமெரிக்கா அக்கியுஸ் ஒப்பந்தத்தைத் தயரித்தது என்பது கண்கூடு.

இந்தியா, ஜப்பான், பிரான்ஸ் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம், ஜி-7 மற்றும் நேட்டோ அணிகளோடு பிராந்திய விவகாரங்கள் தொடர்பாக அமெரிக்காவுக்கு ஏற்பட்ட அனுபவம், படிப்பினையாக மாறியதன் விளைவே இந்த அக்கியுஸ் ஒப்பந்தம் என்றும் கூறலாம். குறிப்பாக கடந்த யூலை மாதம் இடம்பெற்ற ஜி-7 மற்றும் நோட்டோ மாநாடுகளில் பிரான்ஸ், வெளியிட்ட அமெரிக்க எதிர்ப்பு மையவாதக் கருத்துகள் ஜோ- பைடனைப் பாதித்திருக்கலாம்.

நிதானமாக காய் நகர்த்தும் அமெரிக்கா

முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் பிழையான நிர்வாகத்தால் ஜி-7, மற்றும் நேட்டோ ஆகிய அமைப்புகளின் செயற்பாடுகள் தற்காலிகப் பின்னடைவை எதிர்நோக்கின என பிரான்ஸ் உள்ளிட்ட ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் அப்போது கருதியிருந்தன.

ஆனால் ஜே-பைடனின் புதிய அமெரிக்க நிர்வாகமும் டொனால்ட் ட்ரம்ப் மேற்கொண்ட அதே அணுகுமுறையை சற்று நிதானமாக முன்னெடுத்து ஐரோப்பிய ஒன்றியம், ஜி-7 மற்றும் நேட்டோ அங்கத்துவ நாடுகளை நோகாமல் தூக்கியெறிகின்ற இராஜதந்திரத்தைக் கையாளுகிறது என்ற சந்தேகத்தை இந்த அக்கியூஸ் ஒப்பந்தம் தற்போது உறுதிப்படுத்தியிருக்கிறது.

அச்சுறுத்தலை உருவாக்கும் அக்கியூஸ் ஒப்பந்தம்

அதேவேளை, அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் ஒன்று பிரமாண்டமான பாதுகாப்புத் திறன்களைக் கொண்டிருக்கும். எனவே அக்கியூஸ் ஒப்பந்தம் பிராந்திய சமநிலையில் தாக்கத்தை ஏற்படுத்துமென ஆஸ்திரேலியப் பாதுகாப்பு நிபுணர் மைக்கேல் பிரிட்ஜ் கூறுகிறார். இவ்வாறான நிலையில், அக்கியூஸ் ஒப்பந்தம் சீனாவை மாத்திரமல்ல, இந்தியா உள்ளிட்ட ஆசியப் பிராந்தியத்துக்கும் 27 நாடுகளை உள்ளடக்கிய ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் அச்சுறுத்தல் என்பதில் ஜயமேயில்லை.

சர்வதேச விவகாரங்களில் பிரான்ஸ் அமெரிக்காவுக்கு தொடர்ந்து ஒத்துழைப்பை வழங்கிவரும் நிலையில், பிராந்திய விவகாரங்களில் தனியாக செல்லும் அமெரிக்க அணுகுமுறையின் மூலம் ஏனைய சர்வதேச செயற்பாடுகளிலும் மாறுதல்கள் அல்லது தற்காலிகத் தொய்வுநிலை உருவாக்கலாம். இந்த இடத்திலேதான் இந்தோ- பசுபிப் பிராந்தியத்தில் தன்னைத் தனித்துவம் மிக்க. சுயமரியாதையுள்ள நாடாக மாற வேண்டிய அவசியம் இந்தியாவுக்கு ஏற்பட்டுள்ளது.

தனித்துவம் மிக்க நாடாக மாற வேண்டிய கட்டாயத்தில் இந்தியா

இதுவரை காலமும் அமெரிக்காவோடு தங்கியிருந்த நிலைமாற வேண்டும். அமெரிக்கா மாத்திரமல்ல வேறெந்த வல்லாதிக்க நாடுகளோடும் இராணுவ ரீதியாகத் தங்கியிருக்காமல், சுயமாகச் செயற்படக்கூடிய அல்லது இந்தியவோடு இணைந்துதான் பயனிக்க வேண்டுமென்ற பலமானதொரு இராணுவ. அரசியல் நிலையை புதுடில்லி உருவாக்க வேண்டும்.

இராணுவ மற்றும் பொருளாதாரத்தில் பலவீனமான மற்றும் அரசியல் ஸ்திரமற்ற சிறிய நாடான இலங்கையை எவ்வாறு கட்டுக்குள் வைத்திருக்க வேண்டுமென்ற புதிய உத்தி ஒன்றையும் புதுடில்லி வகுக்க வேண்டும். 2009 ஆம் ஆண்டுக்குப் பின்னரான சூழலில் இலங்கை எந்தெந்த அடிப்படையில் இந்தியாவைப் புறக்கணித்தது என்ற ஆதாரங்கள் உண்டு.

இலங்கையில் சீன ஆதிக்கத்துக்கு முற்றுப்புள்ளியிடுமா இந்தியா?

ஆகவே ஆக்கியூஸ் ஒப்பந்தத்தின் பின்னரான சூழலில் இந்தோ- பசுபிக்கை மையமாகக் கொண்டு இந்தியா தன்னைப் பலப்படுத்த வேண்டுமானால், முதலில் இலங்கையில் சீன ஆதிக்கத்துக்கு முற்றுப்புள்ளியிட வேண்டும். அப்படி செய்வதென்றால் இலங்கையோடு பலமான ஒப்பந்தம் ஒன்றைச் செய்ய வேண்டும். 1987 ஆம் ஆண்டு கைச்சாத்திடப்பட்ட இந்திய- இலங்கை ஒப்பந்தம் போன்றல்லாது, அந்த ஒப்பந்தத்தின் மூலம் ஈழத் தமிழர்களுக்காக வடக்குக் கிழக்கு இணைந்த சுயாட்சியுடன் கூடிய அரசியல் தீர்வு பரிந்துரைக்கப்பட வேண்டும்.

அப்போதுதான இலங்கையைக் கட்டுப்படுத்த முடியும். ஆனால் 2009 ஆம் ஆண்டு மே மாதத்திற்குப் பின்னரான சூழலில் இந்தியாவைக் கடந்து சுயமாகத் தனித்துச் செயற்பட்டு அமெரிக்கா சீனா என்ற இரட்டை நிலைச் சார்புப் போக்கில் பழகிப்போன இலங்கையை இந்தியா எப்படித் தனது கட்டுக்குள் கொண்டுவர முடியும் என்ற கேள்வியும் உண்டு.

இந்தியாவுக்கு கரி பூசிய இலங்கை

ஏனெனில் இந்திராகாந்தி காலத்தில் இருந்தே இலங்கைக்கு இந்தியா விட்டுக் கொடுத்துள்ளது. சிங்கள ஆட்சியாளர்கள் பலதடைவை புதுடில்லிக்கு முகத்தில் கரிபூசியுமுள்ளனர்.

ஆனாலும் இலங்கையைச் செல்லப்பிள்ளையாகக் கருதியதால், இந்தியாவுக்கு இலங்கையைக் கட்டுப்படுத்துவது என்பது இலகுவானதல்ல. அதுவும் 2009 ஆம் ஆண்டு மே மாதத்திற்குப் பின்னரான சூழலில் கடினமான காரியமே.

எனினும் தற்துணிவுடன் இந்தியா இலங்கையோடு ஒப்பந்தம் ஒன்றைச் செய்தால், இந்தோ- பசுபிக் பாதுகாப்புக்காக இந்தியாவுடன் இணங்கித்தான் செல்ல வேண்டுமென்ற கட்டாயத்தையும்,  அக்கியூஸ் ஒப்பந்தத்தின் மூலம் தனித்துச் செயற்படும் வல்லாதிக்க இராணுவ, அரசியல் போக்கையும் சற்றுத் தணிக்கை செய்யலாம். அதாவது அமெரிக்காவைப் பணியச் செய்யலாம்.

அணிசேராக் கொள்கைக்கு இந்தியா மீளத் திரும்புமா?

இதற்கு பிரான்ஸ், ஜப்பான் போன்ற நாடுகளின் ஒத்துழைப்பை இந்தியா பெறவேண்டும். ரஷியாவுடனும் உறவைப் பேண வேண்டும். நேட்டோ படைகள் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறியமை இந்தோ- பசுபிக், தென் சீனக் கடல் விவகாரங்களில் அமெரிக்காவுக்குக் கூடுதல் கவனம் செலுத்தும் நோக்கமே என்று இக் கட்டுரையாளர் முன்னர் கூறியிருந்தார். அதனையே தற்போது அக்கியூஸ் ஒப்பந்தமும் எடுத்துக்காட்டியுள்ளது.

ஆகவே அணிசேராக் கொள்கைக்கு இந்தியா மீளத் திரும்பியாக வேண்டும். ஆனால் அதற்கான தற்துணிவு மோடிக்கு இருக்கின்றதா? இந்தியக் கொள்கை வகுப்பாளர்கள். தீர்மானம் எடுப்போர் அதற்கு இடமளிப்பார்களா? அதுவும் ஈழத்தமிழர் அரசியல் விடுதலையுடன் கூடிய ஒப்பந்தம் ஒன்றுக்கு.

இந்தியாவின் எச்சரிக்கைக்கு பணியாத சிங்கள ஆட்சியாளர்

காங்கிரஸ் தலைவர் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்டதைக் காரணம்கூறி 1992 ஆம் ஆண்டில் இருந்து ஈழத்தமிழர் விவகாரத்தை இந்திய இராஜதந்திரம் கிடப்பில் போட்டிருக்கிறது. ஆனால்  இலங்கையைத் தமது புவிசார் நலனுக்காக  மாத்திரம் கட்டுக்குள் கொண்டு வருதற்காக  ஈழத்தமிழர் விவகாரத்தைக் கையில் எடுத்து எச்சரிக்கை விடுத்தபோதும், சிங்கள ஆட்சியாளர்கள் அதற்கு அசைந்தபாடில்லை.

இதன் பின்புலத்திலேதான் இன்று இந்தியா எதிர்நோக்கியிருக்கும் புவிசார் அரசியல் மற்றும் இராணுவ நெருக்குவாரங்களையும் நோக்க வேண்டும்.

 

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version