ஆன்மீகம்

திருமணதடை நீக்கும் விரதம்!

Published

on

திருமணதடை நீக்கும் விரதம்!

சித்திரை மாதம் தசமி திதி, ஸ்ரீ வாசவி ஜயந்தியாகக் கொண்டாடப்படுகிறது. அன்னை வாசவி கன்னிகா பரமேஸ்வரி, கலியுகத்தில் அவதரித்த அன்னை ஆதிபராசக்தியின் அம்சம்.

கி.பி 11 -ம் நூற்றாண்டு ஆந்திராவில் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் வாழ்ந்த வணிகர் குலத்தைச் சேர்ந்த தம்பதியான குஸ்ம ஸ்ரேஷ்டி – குஸ்மாம்பா தம்பதி நீண்ட நாள்கள் புத்திர பாக்கியம் இல்லாமல் புத்திர காமேஷ்டி யாகம் செய்து அன்னையை வேண்டினர். அவர்களின் பக்திக்கு இரங்கிய அன்னை, அவர்களுக்குத் தானே மகளாக வந்து பிறந்தாள்.

பிறந்த கணத்தில் அன்னை பெற்றோருக்கு நான்கு கரங்களோடு காட்சி கொடுத்து, தான் இறைவடிவம் என்பதை உணர்த்தி அடுத்த கணம் சாதாரண மழலை ஆனாள்.

தெய்வமே தனக்கு மகளானது கண்டு மகிழ்வுற்று அவளைச் சீரோடும் சிறப்போடும் வளர்த்து வந்தனர். அன்னை அழகிலும் அறிவிலும் செழித்து வளர்ந்தாள்.

அவள் அழகுகண்டு அவளைப் பெண்கேட்டு அனுப்பினான் விஷ்ணுவர்த்தன் என்னும் மன்னன். ஆனால் கன்னிகா தேவி, தான் காலம் முழுதும் சிவபூஜை செய்யவே விரும்புவதாகவும், யாருக்கும் மனைவியாக இருக்க முடியாது என்றும் சொல்லி மறுத்தாள்.

அதைக் கேள்விப்பட்ட விஷ்ணுவர்த்தன் அவளையும் அவள் ஊரையும் அழித்துவிடுவதாகப் படையெடுத்துவந்தான். அப்போது ஊரில் உள்ளோர் கூடிப் பேசினர்.

ஒரு பெண்ணுக்காக ஊரே ஏன் அழிய வேண்டும் என்று 600க்கும் மேற்பட்ட கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள் ஊரைவிட்டு வெளியேறிப் போயினர். ஆனால் கன்னிகா தேவியோடு எஞ்சியிருந்த மக்கள் துணை நின்றனர்.

அன்னை அப்போது தான் யார் என்பதை விளக்கித் தன் முடிவுக்குக் கட்டுப்படுபவர்கள் என்னோடு வானுலுகம் புகலாம் என்றாள். மேலும், ‘என்னைத் தெய்வமாக ஏற்ற மக்களுக்குக் கலியுகம் முடியும்வரை தான் துணை நின்று காத்தருள்வேன்’ என்று வாக்குக் கொடுத்தாள்.

அன்னையின் முடிவை ஏற்பதாக 102 கோத்திரத்தினர் உடன்பட்டனர். மற்றவர்களை அன்னை ஆசீர்வதித்து, உலகில் வாழும் போது கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகளை விளக்கினாள். பின்பு அக்னி குண்டம் எழுப்பி அதில் அன்னை இறங்கி மறைந்தாள். அன்னையின் பின் மற்ற 102 கோத்திரத்தில் குழந்தைகள் வயோதிகர்கள் தவிர அனைவரும் அக்னிகுண்டத்தில் இறங்கித் தீத் தீண்டாது மறைந்தனர்.

அந்தக் கணத்தில் அன்னையை அபகரிக்கப் படையெடுத்துவந்த விஷ்ணுவர்த்தனின் தலை வெடித்துச் சிதறியது. இதைக் கண்ட மன்னனின் படைகள் சிதறி ஓடின. அவன் நாட்டில் பல துர் சகுனங்கள் நிகழ்ந்தன.

இதற்கெல்லாம் காரணம் வாசவி அன்னையின் கோபமே என்று உணர்ந்த விஷ்ணுவர்த்தனின் மகனான ராஜராஜ நரேந்திரன் அன்னை வாசவியின் சகோதரனான விருபாட்சனை அணுகி மன்னிப்புக் கோரினான். அன்னைக்கு ஓர் ஆலயம் எழுப்பி வழிபடுவதாகக் கூறி அவ்வாறே ஒரு கோயிலையும் எழுப்பினான். வணிகர் குலம் முழுமையும் அன்னையைக் குலதெய்வமாகக் கொண்டு வழிபடத் தொடங்கினர்.

அன்னை அவதரித்த சித்திரை வளர்பிறை தசமி திதியை அன்னையின் ஜெயந்தி தினமாகச் சிறப்போடு கொண்டாடி வருகின்றனர். அன்னை கன்னிகா பரமேஸ்வரியின் வழிபாடு காலப்போக்கில் நாடெங்கும் பரவியது. தமிழகத்தில் பல்வேறு தலங்களில் அன்னை கன்னிகா பரமேஸ்வரிக்கு ஆலயங்கள் உள்ளன.

அன்னையை வழிபட்டால் சத்ரு பயம் நீங்கும் என்றும் வேண்டும் செல்வம் சேரும் என்பதும் நம்பிக்கை. திருமணமாகாத பெண்கள் கன்னிகா பரமேஸ்வரியை மனதில் நினைத்து விரதம் இருந்து 48 நாள்கள் தியானித்தால் அன்னை மனம் மகிழ்ந்து அவர்களுக்குத் திருமண வரம் அருள்வாள் என்பது ஐதிகம்.

#Spirituality

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version