ஆன்மீகம்

ஞாயிறு விரதமும் அதற்கான பலன்களும்

Published

on

ஞாயிறு விரதம்” அல்லது “சூரிய விரதம்” இருக்க விரும்புவர்கள் எல்லா காலங்களிலும் இவ்விரதத்தை மேற்கொள்ளலாம் என்றாலும் “ஐப்பசி” மாத வளர்பிறை ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த விரதத்தை அனுஷ்டிப்பது மிகவும் சிறப்பானதாகும்.

இந்த ஞாயிறு விரதத்தை எந்த ஒரு மாதத்திலும் வளர்பிறை ஞாயிற்றுக்கிழமையில் அதிகாலையிலேயே எழுந்து குளித்து முடித்து விட்டு, சூரியன் உதிக்கின்ற காலை வேளையில் சூரியனை தரிசித்தவாறே, அவருக்குரிய மந்திரங்களை துதித்து வழிபட வேண்டும்.

பின்பு நவகிரக சந்நிதிக்கு சென்று சூரிய பகவானுக்கு செந்தாமரை பூவை சமர்ப்பித்து, கோதுமை தானியங்கள் சிறிதளவு வைத்து, நெய் தீபங்கள் ஏற்றி, வாசனை மிக்க தூபங்கள் கொளுத்தி, கோதுமை கொண்டு செய்யப்பட்ட இனிப்பு உணவுகளை நைவேத்தியமாக வைத்து சூரிய பகவானின் காயத்ரி மந்திரங்கள், பீஜ மந்திரங்கள் போன்றவற்றை 108 எண்ணிக்கை அல்லது 1008 எண்ணிக்கையில் துதித்து வழிபட வேண்டும்.

இந்த விரதம் இருப்பவர்கள் அந்த ஞாயிற்றுக்கிழமை முழுவதும் திடஉணவு சாப்பிடாமல் நோன்பிருந்து மறுநாள் காலையில் சூரிய தரிசனம் செய்த பின்பு, சூரிய பகவானுக்கு வீட்டிலேயே ஒரு செம்பு பாத்திரத்தில் சிறிது நீர் நிவேதனமாக அளித்த பின்பே விரதத்தை முடிக்க வேண்டும். உணவு சாப்பிட வேண்டிய நிலையிலிருப்பவர்கள் நீராகாரம், பழச்சாறுகள் போன்றவற்றை அருந்தி விரதமிருக்கலாம்.

சூரிய விரதம் மேற்கொள்ளும் நபர்களுக்கு உடலாரோக்கியம் மேம்படும். கொடிய நோய்கள் ஏதும் அண்டாது. முகத்தில் ஒரு வசீகரம் உண்டாகும். சமூகத்தில் பிறர் மதிக்கின்ற சூழ்நிலை ஏற்படும். தந்தையின் உடல்நலம் மேம்பட்டு அவரின் ஆயுள் நீடிக்கும். பொருளாதார வளர்ச்சி உண்டாகும். துஷ்ட சக்திகள், செய்வினை மாந்திரிகம் போன்றவை சூரிய விரதம் இருப்பவர்களை அண்டாது.

#Anmigam

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version