ஏனையவை

கடந்த கால அரசுகள் போன்றே தேசிய மக்கள் சக்தியும் செயற்படுகின்றது: சாணக்கியன் குற்றச்சாட்டு

Published

on

கடந்த கால அரசுகள் கட்சி சார்ந்த அரசியலை முன்னெடுத்தது போன்று தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசும் செயற்படுவதை அவதானிக்க முடிகின்றது. இது ஆரோக்கியமான விடயம் அல்ல என்று நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன்(R.Shanakiyan) தெரிவித்துள்ளார்.

நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

“புதிய அரசாங்கம் புதிய அரசியலமைப்பு ஒன்றை உருவாக்கும் செயற்பாட்டினை இன்னும் ஆரம்பிக்கவில்லை. 2015ஆம் ஆண்டு தொடக்கம் 2018ஆம் ஆண்டு வரையில் முன்னெடுக்கப்பட்ட அரசியல் வரைவில் தாங்கள் இணங்கிய விடயங்களைக்கொண்டு புதிய அரசியலமைப்பினை உருவாக்குவதாக ஜனாதிபதி தெரிவித்திருந்தாலும் கூட தற்போது அவர்கள் என்ன மனநிலையிலிருக்கின்றார்கள் என்பது தெரியாத நிலையே இருக்கின்றது.

அந்தவகையில் தமிழரசுக்கட்சியின் மத்திய குழுவில் அரசாங்கத்திற்கு புதிய அரசியலமைப்பினை விரைவுபடுத்துவதற்கு பாரிய அழுத்தங்களை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டது.

அரசியலமைப்பு எவ்வாறு அமையவேண்டும் என்பதில் இலங்கை தமிழரசுக்கட்சி 75 வருடமாக பல முன்னெடுப்புகளை முன்னெடுத்து வந்துள்ளது. அதேபோல் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பாக ஏற்கனவே வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டு தேர்தல் நடைபெறாமலிருக்கின்றது.

இதனால் அரச ஊழியர்களாக இருந்த பலர் பல கஷ்டங்களுக்கு முகங்கொடுத்தார்கள். ஒழுக்காற்று விசாரணைகளை தொடர்ந்து முன்னெடுப்பது தொடர்பில் பேசப்பட்டது.

சிலருக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டது தொடர்பில் சிலருக்கு இருந்த சந்தேகங்கள் தொடர்பிலும் பூரணமான பதில்கள் வழங்கப்பட்டன.

தமிழரசுக்கட்சி ஓரு ஆரோக்கியமான பாதையில் செல்கின்றது.சிலருக்கு விருப்பம் இல்லாமல் இருக்கலாம். ஜனாதிபதி அவர்கள் ஒரு விடயத்தினை மனதில்கொள்ளவேண்டும் அவர் தற்போது இந்த நாட்டின் ஜனாதிபதியாக இருக்கின்றார். அவர் கடந்த காலத்தினைப்போல் நாட்டில் உள்ள பிரச்சினைகளை மேடையில் வந்து பேசிவிட்டுச் செல்வது மட்டும் போதாது.

நேற்று 73 ஆயுதங்கள் இராணுவத்திடமிருந்து களவுசென்றுள்ளதாக கூறியிருக்கின்றார். களவுசென்றால் அதற்கு நடவடிக்கையெடுக்கவேண்டும். இதுபோலவே கடந்த காலத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஊழல்செய்த அதிகாரிகளுக்கு மேலும் பதவி உயர்வுகள் இந்த அரசாங்கத்தில் வழங்கப்படுகின்றது.

பிள்ளையான் காணிகளை அபகரிப்பு செய்ய உதவிய பிரதேச செயலாளர்களுக்கு பதவி உயர்வுகள் எல்லாம் வழங்கப்படப்போவதாக அறிகின்றோம்.ஜனாதிபதி அவர்கள் ஜனாதிபதியாக செயற்பட்டு இந்த விடயங்களுக்கு சிறந்த முடிவுகளை வழங்கவேண்டும்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள சில ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ள அதிகாரிகள் தேசிய மக்கள் சக்தியின் ஆதரவாளர்கள் என்று கூறிக்கொண்டு பதவி உயர்வுகளும் தங்களது இருப்புகளை பாதுகாப்பதற்கான செயற்பாடுகளை அவதானிக்கமுடிகின்றது.

இந்த வாரத்தில் நாடாளுமன்றத்தில் இது தொடர்பில் எனது கடுமையாக பேசவுள்ளதுடன் ஜனாதிபதியை சந்தித்தும் இது தொடர்பில் பேசவுள்ளேன்.

கடந்த கால அரசுகள் கட்சிசார்ந்த அரசியலை முன்னெடுத்ததுபோன்று தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசும் செயற்படுவதை அவதானிக்கமுடிகின்றது.இது ஆரோக்கியமான விடயம் அல்ல.அனைத்து கட்சிகளும் இணைந்து இந்த நாட்டினை கட்டியெழுப்பவேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version