ஏனையவை

தேசியப் பட்டியலுக்கு பொருத்தமானவர் நானே : ஹிருணிகா பகிரங்கம்

Published

on

தேசியப் பட்டியலுக்கு பொருத்தமானவர் நானே : ஹிருணிகா பகிரங்கம்

ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) எஞ்சியுள்ள 4 தேசியப்பட்டியல் ஆசனங்களில் ஒன்று பெண்ணொருவருக்கு வழங்கப்படும் என்றும் அவ்வாறான ஒரு தீர்மானம் எடுக்கப்பட்டால் அதற்கு நானே பொருத்தமானவராக இருப்பேன் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர (Hirunika Premachandra) தெரிவித்துள்ளார்.

கொழும்பில் (Colombo) நேற்று (20) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், ”ஐக்கிய மக்கள் சக்தி தேசியப்பட்டியலுக்காக எனது பெயர் பல தரப்பினரால் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. எனினும் இந்த விவகாரம் செயற்குழுவில் கலந்துரையாடல் மட்டத்திலேயே காணப்படுகிறது.

எவ்வாறிருப்பினும் எஞ்சியுள்ள 4 ஆசனங்களில் பெண்னொருவருக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று நான் நம்புகின்றேன். கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவை (Sajith Premadasa) நான் முழுமையாக நம்புகின்றேன். அதேபோன்று அவரும் என்னை முழுமையாக நம்புகின்றார் என்பதை நான் அறிவேன்.

காரணம் கிராம மட்டங்களிலிருந்து சகல பகுதிகளிலும் அவருக்காக அர்ப்பணிப்புடன் பிரசாரங்களை முன்னெடுத்திருக்கின்றேன். எனவே தேசிய பட்டியலில் ஒரு ஆசனம் பெண்ணொருவருக்கு கிடைக்கும் எனில் அதற்கு நான் தகுதியானவள் என்று நம்புகின்றேன்.

ஐக்கிய மக்கள் சக்தி என்பது எந்தவொரு தீர்மானத்தையும் ஒருமித்து எடுக்கும் ஜனநாயகக் கட்சியாகும். அந்த வகையில் சஜித் பிரேமதாசவின் தலைமைத்துவத்தின் கீழ் தொடர்ந்தும் பயணிக்க வேண்டும் என்பதே எமது தீர்மானமாகும்.

எந்தவொரு கட்சிக்கும் தோல்வி என்பது வழமையானதொரு விடயமாகும். முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) 1994ஆம் ஆண்டிலிருந்து இன்று வரை தோல்வியடைந்த ஒரு தலைவராகவே காணப்படுகிறார். ஆனால் ஐக்கிய தேசிய கட்சியில் அவரது தலைமைத்துவம் மாற்றமடையவில்லை.

அதேபோன்று அநுரகுமார திசாநாயக்கவும் (Anura Kumara Dissanayake) அரசியலுக்குள் பிரவேசித்த நாள் முதல் தோல்வியடைந்த தலைவராகவே இருந்தார். ஆனால் இன்று அவர் மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ளார்.

ஆனால் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவராக சஜித் பிரேமதாச பொறுப்பேற்று 4 ஆண்டுகள் மாத்திரமே நிறைவடைந்துள்ளன. இரு தேர்தல்களில் நாம் தோல்வியடைந்துள்ள போதிலும், பெற்றுக் கொண்ட பல வெற்றிகள் உள்ளன.

ஆளுங்கட்சியை விமர்சிப்பதை மாத்திரமே எமது பணியாகக் கொண்டிருக்காமல் இலங்கை வரலாற்றில் முதன்முறையாக அபிவிருத்திக்கு உதவிய ஒரே எதிர்க்கட்சி தலைவராக சஜித் விளங்குகின்றார் “ என தெரிவித்தார்.

Exit mobile version